உனக்காக ஒளித்து வைத்தேன்
ஒரு செல்வன், தன் தந்தைக்கு ஓட்டிலே கஞ்சி வார்த்துக்கொண்டு வந்தான். அவன் மகன் அதைப் பார்த்தான். ஒருநாள் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்துவிட்டான். பிறகு அந்தச் செல்வன் தன் தந்தையைப் பார்த்து, ‘ஓடு எங்கே,’ என்று கேட்டு தந்தையை அடித்தான். அந்தப் பையன் அதைக் கண்டான்: “அப்பா என் பாட்டனை அடிக்காதே.. நானே அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்தேன். ஏன் என்றால், நான் பெரியவன் ஆன பிறகு உனக்கு வேற ஓடு சம்பாதிக்க மாட்டேன்,” என்றான். அதைக் கேட்டு அச் செல்வன், வெட்கப்பட்டான். மனம் திருந்தினான். அன்று முதல் தன் தந்தையை மிக அன்புடன் பேணி நலத்துடன் போற்றி வந்தான்.