என் நாடக முயற்சி

அழகியசிங்கர்


இந்த மாதம இருபதாம் தேதி  அதாவது நேற்று விருட்சம் இலக்கியச் சந்திப்பில் üநானும் என் நாடகங்களும்ý என்ற தலைப்பில் எஸ் எம் ஏ ராம் சிறப்பாகப் பேசினார்.  அன்று முழுவதும் எனக்கு நேரமே சரியாகக் கிடைக்கவில்லை.  என் வீட்டில் உள்ளவர்கள் மகாமகத்திற்குக் கிளம்ப ஆயுத்தமாக இருந்தார்கள்.  அவர்களுக்கு உதவி செய்யும் சூழலில் நான் மாட்டிக்கொண்டிருந்தேன்.  ராம் நாடகங்கள் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தேன்.  இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.  முதல் மூன்று நாடகங்கள் படித்து விட்டேன்.  எப்போ வருவாரோ நாடகம் படிக்க ஆரம்பிக்கும்போது படிக்க நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டேன்.   
விருட்சம் கூட்டத்தில் ராம் எப்படி ஒவ்வொரு நாடகத்தையும் எழுத நேர்ந்தது என்பதைப் பற்றி பேசினார்.  நானும் ஒரு காலத்தில் நாடகப் பித்து, சினிமாப் பித்து.  அந்தக் காலத்தில் சோ நாடகங்களை ரசித்துப் பார்ப்பேன். ராணி சீதையம்மாள் அரங்கில் பல வங்கிகள் சேர்ந்து பல நாடகங்களை போட்டிக்காக அரங்கேற்றம் செய்யும்.  பார்த்து ரசித்திருக்கிறேன். அது மாதிரி நாடகங்கள் ஏன் சபாவில் வரவில்லை என்ற வருத்தம்  அப்போதே உண்டு.  ஏன்எனில் சபா நாடகங்கள் பெரும்பாலும் அசட்டுத்தனமான ஜோக்குகளை உள்ளடக்கி இருக்கும்.  டிவியில் சீரியல் கூட அப்படி இல்லை. வீதி நாடகங்கள் பார்த்திருக்கிறேன்.  அவற்றில் பிரச்சார நெடி தலை தூக்கும்.  அப்படியும் இப்படியுமாய் குதிப்பார்கள்.  முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொள்வார்கள். சுவரொட்டிகள் என்ற முத்துசாமி நாடகத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் ஆனால் பெரிதாக புரிந்துகொண்ட பாவனையில் அங்கு உள்ளவர்களைப் பார்த்தபடி வந்திருக்கிறேன்.  சமீபத்தில் நான் ரசித்த ஒரு நாடகம் அம்ஷன்குமார் வங்காள மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்த  வேலி என்ற நாடகம்.  
பரீக்ஷா நாடகத்தில் பங்கு கொண்டு நடித்திருக்கிறேன். அதுவும் ஒரே ஒரு பாத்திரத்தில். அப்பாவி இளைஞனாக நான் நடித்திருப்பேன்.  அறந்தை நாராயணனின் மூர் மார்க்கேட் என்ற நாடகம் அது.  அந்த நாடகம் நடித்துவிட்டு வீடு திரும்பியபோது, ராத்திரி முழுவதும் தூக்கம் வராமல் அவதிப்பட்டதுண்டு.  மேடையில் ஒரே ஒரு முறைதான் அப்பாவி இளைஞன் மேடையில் வருவான்.  அதுவும் பாதி மேடை வரை.  அன்று தூக்கத்தில் அந்த அப்பாவி இளைஞன் மேடையில் நடந்து போவதுபோல் நடந்து நடந்து போய்க் கொண்டிருந்தேன்.  அப்புறம் யோசித்தேன்.  நடிப்புக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று. பின்னாட்களில் நிஜந்தன் நாடகங்களில் நடித்தபோது இந்த உண்மை பட்டவர்த்தமாக தெரிந்தது. இப்போது நடிக்கக் கூப்பிட்டால் போய் நடிப்பேன்.  ஆனால் வசனம் பேசாத நாடகமாக இருக்க வேண்டும்.  வசனம் பேசும்போதுதான் பிரச்சினை வந்து விடுகிறது.  கேட்பவர்க்கும் வந்து விடுகிறது.  எனக்கும் வந்து விடுகிறது.  
நாடகம் நடத்திக் காட்டப்படும் நிகழ்வு கலை.  ஆனால் அதில் நடிப்பது என்பதும், ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்வதும் அவ்வளவு சுலபமான விஷயமல்ல.   எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முறை நாடகம் ஒன்றை எழுதி அதை அரங்கேற்றம் செய்தோம்.  நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர்தான் என் நாடக அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தார்.  அவர்தான் அந்த நாடகத்தை டைரக்ட் செய்தார். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் நாடகத்தில் பெண்களே கிடையாது.  எல்லோரும் ஆண்கள்.  இரண்டு வில்லன்கள்.  நான் ஒரு வில்லனாக நடித்தேன்.  என் நண்பன் பெருமாள் இன்னொரு வில்லன்.  உண்மையாகவே அவன் வில்லனாக அந்த நாடகத்தில் மாறிவிட்டான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிவில்லை.  நாடகப்படி நான் வசனம் பேசி அவன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்க வேண்டும்.  பெருமாள் என்னிடம் கத்தியைக் கொடுக்கவில்லை.  லேசில் அவன் கையிலிருந்து கத்தியை வாங்க முடியவில்லை. அதனால் என் பலத்தைப் பிரயோகம் செய்து அவனிடமிருந்து கத்தியைப் பிடுங்கும்படி ஆகிவிட்டது.  அடுத்தக் காட்சியில் என் தம்பி போலீஸ்காரன்.  அவன் நடந்து வரும்போது மைக்கைத் தட்ட மைக் உயிர் விட சத்தம் போய்விட்டது.  நாடகமும் அவுட். போதும் நாடகம் போட்டது  என்று சொல்லி முழுதாக முடிக்கப்படாமலே நாடகத்தை நிறுத்திவிட்டார்கள்.   நின்று விட்டதே என்ற வருத்தம் எனக்கு.  ஆனால் பெருமாளைப் பார்த்துக் கேட்டேன்,’ஏன் கத்தியைப் பிடுங்க வந்தபோது, கத்தியைக் கொடுக்கவில்லை,’ என்று. ‘நீ இன்னும் கொஞ்சம் வசனம் பேச வேண்டும், ஏன் பேசவில்லை,’ என்றான்.  படுபாவி. நான்தான் அந்த நாடகத்தையே எழுதியவன்.  என்னிடம் இன்னும் கொஞ்சம் வசனம் எதிர்பார்த்திருக்கிறான். 
வணிக ரீதியாக ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஒரு குழு முயற்சி செய்தது. அதில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  ஒரு பெண்ணைப் பார்த்து நான் காதல் வசனம் பேச வேண்டும்.  ஒரு முறை பேசும்போது வசனம் தடுமாறியது.  வசனத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு பேசும்போது, டைரக்டர் என்னைக் கூப்பிட்டுக் கேட்டார்.  ‘ஆமாம்.  நீங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து வசனம் பேசும்போது, உங்கள் மார்பில் ஏன் கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுகிறீர்கள்.’ என்று கேட்டார். என்னை அறியாமல் வசனம் பேசும்போது கை போய்விடுகிறது என்று தோன்றியது. என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.  
நாடகம் அரங்கேற்றம் செய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை.  ஆனாலும் எங்கள் வீட்டு உறவினரின் திருமண வைபவத்தில் நானும் என் ஒன்றுவிட்ட சகோரரும்  நாடகம் நிகழ்த்தியிருக்கிறேன்.  எல்லாம் தத்துப்பித்துன்னு இருக்கும்.  நான் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று எழுதினாலும், உள்ளுக்குள் நாடகம் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.  நானும் சில நாடகங்களை எழுதிப் பார்த்தேன். எனக்கு என் மீதே நம்பிக்கை இல்லை. நடிப்பதிலும் நம்பிக்கை இல்லை, நாடகம் எழுதுவதிலும் நம்பிக்கை இல்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் ரங்கராஜனை சந்தித்தேன்.  அவர் நாடகவெளி என்ற பத்திரிகை நடத்திக்கொண்டு வந்தார்.  ஒவ்வொரு மாதமும் நாடக வெளி இதழைப் பார்க்கும்போது எனக்கும் ஒரு நாடகம் நாடகவெளியில் எழுதி வெளிவர வேண்டும் என்ற  ஆசை இருந்துகொண்டே இருக்கும்.  அதே சமயத்தில் சந்தேகமும் இருக்கும.  வெளி ரங்கராஜன் என் நாடகத்தைப் பிரசுரம் செய்வாரா என்று.   அப்போது ராம் எழுதிய எப்ப வருவாரோ நாடகம் பிரபலமானது.  எல்லோரும் அதைப் பற்றி பேசுவார்கள்.  நாடக வெளியில் வந்திருந்த அந்த நாடகத்தை அரங்கேற்றமும் செய்திருந்தார்கள்.  எனக்கோ ஒரு நாடகமாவது நாடகவெளியில் பிரசுரமாக வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.
நானும் ஒரு நாடகம் எழுதி விட்டேன்.  நான் அடிக்கடி சந்திக்கும் நண்பர்களில் ரங்கராஜனும் ஒருவர்.  தயங்கி தயங்கி நாடக வெளிக்கு நாடகத்தைக் கொடுத்தேன்.  உண்மையில் நாடக வெளி அந்த நாடகத்தைப் பிரசுரம் செய்யாவிட்டால் நவீன விருட்சத்தில் பிரசுரம் செய்து விடலாமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  உண்மையில் விருட்சம் கவிதை கதைக்கான பத்திரிகை.  அதில் நாடகம் வருவது சரியாக இருக்காது.
ஆனால் வெளி ரங்கராஜன் என் நாடகத்தை பிரசுரம் செய்து விட்டார்.  என் நாடகத்தின் பெயர் அகாலத்தில் வந்தவர்கள்.  ஒவ்வொரு முறையும் அந்த நாடகத்தை யாரையாவது நடிக்க வைத்து அரங்கேற்றம் செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  அதில் ஒரு பாத்திரத்தில் நானும் நடிக்கலாமென்று யோசிப்பேன்.  நாடகமாகப் போட முடியவில்லை என்றால் குறும்படமாக எடுத்தால் என்ன என்றெல்லாம் இப்போதும் எனக்குத் தோன்றிகொண்டிருக்கிறது.  
இன்று ராம் நாடகம் பற்றி பேசும்போது எனக்கு சில ஆச்சரியங்கள். ஒவ்வொரு நாடகத்தையும் எந்த முறையைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டு போயிருக்கிறார் என்று அவர் விவரித்துச் சொன்னார்.  அவருடைய நாடகங்களை பலர் பாராட்டி உள்ளார்கள். நாடகமாக பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  இந்திரா பார்ததசாரதி அவர் நாடகத்தை சிலாகித்து எழுதியிருக்கிறார்.    
ஆனால் நான் எழுதிய நாடகம் பிரபலமாகவில்லை. எனக்கு நாடகம் பற்றி எந்தக் குறிக்கோளும் இல்லை.  ந முத்துசாமி மாதிரி நாடகம் எழுத முடியாது என்று தோன்றும்.   ஆனால் இந்திரா பார்த்தசாரதி மாதிரி நாடக முயற்சி செய்யலாம் என்று நினைபபேன்.   நேற்று விருட்சம் கூட்டம் முடிந்து வீடு வரும்போது, ராஜாமணி என்ற நண்பரிடம் பேசிக்கொண்டு வந்தேன்.  அகாலத்தில் வந்தவர்கள் என்ற என் நாடகத்தை மேடை ஏற்றினால் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்.  குறைந்தது பத்தாயிரம் ஆகும் என்றார். அதுவும் ரிஹர்சலுக்காக டீ காப்பி டிபன் செலவுக்காக ஆகும் தொகையாம். இன்னும் நாடக அரங்கத்தைப் பிடிக்க அதிகம் செலவாகும் என்றார். சபாக்காரர்களைப் பிடிக்க முடியாதாம்.  நாடகம் நடத்தி விடலாம்.  ஆனால் பார்க்க எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை என்றார்.
மனிதன் நாடகம் போட வேண்டுமென்ற ஆசையைக் கொன்று விட்டார். இப்போது தோன்றுகிறது நாடகம் அரங்கேற்றம் செய்வதை விட, இன்னும் நாடகம் எழுதலாமாவென்று.  
அகாலத்தில் வந்தவர்கள் என்ற என் நாடகத்தை தனிமையில் வாய்விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *