அழகியசிங்கர்
இது மாதிரி தலைப்பில் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. நவீன விருட்சம் 99வது இதழ் வந்து விட்டது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேல் நவீன விருட்சம் இதழுடன் பயணம்.
திங்கட்கிழமை காலையில் அச்சகத்தாருடன் போனில் பேசினேன். “இதழ் ரெடியாய் இருக்கு. வந்து எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார் அச்சகத்தார்.
“எப்படி வருது? ஆட்டோவில் போட்டு எடுத்துக்கொண்டு வந்துடலாமா?” என்று கேட்டேன்.
“ஏன் சார், உங்க கிட்டேதான் நானோ கார் இருக்கே..அதில கொண்டு போங்களேன்,”என்றார்.
நானோ காரை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள பிரஸ்ஸிலிருந்து விருட்சம் இதழ் பிரதிகளை அள்ளிக்கொண்டு வருவதை நினைத்து யோசனையாக இருந்தது. ஏனென்றால் நான் நானோ கார் ஓட்டும் ஜாம்பவானாக இருந்தாலும், திருவல்லிக்கேணி சந்துகளில் ஓட்டும திறமைசாலியா என்பது தெரியவில்லை.
என்னை தைரியப் படுத்தவே என் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டிருப்பாள்.
“ஏன் நானோவில் போகிறீர்கள்? ஆட்டோவை எடுத்துக்கொண்டு போங்கள்…பீக் ஹவர்ஸில் உங்களுக்கு கார் ஓட்ட வராது,” என்று பிரேக் போட்டாள்.
எனக்கோ கோபமான கோபம். தினமும் நான் நானோ காரை அசோக்நகரில் உள்ள பெண்கள் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளியில் நிறுத்திவிட்டு பின் ஒரு வாக் பண்ணிவிட்டு நானோ காரை ஓட்டி வீட்டுக்கு வந்து விடுவேன். இப்படி இருக்கும் நான் ஒரு நல்ல சந்தர்பபம் விருட்சம் எடுத்துவர கிடைத்தால் சும்மாவா விடுவது.
ஆனாலும் மனைவி பிரேக் போட்டதில் கொஞ்சம் உதறல். பின் மனைவியைத் திட்ட ஆரம்பித்தேன். “எப்போதும் காரில் எங்காவது போகிறேன் என்றால், போய் வாருங்கள், என்று சொல்ல பழகிக்கொள்,”என்றேன்.
திரும்பவும் அச்சகத்தாரிடம் போன் செய்தேன். “ஏம்பா அந்தப் பெரிய தெருவில் நுழைய முடியாது காரை வைத்துக்கொணடு, இல்லையா?” என்றேன்.
“சார், நீங்கள் பெல்ஸ் ரோடு வழியாக என் கடைக்கு வந்து விடுங்கள். எதாவது பிரச்சினையாக இருந்தால் எனக்குப் போன் செய்யுங்கள், என் டிரைவரை அனுப்புகிறேன்,”என்றார்.
சாமியைக் கும்பிட்டு விட்டு காரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன். உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் என் மனைவி என்னிடம் காட்டிக்கொள்ள வில்லை.
வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை எட்டினேன். பின் மெதுவாக பீச் பக்கமாக திருப்பினேன். பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த அரசாங்க பஸ்ஸின் உருமல் காதில் விழுந்தது. நான் நிதானமாக ஓட்டிக்கொண்டு கண்ணகி சிலைக்கு எதிரில் உள்ள தெருவில் திரும்பி, பெல்ஸ் தெருவில் காரைத் திருப்பினேன். என்னைத் தாண்டிக்கொண்டு பல டூ வீலர்கள் பறந்து கொண்டிருந்தன. பெரிய மனது பண்ணி அவற்றையெல்லாம் போக விட்டேன். ஆட்டோக்களை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருந்தன. வேறொரு கிரகத்திலிருந்து வந்த மனிதர்கள் மாதிரி அவர்கள் ஆட்டோக்களை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
தெரியாமல் பெரிய தெருவில் போவதற்கு இந்து பள்ளிக்கூடம் பக்கம் திரும்பி விட்டேன். பெரிய ஆபத்தை சந்தித்தேன். நானோ கார் எதிரில் குப்பை வாரும் வண்டியைப் போல பெரிய வண்டி. ஒரு பக்கம் டூ வீலர்களை சார்த்தி வைத்திருந்தார்கள். எப்படியும் இடிக்காமல் போக முடியாது. வண்டியை நகர்த்தத் தெரியாமல் வண்டியை நிறுத்தி விட்டேன். மனைவி கிளம்பும்போது தடுத்தது சரியாகிப் போய்விடும் என்று தோன்றியது.
யாரோ ஒருவர் ஒரு டூ வீலரை நகர்த்தி என்னைப் போக அனுமதித்தார். எப்படியோ தப்பித்துக்கொண்டு அச்சகத்திற்கு வந்து விட்டேன். உலக பெரிய சாதனை மாதிரி நான் வண்டி ஓட்டிய மகாத்மத்தை அச்சகத்தாரிடம் சொன்னேன். அவர் சிரித்தபடியே, ‘உங்களை விட பெரிய காரை வைத்திருக்கிறேன்,’ என்றார். ஒரு வழியாக நவீன விருட்சம் 99வது இதழ் என் வீட்டிற்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது.
இதழ் திருப்தியாக வெளிவந்திருந்தது. வழக்கம்போல் பலருடைய படைப்புகள் கொண்ட இதழ்தான் இது.
இதழுக்கு பங்களிப்பு அளித்தவர்களின் படைப்புகள் பற்றிய குறிப்பை இங்கு அறிவிக்கிறேன் :
இதழின் அட்டை ஓவியம் : கவிஞர் வைதீஸ்வரன்.
1. கோயிலுக்குள் ஒரு யானை – ஞானக்கூத்தன் 4
2. என் பூனைகள் – சாரலஸ் புக்கோவ்ஸ்கி – 15
தமிழில் : ராமலக்ஷ்மி
3. தனித்துவங்கள் – கவிதை – ராமலக்ஷ்மி 17
4. தப்பித்தல் – கவிதை – ராமலக்ஷ்மி 18
5. சின்ன சின்ன லயங்கள் – வைதீஸ்வரன் 18
9. பிரேதத்துடன் ஒரு பயணம் – சிறுகதை –
ராஜகோபாலன் 19
10. கோப்பைகள் – கவிதை – பானுமதி ந. 23
11. தீப்பெட்டி – கவிதை – உமாபாலு 24
12. சார்வாகன் (1929-2015) – அசோகமித்திரன் 25
13. வெள்ளம் பற்றிய கவிதை – அழகியசிங்கர் 27
14. பிரிவுபசாரம் – சிறுகதை -அசோகமித்திரன் 28
15. ஒரு திரைப்படம் ஒரு நினைவு – பிரபு 32
16. சங்கதிகள் – கவிதை – ஜெ பாஸ்கரன் 36
17. யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி – அழகியசிங்கர் 37
18. புத்தக விமர்சனம் – அழகியசிங்கர் 40
19. புரியவில்லை – சிறுகதை – ஸிந்துஜா 43
20. நடப்பியல் – கவிதை – நீல பத்மநாபன் 50
21. கழுதைகளின் உலகம் – சா இளையராஜா 50
22. இந்திய அரசியல் சாஸனம் – அசோகமித்திரன் 51
23. காத்தவராயன் – கவிதை – வளவ துரையன் 53
24. கவிஞர் சிறகா கவிதைகள் இரண்டு 54
25. டீ – சிறுகதை – அழகியசிங்கர் 56
26. நினைவுகளின் நிழல்கள்-சிறுகதை-
ஜெ பாஸ்கரன் 65
27. 13வது சென்னை சர்வேத திரைப்படவிழா 70
28. ஞானக்கூத்தன் கவிதை 74
29. மரணத்தின் கண்ணாடி – காவேல்கர் 75
30. விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும் 79
இந்த இதழ் சென்னையில் மூன்று இடஙகளில் இப்போதைக்குக் கிடைக்கும். 1. நியூ புக்லேண்ட்ஸ், தி நகர், சென்னை 17 2. டிஸ்கவரி புத்தக பேலஸ், கே கே நகர், சென்னை 3. காந்தி புத்தக நிலையம், கிரோம்பேட்டை ரயில்வே நிலையம்.
யாருக்காவது பத்திரிகை வேண்டுமென்றால் என்னை இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். navina.virutcham@gmail.com
தனி இதழ் நவீன விருட்சம் விலை ரூ.15. ஆண்டுச் சந்தா ரூ.60. தப்பித்தவறி சந்தா அனுப்பவேண்டுமென்று உங்கள் மனசில் பட்டால்
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031 என்ற கணக்கில் அனுப்பவும்.
நவீன விருட்சம் அடுத்த இதழ் 100வது இதழ். இன்னும் அதிகப் பக்கங்களுடன் கொண்டு வர உள்ளேன். தயவுசெய்து படைப்புகளை யுனிகோட்டில் அடித்து navina.virutcham@gmail.com அனுப்பவும்.