ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல்

அழகியசிங்கர்


டிசம்பர் வெள்ளம் வந்து பாதிக்கப்பட்ட வீடுகளில் என் வீடும் ஒன்று. கீழ் அறையில் வைத்திருந்த எத்தனையோ புத்தகங்கள் பாழாகி விட்டன. முதலில் நேர்பக்கம் என்ற பெயரில் நான் கொண்டு வந்த கட்டுரைப் புத்தகங்கள் எல்லாம் நாசமாகி விட்டன. அந்தப் புத்தகத்தை இப்போதும் விற்பனைக்காக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கொண்டு வர உள்ளேன். ஆனால் பாதி விலையில். அதேபோல் என்னுடைய கதைப் புத்தகமான ரோஜாநிறச் சட்டை வீணாகிவிட்டது. அப்புத்தகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலர்ந்த நிலையில் விற்பனை செய்ய உள்ளேன். ரூ 100 விலை உள்ள அப் புத்தகத்தை ரூ 20 க்கு விற்க உள்ளேன். அதேபோல் வினோதமான பறவை என்ற என் கவிதைப் புத்தகத்தை ரூ.10 க்கு விற்க உள்ளேன். எல்லாப் புத்தகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தப்பித்தப் புத்தகங்கள்.

டிசம்பர் மாதம் ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல். 927 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.820. இந் நாவலின் சில பிரதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து விட்டன.

ஆனால் பெரும்பாலான பிரதிகள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப் புத்தகத்தை விலை குறைவுடன் தர உத்தேசம். ரூ820 கொண்ட இப் புத்தகத்தை ரூ200க்கு புத்தகக் காட்சி முன்னிட்டு தர உத்தேசம். புத்தகக் காட்சியில் ரூ 200க்கு வாங்கிக் கொள்ளவும். பல ஆண்டுகளுக்கு முன் சுதந்திர தாகம் என்ற சி சு செல்லப்பாவின் நாவலை அதிரடியாக ரூ100 க்கு விற்று, விற்பனையில் சாதனை படைத்தவன் நான்.  

இதைத் தவிர விருட்சம் வெளியீடாக 4 புத்தகங்கள் புதியதாக வெளிவந்துள்ளன. 1. விருட்சம்பரிசுப் பெற்ற கதைகள். 2. பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ். 3. வைதீஸ்வரனின் üஅதற்கு மட்டும் ஒரு ஆகாயம் 4. அந்தரங்கமானதொரு தொகுப்பு என்ற அசோகமித்திரனின் புத்தகம். நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்த நான், ஐந்தாவது புத்தகமான ஞானக்கூத்தன் கவிதைகளை புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் கொண்டு வர முடியுமா என்பது தெரியவில்லை. 

புத்தகக் கண்காட்சி சாலையில் என் ஸ்டால் எண். 594. நானும் ஒரு முறை சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன். யாராவது கேட்டால் உடனே சொல்ல வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *