அழகியசிங்கர்
1. யார் வருவார்கள் ஆட்சி அமைக்க?
தெரியாது
2. அரசியல் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதாக இருந்தால்..
சமஸ் அவர்களுக்குப் போட்டியாக எழுத விரும்பவில்லை.
3. ஊழல் இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்க முடியுமா?
பார்க்க முடியாது. ஆனால் யாருக்கும் தெரியாமல் எப்படி ஊழல் செய்வது என்பதை ஒரு சில அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு கலை.
4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?
அசோகமித்திரனை. சமீபத்தில் அவருடைய பேட்டி விகடன் தடத்தில் வந்துள்ளது. நான் பத்திரப்படுத்தி எப்போதும் படிக்க விரும்புகிறேன்.
5. எந்த எழுத்தாளரின் வேகம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது?
எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா..
6. எந்தப் புத்தகம் இப்போது படிக்கிறீர்கள்?
சர்க்கரை நோயுடன் வாழ்வது எப்படி? என்ற புத்தகத்தைப் படிக்கிறேன். நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம்.
7. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் எது?
அப்பா படுத்திருந்த அறை. அங்கு போகவே என்னால் முடியவில்லை. தனியாக இரவு நேரத்தில் இருக்கும்போது எல்லா இடங்களிலும் விளக்குகளைப் போட்டுவிட்டுத்தான் தூங்குகிறேன்.
8. உங்கள் புத்தகங்களை விற்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?
கவலைப்படமாட்டேன். நான் இருக்கும் மாம்பலம் பகுதியில் நிறைய பேப்பர் கடைகள் இருக்கின்றன. திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலும் சில கடைக்காரர்களைப் பார்த்து விற்க புத்தகங்களைக் கொடுக்கலாம் என்றும் யோசிக்கிறேன்.
9. உங்களுக்கு இலக்கிய விருது கிடைப்பதாக கனவு கண்டேன்.
விபரீத கனவு
10. புத்தகம் படிப்பது எளிதானதா? புத்தகம் எழுதுவது எளிதானதா?
இரண்டும் எளிதானதல்ல.
11. நொண்டி அடிப்பது உங்களுக்குப் பிடிக்குமே..
சின்ன வயதில் நொண்டி அடிக்கும்போது இரண்டு கைகளையும் அகல விரித்து எல்லோரையும் பிடித்து விடுவேன். இப்போது அதுமாதிரி நொண்டி அடிக்க முடியவில்லை.
12. ஒரு பஸ்ûஸப் பிடித்து எங்காவது போக வேண்டுமென்றால் எங்கே போவீர்கள்..
திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டுகளில் உட்காரப் போவேன்.
13. மின்சார வண்டியில் போவது என்றால்
திரிசூலம் ரயில் நிலையத்திற்குப் போய் நண்பர்கள் சிலரைக் கூப்பிட்டு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கவிதைகள் வாசிக்கச் சொல்வேன்.
14. சமீபத்தில் உங்கள் பதிப்பகம் மூலம் கொண்டு வந்த புத்தகத்தில் எது உங்களைக் கவர்ந்தது.
ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்.