பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்


அழகியசிங்கர்


பூனைகள் பற்றி நான் கவிதைகளைத் தொகுக்க ஆரம்பித்தேன்.  பின் ஏனோ அந்த முயற்சியைத் தொடரவில்லை.  என்னிடம் உள்ள நல்ல பழக்கம். நான் எதாவது தொடர்ந்தால் கொஞ்ச நாள் தொடர்வேன் பின் நிறுத்தி விடுவேன்.  இப்படி பாதியில் பாதியில் நின்று போன ப்ராஜக்ட் அதிகம்.  இந்த ப்ளாகும், முகநூலும் வந்த பிறகு  இப்படி தொடராமல் போன எத்தனையோ பாதியில் நின்று போயிருக்கின்றன.  என்றாவது ஞாபகம் வந்தால் தொடர்வேன்.  பூனைகள் குறித்த கவிதைகள் பலர் எழுதி உள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதத் தொரியாத ஒருவர் கவிதை எழுத விரும்பினால் பூனையை கண் முன் நிறுத்தி எழுதத் தொடங்கினால் கவிதை தானாகவே எழுத வந்து விடும்.  ஏன்எனில் பூனை ஒரு ஆன்மிக விலங்கு. அதைத் தூக்கி மேலே வீசி எறிந்தால் தன் மீது அடிபடாமல் தப்பித்து விடும்.  
வீடை ஒழிக்கும்போது ஒரு பெஞ்ச் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது வெளியே வைத்திருந்தேன்.  நேற்று வண்டியை உள்ளே தள்ளிவிட்டு வந்தேன்.  பெஞ்சில் ஒரு பூனை சொகுசாகப் படுத்துக் கிடந்தது.  எனக்கு கெட்ட கோபம்.  என்னிடம் அனுமதி கேட்காமலேயே படுத்திருந்ததால்தான் கோபம்.  பின் அதைத் துரத்தினேன். 
பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் புத்தகத்தை தபாலில் அனுப்பினேன். அப்போது கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தேன்.  57 ஆம் பக்கத்தில் பெருந்தேவியின் புத்த நாடகம் என்ற கவிதை.
கீழே நான் துரத்திய பூனை இங்கே எப்படி வந்தது என்று தோன்றியது. எனக்கு நன்றாக இனிமேல் பொழுது போய்விடும்.  இதோ இப்போது ஒரு பூனையை உங்கள் கண் முன்.
புத்த நாடகம்
பெருந்தேவி
விட்டத்திலிருந்து குதித்த கிழட்டுப்பூனைக்குப்
படாத இடத்தில் பட்டுவிட்டது
திருமணக்கோலத்தைச் சுட்டாத ஒரு பூமால
அழுகுகிறது கடைத்தெருவில் ப்ளாஸ்டிக் உறையில்
        கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் பூனை நொண்டுகிறது
வேறெங்கோ விபத்துக்குள்ளான வாகனத்தில்
புன்னகைபூத்து இறந்து கிடக்கின்றனர் கள்ளக்காதலர்கள்
தட்டுமுட்டுச் சாமான்களும் திகைப்புமாக 
மோதி நகர்கிறது பூனை
நெடுநாளைய இருமலொன்று அடுத்த தெருவில்
அந்தரத்தை அடைகிறது எப்போதும்போல்
இருள் காவியத் துணையாகிறது பூனைக்கு
இன்னொரு பூனைக்கும் இன்னொரு இரவுக்குமாகத்
தயாராகிறது வேசன் என அடுத்தநாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன