நடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடிந்தது

அழகியசிங்கர்




ஒரு கவிதை ஒரு கதை கூட்டம் நேற்று (08.05.2016) வழக்கம்போல் நடேசன் பூங்காவில் நடைபெற்றது.  மௌனி கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிப்பதாக முடிவு செய்திருந்தோம்.  ஒவ்வொரு வாரமும் கூட்டம் என்பது இப்படித்தான் நடக்குமென்று எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு யார் தலைவர்?  யாரும் தலைவர் இல்லை.  வருபவர்கள் எல்லோரும்தான் தலைவர்கள்.  முதலில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஆத்மாநாம் கவிதைகள் ஒவ்வொன்றாக வாசித்தோம்.  கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகளை வாசித்துவிட்டோம்.  ரவீந்திரன், கீதா ரவீந்திரன், திருமலை, நாகேந்திர பாரதி, நான், கிருபா எல்லோரும் வாசித்தோம். ஆனால் இப்போது தோன்றுகிறது ஒவ்வொரு கவிதையைக் குறித்தும் எல்லோரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியிருக்கலாமோ என்று. 
என் நண்பர் நாகேந்திர பாரதி அவருடைய கவிதை ஒன்றை வாசித்தார்.  அது குறித்து முடிந்த அளவு கருத்து தெரிவித்திருக்கலாம். அடுத்த முறை இது மாதிரி செய்து பார்க்கலாமென்று தோன்றுகிறது.
மௌனி கதைகளை வாசிக்கத் தொடங்கினோம்.  பூங்காவில் நாங்கள் இருந்த பகுதியிலிருந்து இன்னும் உள்ளே நிழல் அதிகமாக தரக்கூடிய இடமாக போய் உட்கார்ந்தோம்.  அந்த இடம் இன்னும் அற்புதமாக இருந்தது. குடும்பத்தேர் என்ற மௌனியின் கதையை திருமலை என்ற நண்பர் வாசித்தார்.  ஒரு முழு கதையை முழுவதுமாக ஒருவரே வாசிப்பதற்குப் பதில் விட்டுவிட்டு இன்னொருவரும் வாசிக்க சொல்லலாம் என்று தோன்றியது. அவர் வாசித்துக் கொண்டிருக்கும்போது ராகவன் காலனி முதியோர் இல்லத்திலிருந்து ஒரு அலறல்.  என் மனைவி அவசர அழைப்பு.  94 வயது தந்தையை கவனிக்கச் சொல்லி.  நடுவில் நான் போகும்படி ஆகிவிட்டது.  ஆனால் கூட்டத்தைத் தொடரும்படி கிருபாவிடம் கூறினேன்.  ‘நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் வாருங்கள்,’  என்று கூறினார்.
நான் உடனே வந்து விட்டேன்.  இன்னும் சிறிது நேரத்தில் முடியவேண்டிய கூட்டத்தில் முழுமையாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.   
வீட்டிற்கு வந்து மௌனியின் பிரபஞ்ச கானம் என்ற கதையை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை நான் வீட்டில்தான் முடித்தேன். ஒரு கதையை சத்தமாக வாசிக்கும்போது சில இடங்களில் வரிகள் தடுமாறுகின்றன.  தப்பாக படிப்பது போல் தோன்றுகிறது.  மௌனமாக வாசிக்கும்போதும் இது மாதிரியான பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.    ஆனால் நாம் வரிகளை மௌனமாக முழுங்கி முழுங்கி விடுவோம்.
எனக்கு வேடிக்கையாக இருந்தது.  இநதக் கூட்டம் நடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடிந்து விட்டது என்று.  
     கூட்டத்தில் நாங்கள் படித்ததை ஆடியோவில் பதித்து உள்ளோம்.  நீங்களும் கேட்டு ரசிக்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன