ஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்?

ஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்?
அழகியசிங்கர்

நான் பார்த்துவிட்டேன்.  நாம் எதாவது முயற்சி செய்யும்போது எதாவது பிரச்சினை ஏற்பட்டு விடும்.  இது எதிர்பாராத இடத்திலிருந்து நமக்கு ஏற்பட்டு விடும். இப்படி வாழ்க்கையில் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். 
 வங்கியில் இருக்கும்போது பெரிய அதிகாரிகள் வந்திருந்து வாடிக்கையாளர்களைச் சந்திக்க கூட்டம் ஏற்பாடாகியிருக்கும். அப்போதுதான் மின்சாரம் போயிருக்கும்.  ஒருமுறை கூட்டம் நடத்தும் சரியான நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் தலையில் இரும்பு கதவு இடித்து ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டது.
ஒரு நண்பரின் பெண் கல்யாணத்தின் போது, நாங்கள் சாப்பிட உட்காரந்திருந்தோம்.  மேல் கூரையிலிருந்து பூனை மூத்திரம் ஒழுதி இலலை மீது விழுந்து, எழுந்து ஓடும்படி செய்து விட்டது.
என் கவிதைத் தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தினேன்.  யாருடனும் இல்லை என்பது கவிதைத் தொகுதியின் பெயர்.  பெயருக்கு ஏற்றபடி பேச வருபவர்கள் யாரும் வரவில்லை.  ஞானக்கூத்தன்தான் அன்று இருந்து கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.  இத்தனைக்கும் பேச ஒப்புக்கொண்டவர்கள் எல்லோரும் என் நண்பர்கள்.  ஏன் அப்படி செய்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்கவில்லை.  அவர்களும் சொல்லவில்லை.  அப்போது எனக்கு தாங்க முடியாத துயரமாக இருந்தது அந்த நிகழ்ச்சி.  ஆனால் இப்போது அதுமாதிரி நடந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போய்விடுவேன்.  ஏன் கூட்டம் நடத்துவது பெரிய விஷயம் இல்லை.  புத்தகம் போட்டு யாரும் வாங்கவில்லை என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை.  
நேற்றைய ஒரு கதை ஒரு கவிதைக் கூட்டத்திற்கு சில நண்பர்கள் வந்தார்கள்.  குறிப்பாக கிருபானந்தன், சுந்தர்ராஜன் வந்தார்கள்.  ஸ்ரீதரன் என்ற இன்னொரு நண்பர் வந்தார்.  சுந்தர்ராஜன் பெசன்ட் நகரிலிருந்து வந்தார்.  அவ்வளவு தூரத்திலிருந்து வருவது கொஞ்சம் கஷ்டம். 
இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த விடாமல், தேர்தல் அலறல் அலறிக்கொண்டே இருந்தது.  நாங்கள் படிக்கும் இடத்தில் பின்னால் சில சிறுவர்கள் சத்தம்போட்டபடியே விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  முதல் முறையாக நான் ஒரு விதமாக உணர்ந்தேன்.  இருந்தாலும் ஒரு மணி நேரம் நாங்கள் கவிதைகள், கதைகள் வாசித்தோம்.  நீண்ட கதையைப் படிக்க அலுப்பாக இருக்கும்போல் தோன்றியது.  கேட்பதிலும் கவனம் இல்லாமல் இருந்தது.  நாங்கள் ஒவ்வொரும் கதையையும் கவிதையையும் வாசிக்க பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்  
அடுத்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை வேறு பூங்காவில் எங்காவது நடத்தத் திட்டம்.  கொஞ்சம் சந்தடி இல்லாத பூங்காவாகப் பார்க்க வேண்டும்.
ஏன் நம்ம கூட்டத்தை தேர்தல் இப்படி சொதப்பி விட்டது?
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன