மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 25

அழகியசிங்கர்  


                    பெண்பாற் கூற்று

சுகிர்தராணி




வெகுதூரம் ஓடிய
விலங்கொன்றின் உலர்நாவென
தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு
ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவு
உவப்பாக இல்லை
என் பாதிப் புன்னகைக்குப் பின்னே
சொல்லப்படாத கதையொன்று இருக்கிறது
அவனை மிகவும் விரும்புகிறேன்
சீராக நறுக்கப்படாத அவன் மீசையையும்
என் கவிதைகளைச் சிலாகிக்கிறீர்கள்
குழந்தைகள்மீது பெருவிருப்பம் எனக்கு
ஆயினும் கருத்தரிக்க இயலாது
கூந்தலை வெட்டிக் கொள்கிறேன்
உதட்டில் ஊறும் முத்தங்களை
அவ்வப்பொழுது உமிழ்ந்து விடுகிறேன்
வேறென்ன செய்ய
இறந்து போன அப்பாவைப்
பார்க்க வேண்டும் போலிருக்கிறது
சிறுமிகளுக்கு
மாலை நேர வகுப்பெடுக்கிறேன்
கள்ளக்காதல் என்னும் சொல்லின்
பின்னுள்ள வலி புரிகிறது
இந்தக் கவிதையில்
மர்மங்கள் எவையுமில்லை
அகழ்ந்தெடுத்தல் புராதனச் சோதனை
எவையும் வேண்டாம்
வேண்டுமானால்
என்னை ஒழுக்கங்கெட்டவள்
என்று சொல்லிக் கொள்ளுங்கள்

நன்றி : இப்படிக்கு ஏவாள் – கவிதைகள் – சுகிர்தராணி – விலை ரூ.75 – பக் : 72 – முதல் பதிப்பு : மே 2016 –  காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525




மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன