அழகியசிங்கர்
எண்பது வயதாகிற வைதீஸ்வரனின் கவிதைத் தொகுதியின் ெயர். அதற்குமட்டும் ஒரு ஆகாயம் 80 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எழுத்து காலத்திலிருந்து எழுதி வருபவர் வைதீஸ்வரன். ஒரு விதத்தில் எழுத்து என்பது தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் எழுத முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான். மூத்தத் தலைமுறை சேர்ந்த எழுத்தாளர் என்கிறபோது, வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் முதலிய கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறார்கள்.
இன்று எழுதப்படுகிற கவிதைகள் எப்படிப்பட்ட கவிதைகள். இக் கவிதைகளிலிருந்து வைதீஸ்வரன் எப்படி தெரிய வருகிறார் என்ற கேள்வி நம் முன் இருக்கத்தான் இருக்கிறது. இன்றைய கவிதை பொது தளத்திற்கு வந்து விட்டது. நவீன விருட்சத்தில் கவிதை பிரசுரமாவதை விட ஆனந்தவிகடனில் கவிதை வருவதை பெருமிதமாக கருதுகிற கவிஞர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்.
மேலும் கவிதை என்பது ஒரு ஜோக் மாதிரி ஆகிவிட்டது. ஜோக்கை பிரசுரம் செய்கிற மாதிரிதான் கவிதைகளையும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன. அதனால் கவிதைக்குக் கிடைக்க வேண்டிய உரிய மரியாதை கிடைக்காமல் போகிறது.
ஒரு கவிதைத் தொகுதியை புத்தகமாகக் கொண்டு வர பதிப்பாளன் தயங்குகிறான். அதனால்தான் சார்வாகன் கதைகள் பிரசுரமான வேகத்தில் அவர் கவிதைக்கு அலட்சியமான போக்கு கையாளப்பட்டது.
அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற இந்தத் தொகுப்பில் வைதீஸ்வரன் அவர் கவிதைகளை ஒட்டு மொத்தமாக சாருபிழிந்து கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவரின் ரசனைக்குரிய தொகுதிதான் இது. விருட்சம் வெளியீடாக இதைக் கொண்டு வந்துள்ளேன்.
புதிர் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை இங்கு தருகிறேன்.
புதிர்
இருட்டை வரைந் திருக்கின்றேன்.
பார் என்கிறான்.
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து.
அதுவே
அதனால் இருட்டு என்கிறான் –
இவன் இருட்டு
எனக்கு எப்போது வெளிச்சமாகும்?