அவனுக்கு வேற வழி இல்லை.
அழகியசிங்கர்
அப்பா அவர் அறையை விட்டு இன்னொரு அறைக்குச் சென்று போய்ப் படுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு நடப்பது கஷ்டமாகி விட்டது. எப்போதும் இருந்த அறையில் அவருடைய எளிமையான படுக்கை இருக்கும். பக்கத்தில் ஹோமியோபதி மருந்துகள் இருக்கும். செலவு கணக்கு எழுத ஒரு நோட் புத்தகம் இருக்கும். ஒரு விபூதி டப்பா இருக்கும். ஒரு சின்ன கண்ணாடி இருக்கும். அப்பா அடிக்கடி அந்தக் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்துக் கொள்வார். கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அவர் சரியில்லை. நடக்க முடியவில்லை. தூங்கி தூங்கி விழுந்தார். சாப்பாடு ரொம்ப குறைவாகப் போய் விட்டது. அவர் அறையில் புத்தகக் குவியலும், ஒரு கம்ப்யூட்டரும் இருக்கும். எப்போதும் அவருடைய பெரிய பையன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு டைப் அடித்துக் கொண்டிருப்பான். அப்பாவிற்கு வெறுப்பாக இருக்கும்.
“என் இடம்தான் பேரு..நீதான் முழுக்க முழுக்க உன் புத்தகங்களையும் கம்ப்யூட்டரையும் வைத்துக் கொண்டிருக்கிறாய்..” என்று பெரிய பையனைப் பார்த்து முணுமுணுப்பார்.
அவர் பேரன் தங்கும் அறைக்குச் சென்று விட்டார். பெரிய கட்டில். தாராளமான மெத்தை, அங்கயே தங்கி விட்டார். பெரும்பாலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார். ஏனோ அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
முன்பெல்லாம் அப்பா மாலை வேளைகளில் டிவியைப் வந்து பார்ப்பார். பின் அதுவும் போய்விட்டது. அவர் பேரன் அறையில் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.
அவரால் எழுந்து பாத்ரூம் போக முடியவில்லை என்பதால், அடல்ட் டைபர்ஸ்ûஸ கட்டிக் கொள்ள வேண்டி உள்ளது. பெரி0ய பையன்தான் இதையெல்லாம் செய்கிறான். வேளா வேலைள்கு சாப்பாடு கொடுக்கிறான். அப்பா அவன் பெயரை அடிக்கடி கத்தி கூப்பிட்டபடி இருப்பார். தங்கியிருக்கும் அறை பக்கத்தில் உள்ள இடத்தில் இரவில் பெரிய பையன் படுத்துக் கொள்கிறான். அப்பா அடிக்கடி அவனைக் கூப்பிட்டு எழுப்பிகிறார். அவனுடைய தூக்கம் கெடுகிறது. அவனுக்கு அடுத்த நாள் ஒரே தடுமாற்றமாக இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை. அப்பா சொல்கிறார். üüநீ எங்கே போனாலும் 30 நிமிடத்திற்குள் வந்து விட வேண்டும்,ýý என்று. அவனும் எங்கும் செல்வதில்லை. அவன் சென்றால், அவன் மனைவி இருப்பாள். அவன் மனைவி சென்றால் அவன் இருப்பான்.
அவனுக்கு வேற வழி இல்லை. இனிமேல் அப்பாவால் எழுந்து நடமாட முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர் அறையில் அவருடைய கட்டிலில் முந்தாநாள் புயல் எதிரொலியால் பால்கனியில் வைத்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தான். அன்று அவர் எதிர்பாராமல் ஒரு நாள் மாலையில் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். ஆச்சரியம். நம்ப முடியவில்லை அவனுக்கு. அவர் அவருடைய அறைக்கு வந்தார். கட்டிலில் காணப்பட்ட புத்தகங்களைப் பார்த்து கெட்ட கோபம் அவருக்கு. அவனைப் பார்த்து திட்டினார். அவன் அவசரம் அவசரமாக அந்தப் புத்தகங்களை எடுத்துத் தரையில் அடுக்கினான். அப்பா படுத்துக் கொள்ள படுக்கையைப் போட்டான். அப்பா சிறிது நேரம் படுத்துவிட்டு, திரும்பவும் நடந்து பேரன் அறைக்குச் சென்று விட்டார்.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. புத்தகங்கள் கீழே வழிந்தவண்ணம் உள்ளன. அதை அவன் தொடவில்லை.