மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 46

அழகியசிங்கர்  

கிளிக்கதை


ப கல்பனா




கிளிக்கதை கேட்டான் குழந்தை
சொன்னேன்

எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்தது
தளிர் போல் மென்மையாய்ü

சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சில நேரங்களில் பேசும்

வீடு திரும்பும்போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியிலமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக் கொத்திக் கிழிக்கும்

இடது ஆள்காட்டி விரலில் சுமந்து
வலக்கையில்
வாழைப்பழத்துடன் திரிவான் கடைக்குட்டி

எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு

தங்களுடனேயே இருக்கட்டுமென்று
சிறகு கத்திரித்து
அழகு பார்ப்பர் மாதமொரு முறை

தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய்க் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித்தடுக்கி விழுவதை

“அச்சச்சோ….கடைசியில் என்னவாயிற்று?”
பதறினாள் குழந்தை

“எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிர்ஷ்ட நாளில்
பூனை பிடித்துக்கொண்டு போனது

பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது”

நன்றி : பார்வையிலிருந்து சொல்லுக்கு – கவிதைகள் – ப கல்பனா – காலக்குறி பதிப்பகம், 18, 2வது தெரு, அழகிரிநகர், வடபழனி, சென்னை 600 026 – பக் : 80 – விலை : ரூ.25 – வெளியான ஆண்டு : டிசம்பர் 1998 

“மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 46” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன