ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார். புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார். பேப்பர் கடைகளில் எப்போது வருகிறது என்று பார்த்து வாங்கி வந்து விடுவார். தீபாவளி மலர்களையும் அப்படி வாங்கிப் படித்திருக்கிறார்.
இந்தப் பேப்பர் கடைகளில் பழையப் புத்தகங்களும் கிடைக்கும். ஐராவதம் இதுமாதிரி பேப்பர் கடைகளில் வீசி எறியப்படும் புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கிவிடுவார். எனக்கும் அவர் மாதிரி ஒரு பித்து. பேப்பர் கடைகளில் என்ன புத்தகம் கண்ணில் படுகிறது என்று பார்ப்பேன்.
பேப்பர் கடைகளில் புத்தகங்களை விலைக்குப் போடுபவர்களை நான் உயர்வாகவே நினைக்க மாட்டேன். ஏன்என்றால் ஒரு பேப்பர் கடையில் புத்தகங்களை விலைக்குப் போட்டால் ஒரு கிலோவிற்கு ரூ8 தான் பணம் கிடைக்கும். ஆனால் ஒரு கிலோ புத்தகம் என்பது நாலைந்து புத்தகங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும். என்னைப் போன்றவர்கள் திரும்பவும் அந்தப் புத்தகங்களை வாங்கச் சென்றால், பேப்பர் கடைக்காரர் ஒரு கிலோவிற்கு ரூ.100 என்று கொடுப்பார்கள். அல்லது புத்தகத்தின் பாதி விலையைக் கேட்பார்கள். இப்படி அந்நியாயக் கொள்ளை இந்தப் பேப்பர் கடைகளில் நடக்கின்றன. புத்தகம் வைத்திருப்பவர்கள் இப்படி புத்தகங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றுதான் பேப்பர் கடைகளில் புத்தகங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம். அவர்களிடம் புத்தகம் இருக்க வேண்டாமென்று நினைத்தால் ஏதாவது நூல் நிலையத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம். அல்லது யாராவது உங்கள் நண்பர்கள் புத்தகங்களைப் படிக்கும் புழுக்களாக இருந்தால், அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு புத்தகங்களைப் படித்துவிட்டு திருப்பியே தரமாட்டார்கள். நீங்களும் மறந்து விடுவீர்கள். பெரும்பாலான நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஏன் நீங்களும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.
இன்று காலை கோவிந்தன் ரோடில் உள்ள ஒரு பேப்பர் கடைக்குச் சென்றேன். அங்கு அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன். அதில் ஒரு புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் : கெட்டவன் கேட்டது. இந்தப் புத்தகத்தை வெளியிட்டது நான்தான். என் புத்தகமே எப்படி பேப்பர் கடைக்கு வந்தது என்ற திகைப்பு. மேலும் அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுதியவர் சாட்சாத் ஐராவதம் அவர்கள். 19 சிறுகதைகளைக் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை ரூ.130 தான். வெளியான ஆண்டு 2012. யார் இதை பேப்பர் கடையில் போட்டிருப்பார்கள். இலவசமாக நான் யாரிடமாவது படிக்கக் கொடுத்தப் புத்தகமா அல்லது என்னிடம் விலைக்கு வாங்கிய புத்தகமா? அந்த நபர் யார் யார் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஐரனி என்னவென்றால் பேப்பர் கடையில் பழையப் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் ஐராவதத்தின் புத்தகமும் பேப்பர் கடையில் இருப்பதுதான்.
கநாசு அப்படித்தான் அவர் வெளியிட்ட ஒரு நாவல் புத்தகம் விற்பனை ஆகாமல் இருந்ததாம். மாமனார் வீட்டு பரண் மீது இருந்ததாம். அந்தப் புத்தகக் கட்டுகளை பழைய பேப்பர் கடையில் போட்டுவிட்டாராம் க நா சு. இது உண்மையான தகவலா? எழுத்து பழைய இதழ்களை சி சு செல்லப்பாவும், அவர் புதல்வர் மணியும் பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார்களாம்.
இதைப் படிப்பவருக்கு நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பேப்பர் கடையில் கிலோ எட்டு ரூபாய் என்று நூற்றுக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் புத்தகங்கûள் போட்டு விடாதீர்கள். தயவுசெய்து உங்கள் ஏரியாவில் இருக்கும் லைப்ரரிக்குப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்.