அழகியசிங்கர்
இந்த முறை 40வது புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டால் எண் 600. முதன் முறையாக எளிதில் மறக்க முடியாத எண் கிடைத்துள்ளது. திடீரென்று யாராவது உங்கள் கடை எண் என்ன என்று கேட்டால் 600 என்று சொல்லிவிடுவேன். இது மாதிரியான எண் கிடைத்ததற்கு கடவுளின் கிருபை என்றுதான் நினைக்கிறேன். என் கடையில் புத்தகமே விற்கவில்லை. யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்று புலம்புவதை விட்டு, என் கடை எண்ணை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் விருட்சம் கடை எண் என்ன என்று யாராவது கேட்டால் திருதிருவென்று விழிப்பேன். அல்லது தப்பாக எதாவது சொல்லி விடுவேன். ஆனாலும் அப்படி சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. கடை எண்ணை கேட்பவர்கள் எல்லோரும் என் கடைக்கு வந்தும் விட மாட்டார்கள்.
பல ஆண்டுகளாக இந்தப் புத்தகக் காட்சியுடன் தொடர்பு கொண்டுள்ளேன். அளவு குறைவாக புத்தகங்கள் போட்டு அளவு குறைவாகத்தான் விற்பனை செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புத்தகக் காட்சி பல அனுபவங்களை எனக்குக் கற்றுத் தராமல் இல்லை.
ஆனால் அதற்கு நான் செய்யும் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே தாங்க முடியாது யாராலும். கடைக்கு யாராவது வந்தால் அவர்களை புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவேன். சிலசமயம் புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்துவேன். சில சமயம் ஒன்றும் தோன்றாமல் பிரமைப் பிடித்தாற்போல் உட்கார்ந்திருப்பேன். புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்கு வந்தால் போதும் அப்பாடா என்று இருக்கும். இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் என்பதால், பலமுறை சுற்றி சுற்றி வர வேண்டும்.
எனக்கு கிருபானந்தம் என்ற நண்பர் ஒன்றை சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதாவது தோசை. ஒரு சாதா தேசையை மட்டும் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தை ஓட்டிவிடுவார்.
இந்த முறை கிருபானந்தனுடன், பிரபு மயிலாடுதுறை என்ற நண்பரும் வந்து உதவி செய்வதாக சொல்லி உள்ளார்கள். அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம்தான் நான் புத்தகக் காட்கியில் இருக்க வேண்டுமாம்.
இந்த முறை யாரிடமும் பணம் இருக்கப் போவதில்லை. கார்டை தீட்டப் போகிறார்கள். நான் கார்டைத் தீட்டுகிற மெஷினை வாங்குவதற்கு கடந்த 2 வாரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் விடா முயற்சியில் வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.
பணம் தீட்டற மெஷின் கிடைக்கவில்லை என்றால் புத்தகக் காட்சி ஒருவிதமாக மாறிவிடும். எல்லோரும் பார்த்துவிட்டு பார்த்துவிட்டுப் போவார்கள். யாரும் ஒன்றும் வாங்க மாட்டார்கள்.
இந்தப் புத்தகக் காட்சியில் நான் அதிகமாக கவிதை நூல்களாகக் கொண்டு வந்துள்ளேன். நான் ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப் படுத்த விரும்புகிறேன். ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் என்ற புத்தகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.
ஞானக்கூத்தன் போன ஆண்டு ஜனவரி மாதம் என்னிடம் அவருடைய டைரியில் எழுதிய கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர கொடுத்தார். அப்போது என்னால் முடியவில்லை. டிடிபி பண்ணுகிறவரிடம் கொடுத்தேன். அவரால் ஞானக்கூத்தன் கையெழுத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது.
அப்போது ஜøன் மாதம் நடந்த புத்தகக் காட்சியின் (39வது) போது அவருடைய கவிதைத் தொகுதியைக் கொண்டு வர முடியவில்லை. அவருக்கு வருத்தம். அப்போது நான், üகொஞ்சம் அவசரப் படாதீர்கள். வரும் ஜனவரி 2017ல் கொண்டு வந்து விடுகிறேன்,ý என்றேன். அவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அவர் இறந்து விடுவார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இத் தொகுதியில் மொத்தம் 130 கவிதைகள் எழுதி உள்ளார். 182 பக்கங்களில் இத் தொகுப்பு வந்துள்ளது. இதன் விலை ரூ.170.
இத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கு தரலாமென்று நினைக்கிறேன்.
யார் கை?
நான்கா? எட்டா? பன்னிரண்டா?
கடவுளுக்குக் கைகள் எத்தனை உண்டு.
எத்தனைக் கைகள்
கடவுளுக்கு இருந்தாலும்
அவற்றில் இரண்டு
மனிதா
உன்னுடையவைதாம்.
ü
சுசீலாவும் பிறரும்
மௌனியும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசிலாவைப் பார்ப்பார்கள்.
நகுலனும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்
மௌனியும் நகுலனும்
தெருவில் நடந்தால்
சுசீலா ஏன் வரவில்லை எ;னறு
மக்கள் தெருவில் தேடுவார்கள்
சுசீலாவும் தோழியும்
தெருவில் நடந்தால்
மௌனியும் நகுலனும்
வரவில்லை என்று
மக்கள் மகிழ்வார்கள்
நானும் சுசீலாவும்
தெருவில் நடந்தால் மக்கள்
என்னையே பார்ப்பார்கள்
எப்படி இவளை இவன்
பிடித்தான் என்று.
எனக்குத் தெரியும் இந்தக் கவிதைகளைப் படித்தப்பின் இந்தப் புத்தகம் வாங்கவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டால், புத்தகம் கிடைக்க வழி சொல்வேன். என் தொலைபேசி எண்கள் : 9444113205, 9176613205.