எஸ்ரா கட்டுரையை முன் வைத்து..

அழகியசிங்கர்
சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள்.  நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு  வங்கிக் கிளை என்று.  அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன்.  யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள்.  என் பின்னால் சிரிப்பார்கள்.  அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப் பணிகளைப் பார்ப்பார்கள்.  பின் ஏதோ ரன்னிங் ரேஸில் ஓடுவதுபோல் ஓடி விடுவார்கள்.  நிற்கக் கூட மாட்டார்கள்.  பெரும்பாலும் பெண் ஊழியர்கள் அப்படி இருந்தார்கள்.  இவர்களிடம் பேசுவதை விட என் முன்னால் உள்ள கணினிகளிடம் பேசலாம் என்று தோன்றும்.  அதற்குப் பிறகு அங்கிருக்க எனக்கும் அலுப்பாக இருந்தது.  
அப்படி இருந்த என்னை திடீரென்று வளசரவாக்கம் கிளைக்கு மாற்றி விட்டார்கள்.  அலுவலகக் கெடுபிடியால் ஆர்டர் வந்த நாளிலேயே என்னை மாற்றியும் விட்டார்கள்.  தூரம் பொருத்தவரை திருவல்லிக்கேணியும் வளசரவாக்கமும் ஒன்றுதான். ஆனால் வளசரவாக்கத்தில் உள்ள சிலர் புத்தகம் வாசிப்பவர்களாக இருந்தார்கள்.  எழுத்தாளர்கள் பற்றி எழுத்து பற்றி கொஞ்சமாவது பேசினார்கள்.  நான் கொடுத்த விருட்சம் பத்திரிகையைப் படிக்கிறேன் என்று வாங்கி வைத்துக் கொண்டார்கள்.  அப்போதுதான் ஒரு பெண் ஊழியர் பேசியதைக் கேட்டேன்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பெண் ஊழியர் எஸ்ரா பைத்தியம்.  எஸ்ரா என்ன எழுதினாலும் படித்துக்கொண்டு இருப்பார்.  அவர் குடும்பத்தில் உள்ள அவருடைய மகனிடம், கணவரிடம் எஸ்ரா கதைகளைப் படித்து சிலாகித்துக் கொண்டு இருப்பார்.  அந்தப் பெண்மணி ஒரு முறை, ‘நான் யார் எழுதுவதையும் படிக்க மாட்டேன்.  எஸ் ரா எழுதற எழுத்தைத்தான் படிப்பபேன்,’ என்று சொன்னபோது, எனக்கு எஸ் ரா மீதே பொறாமை ஏற்பட்டு விட்டது.
நான் அந்தப் பெண்மணியிடம் சொன்னேன் : ‘எஸ் ரா என் நண்பர், ரொம்ப வருடங்களாக அவருடன் பழகியிருக்கிறேன்..’
உண்மையில் என்னுடைய நட்பு அந்தப் பெண்ணிடம் எஸ்.ரா என் நண்பர் என்று சொன்ன பிறகுதான் ஏற்பட்டது.  
ஒருமுறை அந்தப் பெண்ணிடம், எஸ் ரா வை நம்ம வங்கிக் கிளைக்குக் கூப்பிடுகிறேன்.  நிச்சயம் வருவார். கதைகளைப் படிக்கக் கேட்கலாம், என்றேன். 
நான் அப்படியெல்லாம் சொன்னாலும் அது மாதிரி கூட்டத்தை அங்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை.  அங்கு பணிபுரிவது ஒரு புடுங்கலாக இருந்தது.   தொந்தரவு என்றால் அவ்வளவு தொந்தரவு அங்கு.  
நான் யோசிப்பேன்.  ஏன் இதுமாதரிரியான வங்கிக் கிளைகள் எல்லாம் ரொம்பவும் இயந்திரத்தனமாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று,  மாதம் ஒரு முறையாவது அங்குள்ள பெரிய அதிகாரிகள் வங்கிக் கிளையில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, கவிதை வாசிப்பது, கதை வாசிப்பது அல்லது யாரையாவது கூப்பிட்டுப் பேசச் சொல்வது போன்ற நிகழ்ச்சியை நடத்தலாமே என்று.  ஆனால் நான் சொன்னால் அந்தச் சபையில் ஏறாது என்பதோடல்லாம் கிண்டலடிக்கப் படுவேன்.
சமீபத்தில் எஸ்ரா சாகித்திய அக்காதெமியின் நிறுவன தினத்தில் பேசியதைக் கேட்டேன்.  அக்காதெமியின் செயல்பாடுகளைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.  அக்காதெமியைப் பற்றி அத்தனை விபரங்களையும் சேகரித்து இன்னும் என்ன செய்யலாம் என்பதைக் கூட சொல்லி விட்டார்.  அந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.  ரொம்பவும் திறமை இருந்தால்தான் ஒருவரால் இப்படி பேச முடியும்.  எஸ்ராவால் அது முடிந்திருக்கிறது.  
இப்படி திறமை உள்ள ஒருவர், பல வாசகர்களைக் கொண்ட ஒருவர், விருட்சம் இதழ் பற்றியும், நேர் பக்கம் என்ற என் புத்தகம்பற்றி 3 பக்கங்களுக்கு மேல் எழுதி உள்ளார் என்பதை நினைத்தால்  மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதை இங்கே அப்படியே எடுத்து தர உள்ளேன்.  அதற்கு முன் சில தகவல்களையும் தர விரும்புகிறேன்.  நவீன விருட்சம் 27 ஆண்டுகளாக காலாண்டுக்கு ஒரு முறை வரும் பத்திரிகை.  அதனுடைய 99வது இதர்தான் வெளிவந்துள்ளது. 
100வது இதழ் இனிமேல்தான் வர உள்ளது.  இரண்டாவது வெள்ளம் காரணமாக நேர் பக்கம் என்ற புத்தகம் சற்று வீணாகி விட்டது.  ஆனால் புத்தகம் பிரித்து படிக்க முடியும்.  அதனால் 142 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தை ரூ.60க்குத் தர உள்ளேன்.
From s.raa’s website 
அழகியசிங்கரின் கட்டுரைகள்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு விருட்சம் அழகியசிங்கரைத் தெரியும். இலக்கியத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அபூர்வமான மனிதர்.

கவிதைகள், சிறுகதைகள். கட்டுரைகள் எழுதி வருவதுடன் நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அதன் 100 வது இதழ் சமீபமாக வெளிவந்துள்ளது. நவீன விருட்சம் இதழில் எனது சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது.
விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பழைய விருட்சம் இதழ்களைப் பைண்டிங் செய்து புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார். அவற்றை ஒருசேர வாங்கி எனது புத்தகச் சேமிப்பில் வைத்திருக்கிறேன். அபூர்வமான கட்டுரைகளும் கதைகளும் கொண்ட தொகுப்பு.
அழகியசிங்கர் இலக்கியக்கூட்டங்களை நடத்துவதில் குறையாத ஆர்வம் கொண்டவர். நான்கைந்து பேர் மட்டுமே வந்தாலும் கூட சலித்துப் போய்விடமாட்டார். முழுஈடுபாட்டுடன் கூட்டத்தை நடத்துவார். ரயில்நிலையத்தில், பூங்காவில், கல்யாணமண்டபத்தில் என அவர் கூட்டம் நடத்த தேர்வு செய்யும் இடங்களும் வித்தியாசமானவை. வாசகர்கள் அதிகம் வருவதில்லை என்ற தனது ஏமாற்றத்தை அவர் ஒரு போதும் வருத்தமாக உணர்வதேயில்லை. அவருக்கென்றே அபூர்வமான சிரிப்பு இருக்கிறது. அது தான் மௌலியின் அடையாளம்.
இணையத்தில் நவீன விருட்சம் வெளியிடத்துவங்கிய பிறகு பல புதிய கவிஞர்கள் எழுத்தாளர்கள் எழுதத்துவங்கினார்கள். புதிய படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவருக்குத் தெரியாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை. மூத்த எழுத்தாளர்கள் பலருடனும் குடும்ப நண்பராகப் பழகி வருபவர்.
எது அவரை இப்படி இலக்கியத்திற்காக ஒடிக்கொண்டேயிருக்க வைக்கிறது என யோசிக்கும் போது வியப்பாகயிருக்கிறது . பெயரோ, புகழோ, பணமோ எதுவும் கிடையாது.
அவர் சந்தித்த எழுத்தாளர்களும் படித்த புத்தகங்களும் மட்டுமே இந்த உந்துதலுக்கான காரணம். வாசிப்பின் வழியே அவர் இலக்கியத்தின் மீது தீராத ஈடுபாடும் விடாப்பிடியான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்கிறார். இவரைப் போன்றவர்களைத் தான் உண்மையான இலக்கிய வாசகர் என்பேன். இப்படி ஒருவரை இன்றைய தலைமுறையில் காண்பது அரிது.
அழகியசிங்கரைப் பொறுத்தவரை இலக்கியத்தை நேசிப்பது என்பது வெறுமனே புத்தகம் வாசிப்பது. விரும்பியதை எழுதுவது மட்டுமில்லை. நல்ல இலக்கியத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது, முக்கியப் படைப்பாளிகளுக்காகக் கூட்டம் நடத்துவது, சிற்றிதழ் வெளியிடுவது,, தேடித்தேடி இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வது என இடைவிடாமல் செயல்படுவதாகும். அந்த ஆர்வம் இன்றும் குறையாமல் தொடர்கிறது.
கவிஞர் நகுலன் அழகியசிங்கர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சென்னை வரும் நாட்களில் அவருக்குத் துணையாக அழகியசிங்கர் எப்போதுமிருப்பார். நகுலனின் கவிதைகள் விருட்சத்தில் தொடர்ந்து வெளியாகியுள்ளன. அசோகமித்ரனும் ஞானக்கூத்தனும் ஆனந்தும் விருட்சத்தில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
விருட்சம் வெளியிட்டுள்ள சம்பத் கதைகள். க.நா.சு கவிதைகள். ஞானக்கூத்தன் கட்டுரைகள், யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி அறிமுகநூல் போன்றவை மிக முக்கியமான புத்தகங்கள். குறைந்த விலையில் விற்கபட்ட போதும் அதற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இன்றும் அவரிடம் பிரதிகள் உள்ளன.
அசோகமித்ரனின் எழுத்தில் காணப்படும் மெல்லிய நகைச்சுவை உணர்வு அழகியசிங்கரிடமும் உண்டு. அவரது கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கக்கூடியவன். எளிய அன்றாட விஷயங்களில் இருந்து முக்கியமான தத்துவக் கட்டுரைகள் வரை எதைப்பற்றி எழுதினாலும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். தன்னைக் கேலி செய்து கொள்ளும் குணம் கொண்ட எழுத்து எப்போதுமே அசலானது. அதற்குத் தைரியமும் வெளிப்படையான மனதும் வேண்டும்.
சாகித்திய அகாதமி கூட்டத்தில் அழகியசிங்கரை சந்தித்த போது அவரது நேர்பக்கம் என்ற கட்டுரைதொகுப்பினைத் தந்தார். அச்சிடப்பட்டு வைத்திருந்த புத்தகங்கள் சென்னை வெள்ளத்தில் நனைந்து போய்விட்டன எனச் சொல்லி ஈரக்கறை படிந்த புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார்
இந்த தொகுப்பில் 22 கட்டுரைகள் இருக்கின்றன. பாரதியார், சி.சு.செல்லப்பா, க.நா.சு,. ந.பிச்சமூர்த்தி, ஜானகிராமன், வெங்கட் சுவாமிநாதன். ஆத்மநாம், ஸ்டெல்லாபுரூஸ், ஐராவதம், நீல.பத்மநாபன். எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரையும் பற்றிய கட்டுரைகள். இவர்களை ஏன் தமிழ் சமூகம் பெரிதாகக் கொண்டாடவில்லை என்ற ஆதங்கம் எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக ஒலிக்கிறது.
ஒரு நுண்மையான இலக்கியவாசகராக தான் வாசித்த பிச்சமூர்த்தி, ஜானகிராமன், ஆத்மநாம். ஞானக்கூத்தன் போன்றோரின் படைப்புகளை நுட்பமாக அணுகி அவர்கள் எழுத்தின் தனித்துவத்தை அடையாளம் காட்டுகிறார்
ஜானகிராமன் சிறுகதையை பற்றி மதிப்பீடு செய்யும் போது ஆண் பெண் உறவின் அதீதப்போக்கை முரண்பாட்டை குபாரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக்காட்டியவர், எளிமையான நடையில் பூடகமாக எழுதுவது அவரது கலை. அதே பாணியை ஜானகிராமன் ஸ்வகரித்துக் கொண்டார். கு.பா.ரா இல்லாத குறையை போக்கியவர் ஜானகிராமன் ( பக் 41)
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுபவரில் முக்கியப்பங்கை வகிப்பவர் ஞானக்கூத்தன்., இவர் கவிதை என்று எதை எழுதினாலும் அங்கத உணர்வு தானகவே மேலோங்கி தென்படும். அதே போல உரைநடையில் அங்கத உணர்வுடன் எழுதுபவர் அசோகமித்ரன் ( பக் 48))
ஜராவதத்தைப் பார்க்கும் போது சம்பத் ஞாபகம் வரும். இரண்டு பேர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியிருப்பார்கள். இருவரும் நல்ல நண்பர்கள். பணம் பத்தும் செய்யும் என்ற கதையை இருவரும் சேர்ந்தே எழுதியிருக்கிறார்கள். சம்பத் ஐராவதத்தை விட சற்று தீவிரமானவர், ஒருமுறை பரீக்ஷா நாடகவிழாவில் சம்பத் சத்தம் போட்டு கத்தியதை நான் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன் (பக் 98)
செல்லப்பா கட்டுரையில் அவரைச் சந்திக்கச் சென்ற அனுபவத்தைக் கூறுவதுடன் செல்லப்பாவின் இலக்கிய விமர்சனமுறை. அவருக்கு விருது கிடைத்த போது ஏற்றுக்கொள்ள மறுத்த கோபம். எழுத்துப் பத்திரிக்கை எப்படி உருவாக்கபட்டது என்பது போன்ற அரிய விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்கிறார்.
க.நா.சு நூற்றாண்டு விழாவின் போது அவரது கவிதைகளை அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்தவர் அழகியசிங்கர். அந்த அளவு க.நா.சு மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். அவரைப்பற்றிய கட்டுரையில் வாடகை கொடுக்கமுடியாத நெருக்கடியில் தான் குடியிருந்த வீட்டை க.நா.சு சொல்லிக் கொள்ளாமல் காலி செய்து போய்விட்டதைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. தமிழ் இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துச் செய்து கொண்ட ஆளுமைகளின் வாழ்க்கை இப்படிதானிருந்திருக்கிறது. இன்றும் அதில் பெரிய மாற்றம் உருவாகிவிடவில்லை
இக்கட்டுரையில் ஞானக்கூத்தன் ஏன் எழுத்து பத்திரிக்கையில் எழுதவில்லை என்ற முக்கியமான கேள்வியை கேட்கிறார் அழகியசிங்கர். செல்லப்பா புதுக்கவிதையை மிகவும் ஆதரித்தவர். ஆனால் அவர் ஞானக்கூத்தன் கவிதைகளை ஏன் எழுத்தில் வெளியிடவில்லை என்பது புதிரே. ம.பொசியுடன் ஞானக்கூத்தன் கொண்டிருந்த நட்பு தான் காரணமா எனத்தெரியவில்லை.
நான் செல்லப்பாவை பலமுறை சந்தித்திருக்கிறேன். விளக்கு விருது அவருக்கு அளிக்கபட்ட போது வெளிரங்கராஜனுடன் சென்று அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன். செல்லப்பா அவரது கையெழுத்துப் பிரதிகளில் பல அச்சாகாமல் இருப்பதாகக் காட்டினார். இன்று வரை அவை வெளியானதாகத் தெரியவில்லை.
தனது புத்தகங்களை வெளியிடுவதை விடவும் பி.எஸ்.ராமையா புத்தகத்தை வெளியிட வேண்டும் என அந்தச் சந்திப்பில் செல்லப்பா பிடிவாதமாக இருந்தது இப்போது நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.
நகுலனை பற்றிய கட்டுரையில் நகுலனின் எழுத்து என்பது ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதுகிற எழுத்து எனக் குறிப்பிடுவது அவரைப்பற்றிய சரியான மதிப்பீடு.
நகுலனின் மிக முக்கியமான கடிதம் ஒன்று இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இது போலவே பிச்சமூர்த்தியின் ராகுகேது கதையை விமர்சிக்கும் போது அது எப்படி ஒரு மேஜிகல் ரியலிசப்பாணிக் கதை என எடுத்துக் காட்டுவது பாராட்டிற்குரியது.
இந்தத்தொகுப்பின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று பிரமிள் பற்றியது , இதில் பிரமிளின் ஆளுமையை. அவரது கவிதைகளின் இயல்பை., பிரமிளின் கடைசிநாட்களை சிறப்பாக பதிவு செய்துள்ளார். ஒரு வாசகரின் விமர்சனத்திற்கு பிரமிள் எழுதியுள்ள கோபமான பதில் இக்கட்டுரையில் வெளியாகியுள்ளது.
தமிழ் அறிவு ஜீவித்தளத்தில் இயங்குபவன் என்ற முறையில் என் கவனம் முழுவதும் என் சிருஷ்டி சக்திகளை அதன் புதுமை மாறாமல் காப்பாற்றுவதிலேயே தான் இருக்கிறது. இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் சீரழிந்த சில அடிப்படைகளுக்கு இணங்கிப்போகும் தன்மையைச் சிருஷ்டித்துறை பெற்றுள்ளது. இந்தியமரபு ஜாதியத்தைப் பலப்படுத்தும் மதத்தை தனக்குள் பெற்றுள்ளது. அறிவுஜீவியான நான் எல்லாச் சமுதாய இலக்கியப் பிரச்சனைகளிலும் மதச்சார்ப்பற் அணுகுமுறையையே கைக்கொள்கிறேன் (பக் 65)
இதைப் பிரமிளின் பிரகடனம் என்றே சொல்லவேண்டும்.
ஸ்டெல்லாபுருஸ் பற்றித் தனிநூல் ஒன்றை அழகியசிங்கர் வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்டெல்லாபுரூஸின் ஆளுமையை விவரிப்பதுடன் அவர்கள் இருவருக்குமான நட்பையும் இலக்கியப் பகிர்தலையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் ஸ்டெல்லாபுரூஸ் பற்றிய ஒரு கட்டுரையிருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியுடன் எழுதப்பட்ட நினைவுப்பதிவது
அழகியசிங்கரின் கட்டுரைகள் எளிய மொழியில் நேரடியாக நம் முன் அமர்ந்து சொல்வது போல எழுதப்பட்டிருக்கின்றன. அலங்காரங்களோ, மிகை விவரிப்புகளோ கிடையாது. அதே நேரம் தனது நுண்மையான அவதானிப்புகளை, மதிப்பீடுகளை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார். சுயவிமர்சனமும் இதில் அடங்கும்.
இந்தக் கட்டுரைகளின் வழிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், நவீன தமிழ் இலக்கியம் வளர்ந்த விதம், அதன் முக்கியப் போக்குகள், இலக்கிய நிகழ்வுகள். சிறுபத்திரிக்கைகளின் பங்களிப்பு, எழுத்தாளர்களின் இயல்புகள் போன்றவற்றையும் ஒருங்கே அறிந்து கொள்ள முடிவது சிறப்பு.
விருட்சம் வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் போலவே இதன் விலையும் மிகவும் குறைவு ரூ.120.
பின்குறிப்பு
சம்பத் சிறுகதைகளைத் தொகுத்து விருட்சம் தனிநூலாக வெளியிட்டுள்ளது. அது மிக முக்கியமான தொகுப்பு. கவிதைக்காக என்ற ஞானக்கூத்தனின் கட்டுரைகள் தொகுப்பும் மிகமிக முக்கியமானது.
புத்தகத்தை வாங்க :
விருட்சம் வெளியீடு
சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்
7 ராகவன் காலனி. மேற்குமாம்பலம். சென்னை-33
தொலைபேசி எண்- 044 24710610
செல் -9444113205
navina.virut

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன