மறு பரிசீலனை
தபசி
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
மறுநாள் காலை
தலையை வலிக்கிறது.
நண்பர்களோடு குடித்தால்
காசு செலவாகிறது
தனியாகக் குடித்தால்
பழக்கமாகிவிடும் என்கிறார்கள்
காதலிக்கத் தொடங்கும்போது..
கல்யாணம் கூடி வரும்போது..
பிறந்தநாள் இரவன்று..
டிரான்ஸ்ஃபர் ஆகும்போது…
எத்தனை வாய்ப்புகள்
குடிப்பதற்கு.
கள்ளும் சாராயமும்ü
செரிமானத்தைக் குறைக்குமாம்.
பீர் குடித்தால்
தொப்பை விழுமாம்.
ஜின்னுடன்
இளநீர் கலக்க வேண்டும்
என்கிறார்கள்
பிராந்தி, விஸ்கிக்கு
கோலா, பெப்ஸிக்குப் பதில்
தண்ணீர்தான் உசிதமாம்.
குடிக்கும்போது
நொறுக்குத் தீனி வேண்டாம்
என்கிறார்கள்
முறுக்கு, காராபூந்தி, பகோடா இத்யாதி..
வெங்காயம், தக்காளி, வெள்ளரிü
குடலுக்கு நல்லதாம்
எச்சரிக்கை உணர்வு
எல்லாவற்றிலும் அவசியம்தான்
எங்கு குடிக்க வேண்டும்
எப்படிக் குடிக்க வேண்டும்
யாருடன் குடிக்க வேண்டும்
என்றெல்லாம்
தீவிரமாக ஆராயும்
மனதிடம்
ஏன் குடிக்க வேண்டும்
என்று கேட்டால்
ஏதோ
மழுப்பலான விடை சொல்லித்
தப்பிக்கப் பார்க்கிறது
நன்றி : இன்னும் இந்த வாழ்வு – தபசி – கவிதைகள் – யாழ் வெளியீடு, திருக்கோவிலூர் 605 757 – பக்கங்கள் : 76 – விலை : ரூ40 – வெளியான ஆண்டு : ஆகஸ்டு 2000
உங்கள் மனதுக்குப் பிடித்தவைகளில்
இது ஒன்றுதான் என் போன்ற சராசரிகளுக்குப்
புரிகிற மாதிரி இருக்கிறது
சிறப்பான கவிதை. கவிஞருக்குப் பாராட்டுகள்.