ஏழு வரிக் கதை

1. தண்ணீர்

அழகியசிங்கர 
அந்த வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.  உள்ளே படுத்திருந்த பெரியவர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய வயது 94.  எழுந்திருக்க முடியவில்லை.  படுத்தப் படுக்கையாக இருந்தார். அவருடைய பையன் கணினியில் ஒரு ஏழுவரிக் கதை டைப் அடித்துக்கொண்டிருந்தான்.  அதன் தலைபபு தண்ணீர்.  அவனுடைய மனைவி டிவியில் ஆழ்ந்திருந்தால.  டிவியையாவது அசைத்து விடலாம். அவளை அசைக்க முடியாது.  சமையல் அறையில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.  டொக் டொக் என்று சப்தம்.  பெரியவர் சத்தமாக பையனைக் கூப்பிட்டார்.  பையன் அவர் அறைக்குச் சென்றான்.  அவர் சொன்னார் :  ‘தண்ணீ….தண்ணீ…’  பையன் ஒரு டம்பளரில் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் சொன்னான்.  பெரியவர் விடாமல், ‘தண்ணீ..தண்ணீ’ என்றார்.  அவனுக்குப் புரியவில்லை.  அவன் மனைவி டிவியில் முக்கியமான கட்டத்தில் மூழ்கி இருந்தாள்.  சமையல் அறை குழாயிலிருந்து டொக் டொக்…..

2.  ரோஜாப்பூ வாசனை 

தெருவில் அந்தப் பெண் நடந்து கொண்டிருந்தாள்.  கையில் ஒரு பிளாஸ்டிக் பேக்.  தலையில் ரோஜாப் பூக்கள் சூடியிருந்தாள்.  அவள் நடக்க நடக்க ரோஜாவின் வாசன எல்லார் மூக்குகளையும் துளைத்தது. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்தப் பெண் தெரு முனையில் உள்ள குப்பைத் தொட்டியில் கையில் வைத்திருந்த பேக்கை தூக்கிப் போட்டாள்.  பின் நடந்து வந்தாள்.  ரோஜாப் பூக்கள் வாசனையைச் சிந்தியபடி அவளுடன் நடந்தன. எல்லோரும் திரும்பவும் பார்த்தார்கள். அவள் வெட்கப்படவில்லை.  பால்கனியிலிருந்து நானும் பார்த்தேன்.  அவள் நடந்து அவள் வீட்டிற்குள் போய்விட்டாள்.  ஆனால்  அவள் பரப்பிய ரோஜா மணம் அங்கே சுழன்றபடி இருந்தது….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன