நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

அழகியசிங்கர்








எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்.  பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார்.  கூடவே தபால் தலைகளையும் சேர்த்து அனுப்புவார்.  ஒரு வார்த்தை எழுதுவார்.  கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று.  யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.  விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டார்.  பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில் என்னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.  
மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என்ற நகுலன் கவிதைகளை நாங்கள் நடேசன் பூங்காவில் வாசித்தோம்.  அவற்றைக் கேட்கும்போது ஒரே சிரிப்பு. இதோ இங்கேயும் அவற்றை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன்.  நீங்களும் சிரிப்பீர்கள்.
ஐந்து கவிதைகள் 

‘நகுலன்’
வால்ட் விட்மன் :

அவன் “ஆத்ம ஸ்துதி”
என்ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங்கேயோ
நான் உனக்காகக்
காத்துக்  கொண்டிருக்கிறேன்                     ******

வந்தவன் கேட்டான்
“என்னைத் தெரியுமா?”
“தெரியவில்லையே”
என்றேன்.
“உன்னைத் தெரியுமா?”
என்று கேட்டான்
“தெரியவில்லையே”
என்றேன்.
“பின் என்னதான் தெரியும்?”
என்றான்
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன். *********

அவன்
செத்துச் சில்லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன்றும்
தெரிந்து கொள்வதில்லை
என்ற நிலையில்

அவன் சாவு
இன்றும் இவனை
என்னவோ செய்கிறது.
*********

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனித உடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோ போவது
மாதிரி தோன்றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில்லை ******

சென்ற இடத்தில்
தெரியாமல்
“ராயல்டி”
என்று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
“போட்டது
கை நஷ்டம்
ராயல்டி வேறு”
என்று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும்பி விட்டேன்

அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன்னேன்
“உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும்”
“பின்ý”
“வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற்கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண்டும்”

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என்ன சொல்வாய்
என்று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதுதான்
என் விருப்பமும்
என்றாள்

பிறகு
அவள்
ஜோல்னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங்கிக் கொள்
உனக்கு
என்றுதான்
கொண்டு வந்திருக்கிறேன்
என்று
ஒரு குப்பி கான்யாக்கும்
ஒரு பாக்கெட்
‘ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என்று
சொல்லிச்சென்றாள்

எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின்ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என்று
என்னை நானே
சமாளித்துக் கொண்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன