சில கவிதைகள் சில குறிப்புகள்

அழகியசிங்கர்
புத்தகக் காட்சியில் 600வது விருட்சம் அரங்கில் சில கவிதைப் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறேன். அவற்றிலிருந்து சில கவிதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

1. பழனிவேள்ளின் கஞ்சா

11
மழை பெய்யட்டும்
வெயில் கொளுத்தட்டும்
காற்று வீசட்டும்
குளிர் வாட்டட்டும்

மனம் இருக்கிறது இலைபோலக் காய்ந்து
ஆற்றுப்படத்தும் சக்தி இருக்கிறது பெருக்க
எல்லாமே நம்வசம்

(கஞ்சா – பழனிவேள் – ஆலன் பதிப்பகம், விலை ரூ.100)

2. பேயோனின் வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை

துயர்

அழுகிறேன்
அழுவதை உணர்கிறேன்
உணர்வதைப் பார்க்கிறேன்
பார்ப்பதை நினைக்கிறேன்
நினைப்பதை உணர்கிறேன்
உணர்வதைப் பார்க்கிறேன்
பார்ப்பதை நினைக்கிறேன்
அழுவதை மறக்கிறேன்.

(வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை – பேயோன் – சஹானா வெளியீடு – விலை : ரூ200)

3. பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள்

உடைமை

என் லேப்டாப்பில் அமர்கிறது
குட்டிப் பூச்சி
ஒரு கீ-யின் பாதிகூட இல்லை
எல் லிருந்து ஓ வுக்கு
நடக்கிறதா தத்துகிறதா
அதற்காவது தெரியுமா
குந்துமணிக் கண்
முழித்துப் பார்க்கிறது
அதன் பார்வையில்
நான் பொருட்டேயில்லை
என் விரல்நுனியில்
ஒரு நொடி பட்டுத் தாவுகிறது
இந்த உலகமே
அதனுடையதாக நகர்கிறது
நான்தான்
எங்கிருந்தோ வந்து
குந்தியிருக்கிறேன்
(வாயாடிக் கவிதைகள் – பெருந்தேவி – விலை ரூ.100)

4. ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்

சிரிப்பு

எத்தனை நேரம்தான்
நீடிக்கும் சொல்லுங்கள் ஒரு
விற்பனைப் பெண்ணின்
சிரிப்பு.

(இம்பர் உலகம் – ஞானக்கூத்தன் – விலை : ரூ.100)

5. அழகியசிங்கரின் வினோதமான பறவை

உறவு

தினமும்
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நீங்களே சொல்லுங்கள்
யாரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்று
யாரையும் நினைத்துக்கொள்வில்லை
சும்மா சொன்னேன்
அதேபோல்
என்னையும் யாரும் நினைத்தக்கொள்ளவில்லை
உலகில் ஒழுங்கு தப்பி விட்டது
என்னிடமும் தப்பி விட்டது
எல்லோரிடமும் தப்பி விட்டது
உறவுமுறைகள் தாறுமாறாய் போய்விட்டன

(வினோதமான பறவை – அழகியசிங்கர் – விலை ரூ.80)

இன்று புத்தகக் காட்சியில் விருட்சம் 600வது ஸ்டாலில் மாலை 6 மணிக்குக் கவிதையைக் குறித்து உரையாடல் நடக்கிறது. அவசியம் கலந்து கொள்ளவும்.

விருட்சம் வெளியீடு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன