ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்…

அழகியசிங்கர்


கோவிந்தன் தெரு வந்தால் எங்கள் தெரு தெரிந்து விடும்.  மேற்கு மாம்பலத்தில் ஆதி கேசவ பெருமாள் கோயில் என்ற ஒன்று உண்டு.  அதன் எதிரில்தான் ராகவன் காலனி.  ஆனால் யாரிடமாவது முகவரியைக் கேட்டால் கட்டாயம அசோக் நகரில் உள்ள ராகவ காலனிக்கு வழி சொல்வார்கள். ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு மாம்பலத்தில் உள்ள ராகவன் காலனி தெரிவதில்லை.  
என் கடிதங்கள் எல்லாம் அப்படித்தான் சென்று விட்டு வரும்.  யாராவது வீடு தேடி வந்தால் குழம்பி விடுவார்கள். சரி ராகவன் காலனியில் என்ன அப்படி முக்கியத்துவம் இருக்கிறது?  ஒன்றுமில்லை.  ஆனால் அங்கு ஒரு முதியோர் இல்லம் ஒன்றுள்ளது.  ஏழாம் நெம்பர் வீட்டில்தான் அந்த முதியோர் இல்லம் உள்ளது.  
அந்த முதியோர் இல்லத்தில் மூன்று பேர்கள் மட்டும் உள்ளார்கள்.  வேற யாரும் கிடையாது.  சேர்க்கவும் மாட்டோம்.  முதல் முதியவர் வயது 93.  என் அப்பா.  இரண்டாவது முதியவர் நான்.  வயது 62.  மூன்றாவதாக ஒரு முதியவர் சேர்ந்துள்ளார்.  அவர் வேற யாருமில்லை என் மனைவி.  சமீபத்தில் 93 வயதான முதியவரான என் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை.  எப்போதும் தானவே எல்லாக் காரியங்களையும் செய்து கொள்பவர்.  யாரையும் எதிர்பார்க்க மாட்டார். காலையில் எழுந்தவுடன் தானே ஷேவ் செய்து கொள்வார்.  பின் குளிப்பார்.  கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிப்பார்.  தானே தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிடுவார்.  
சமீப காலத்தில் அந்த முதியவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.   வலி வலி என்று வலது கையைப் பிடித்துக்கொண்டு தினமும் புலம்புகிறார்.  எழுந்து நிற்கவே முடியவில்லை.  படுத்தபடியே இருக்கிறார்.  கொஞ்சம் எழுந்து உட்கார சொன்னால் ரொம்பவும் கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார்.  முன்பெல்லாம் யூரின் போக பாத் ரூம் போவார்.  இப்போதெல்லாம் முடிவதில்லை.
ராகவன் காலனியில் வீற்றிருக்கும் இந்த முதியோர் இல்லத்தில் வெளியில் உள்ள முதியோரை சேர்க்க முடியாது.  அப்பாவாகிய மூத்த முதியவருக்காக அவருடைய பையனாகிய நடுத்தரமான முதியவனான நான்தான் எல்லா உதவிகளையும் செய்து கொண்டு வருகிறேன்.
ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைக் குளிக்க அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். நானே பாத்ரூமிற்குப் போய் அவருக்குக் குளிப்பாட்டலாமென்றால் அவர் விடுவதில்லை.  அவர் பாத்ரூமிற்குப் போனால் கீழே விழாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டுவேன்.  பாத்ரூம் கதவை தாழ்ப்பாள் போடக் கூடாது என்று வேண்டி கேட்டுக்கொள்வேன்.  சில நாட்கள் அவர் குளிக்க மாட்டார்.  பிழிந்தத் தூண்டால் உடம்பை துடைத்துக் கொள்வார்.  சிலதினங்களாகத்தான் அப்பா இப்படி இருக்கிறார்.
தனியாகப் படுத்துக்கொள்ள பயப்படுகிறார்.  என் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிடுகிறார். 
முன்பெல்லாம் மாடிப்படி வழியாக எங்கள் வீட்டு கீழே நடந்து வருவார்.  படிக்கட்டுகள் வழியாக அவர் நடப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.  வீட்டிற்குள்ளேயே கீழே உள்ள இடத்தில் நடப்பார்.  தெருவில் யாரும் அவர் முன்னால் நடந்து போகக் கூடாது.  உடனே காட் ப்ளஸ் யூ, குட் மார்னிங் என்று சொல்வார்.  
அப்பாவின் எதிர்பார்ப்பு பெரிதாக எதுவும் இல்லை.  புதிதாக எந்தச் சட்டையும் அவர் அணிய மாட்டார்.  என் சகோதரன் பயன்படுத்திய சட்டைகளைதான் அணிவார்.  என் சட்டை அவருக்கு சரியாக வராது.   வீட்டில் செய்யும் உணவுகளையே சாப்பிடுவார்.  அவர் அடிக்கடி விருப்பப்பட்டு சாப்பிடுவது மோர்கழி என்ற டிபன். 
முன்பெல்லாம் அப்பாதான் எனக்கு காப்பி போட்டுக் கொடுப்பார்.  என்னைப் பார்க்க வருபவர்களுக்கு டீ போட்டுத் தருவார்.  இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது.  அதன்பின் நான் காப்பிப் போட்டு அப்பாவுக்குக் கொடுப்பேன்.   அப்போதெல்லாம் மூன்றாவது முதியவர் எங்கள் குழுவில் சேரவில்லை.  
போன மாதத்தில் இருந்து மூன்றாவது நபரும் முதியவர் குழுவில் சேர்ந்ததால், முதியோர் இல்லம் களை கட்டிவிட்டது.  ஆனால் ரொம்ப மூத்தவரான என் அப்பாதான் முடியாதவர் ஆகிவிட்டார்.  வீட்டிக்குள் நடந்து கொண்டிருப்பவரால் அதுவும் முடியாமல் போய்விட்டது.  எப்போதும் ஒரே தூக்கமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.  சாப்பிடுவதிலும் முன்பு போல் ஆர்வம் காட்டுவதில்லை.   எல்லாம் கொஞ்சம்தான் எடுத்துக்கொள்கிறார். 
பின் அவர் ஒரு அறையில் படுத்துக்கொண்டே இருப்பார்.  கொஞ்ச நேரம் கழித்து வேற அறைக்குப் போய்விடுவார்.   முன்பெல்லாம் அவர் குளித்துவிட்டு நெற்றியில் விபூதியுடன், சாமி ஸ்லோகம் சொல்லிவிட்டுத்தான் சாப்பிட அமர்வார்.  எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.  பால்கனியில் நின்றுகொண்டு தெருவில் போவோர் பெயர்களை எல்லாம் கூப்பிட்டு வாழ்த்துவார்.  இப்போது முடிவதில்லை.  பாத்ரூம் எழுந்து போக முடியாததால், பிளாஸ்டிக் குவளையில் அவர் போகும் யூரினை நான் எடுத்துக் கொட்டி பினாயில் மூலம் சுத்தப் படுத்துகிறேன்.  இதுமாதிரி ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டி உள்ளது.   யாராவது வீட்டிற்கு வந்தால் பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்.  அல்லது கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் படுத்திற பாட்டில் யாராவது பார்க்க வருபவர்கள் எழுந்து ஓடியே போய்விடுவார்கள்.
நேற்று மனைவியிடமிருந்து போன் வந்தது.  காலையில் நான் நடை பயிற்சியில் இருந்தேன்.    அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தேன்.  அப்பா வெஸ்டர்ன் டாய்லட்டின் பக்கத்தில் கீழே தரையில் உட்கார்ந்து இருந்தார்.  எழுந்திருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் நான் கால் முட்டிகளில் தைலம் தடவுவேன்.  அவர் என்னை ஆசிர்வாதம் செய்வார்.  
அடுத்த முதியவனான நான், காலையில் காப்பியைக் குடித்து விட்டு கிரவுண்டிற்கு நானோ காரிலோ டூ வீலரிலோ சென்று நடக்கிறேன்.  இப்போது ஒரு அற்புதமான பூங்காவில் நடக்கிறேன்.  எட்டுப் போட்டு நடந்தால் உடலுக்கு நல்லதாமே அதனால் எட்டுப் போட்டு நடக்கிறேன்.  பின் கைக்கும் காலுக்கும் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன்.
வீட்டிற்கு வந்தவுடன், செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்க்கிறேன்.  தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவன்.    முன்பெல்லாம் ஒரு பக்கம் முழுவதும் டைரி எழுதுவேன்.  இப்போதெல்லாம் கால் பக்கம் அரைப் பக்கம்.   
என் முன்னால் மூன்று பைகள் நிறைய புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எதாவது எழுத முயற்சி செய்கிறேன்.  குறைந்தது ஆர்யக்கவுடர் தெருவில் நாலைந்து முறைகள் வண்டியை ஓட்டிக் கொண்டு போவது என் வழக்கம்.  வங்கிக் கிளைகளில் கூட்டத்தில் நின்று கொண்டு பாஸ் புக்கைப் பதிவு செய்வேன்.  பின் நண்பர்களைப் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களுக்குப் போவது என்று பொழுதைக் கழிக்கிறேன்.  தினமும் புத்தகம் படிக்கும் நேரத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டுமென்றும் நினைக்கிறேன்.  ஆனால் முடிவதில்லை.  அப்பாவைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வீட்டைவிட்டு வெளியூருக்கெல்லாம் செல்வதில்லை.  மகாமகத்திற்கு என் மனைவிதான் சென்றாள். நான் போகவில்லை.  இன்னும் ஒன்று சொல்லவேண்டும், நான் சாப்பிட்டப் பின் சில மாத்திரைகளைப் போட்டுக்கொள்கிறேன்.  அது நல்ல தூக்கத்தைக் கொடுத்துவிடும்.  நாற்காலியில் உட்கார்ந்த உடன் தூங்க ஆரம்பித்து விடுவேன்.  ஒரு நாள் காலையில் நான் தூங்கவில்லை என்றால் மாலை நேரம் தூக்கம் வந்துவிடும்.
சில மாதங்களுக்கு முன் நான் முன்பு எழுதிய ஒரு நோட்புக்கைப் பார்த்தேன்.  அதில் நான் படித்தப் புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதி இருந்தேன்.  எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  எனக்கு திரும்பவும் அந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை.  என்ன படித்தோம் என்று ஞாபகத்திற்கும் வரவில்லை.  நான் எழுதியதைப் படித்தப்பின் நான் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேனா என்று தோன்றியது. என் பிரச்சினை நான் ஒரு புத்தகத்தைப் படித்தவுடன், அடுத்தப் புத்தகத்திற்குப் போனால் முதல் புத்தகம் மறந்து விடும்.  அதனால் எழுதி ஒரு கட்டுரை மாதிரி இப்போதெல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  இக் கட்டுரைகளைத் தொகுத்துதான் நீங்களும் படியுங்கள் என்ற புத்தகம் தயாரித்து உள்ளேன். இலக்கியக் கூட்டங்களில் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்கிறேன்.  இது ஒரு பொழுதுபோக்குதான் வேற ஒன்றுமில்லை.
எங்கள் முதியோர் இல்லத்தில் மூன்றாவதாக இருப்பவர் என் மனைவி.  ஜனவரி மாதம் முதல் அவர் முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார்.  அவர் வங்கியில் பணி புரிந்து ஜனவரி முதல் ஓய்வு பெற்றுள்ளார்.  அதனால் முன்பு இருந்ததைவிட முதியோர் இல்லத்தில் இன்னொருவர் கூடி விட்டார்.  முன்பெல்லாம் என் மனைவி காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்றவுடன், நான் மாம்பலத்தில் உள்ள சின்ன ஓட்டலில் இட்லி வடை சாப்பிடுவேன்.  இப்போது அதெல்லாம் கிடையாது.  வேளா வேளைக்கு உணவு கிடைத்துவிடுகிறது.  முதியோர் இல்லம் பார்க்க கொஞ்சம் சுத்தமாக இருக்கிறது.  
ஆனால் மூன்றாவது முதியவர் ஆன மனைவியிடம் ஒரு கெட்ட குணம்.  காலையில் சாப்பிட்ட உடன், டிவி முன் உட்கார்ந்து விடுகிறார்.  பின் எழுந்து கொள்வதில்û.  ஒரு நாள் முழுவதும் டிவியில் வருகிற சீரியல்களைப் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.  எனக்கு டிவியோ பிடிப்பதில்லை.  மனைவிக்கு நான் எப்போதும் புத்தகம், கம்ப்யூட்டர் என்று இருப்பது பிடிக்கவில்லை.  என்ன செய்வது? மூத்த உறுப்பினரான அப்பாவிற்கு கட்டாயமாக குறிப்பிட்ட நேரத்தில் சாப்பாடு கிடைத்து விடுகிறது.  
மூவருக்கும் பென்சன் வருகிறது.  மூத்தவர் அப்பாவின் பென்சனைத் தொடுவதில்லை.  அது அவருடைய பணம்.  என் பென்சன் பணமும், மனைவியின் பென்சன் பணமும்தான் முதியோர் இல்லத்தை நடத்த போதுமானதாக இருக்கிறது.  ஒவ்வொரு மாதமும் புத்தகம் வாங்குவது என் இயல்பு.   அது என் மனைவிக்கும் அப்பாவிற்கும் பிடிப்பதில்லை.  என் பிரச்சினை புத்தகங்களை எங்கே வைப்பது என்று. அதேபோல் நல்ல சினிமா எதாவது இருந்தால் தியேட்டரில் போய் பார்த்து விடுவேன்.  
மூத்தக் குடிமக்களாகிய எங்களை யாரும் பார்க்க வருவதில்லை.  என் மகள் அவள் குடும்பத்துடன் மடிப்பாக்கத்தில் இருக்கிறாள்.  அவளால் வர இயலாது.  புதல்வன் வெளி நாட்டில் இருக்கிறான். அவனாலும் வர இயலாது.
என் வீடு உண்மையிலேயே ஒரு முதியோர் இல்லம் தானே?
 

“ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்…” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன