தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
அறிவேன். நான் அறிவேன்.
வரையறுக்கப்பட்ட அவைகளை,
அவற்றின் வேறுபட்ட தேவைகளை
மற்றும் கவலைகளை.
ஆயினும் அவற்றைக் கவனித்து
அவற்றிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.
சிறிதளவே அவை தெரிந்து வைத்திருப்பது
எனக்குப் பிடிக்கிறது,
அவை அறிந்தவை மிக ஆழமானவை.
அவை முறையிடும்
ஆனால் கவலைப் படுவதில்லை.
ஆச்சரியமூட்டும் மிடுக்குடன்
அவை நடை போடும்.
நேரடியான எளிமையுடன்
அவை உறங்கி விடுவது
மனிதர்களால் புரிந்து
கொள்ளவே முடியாத ஒன்று.
அவற்றின் கண்கள்
நம் கண்களை விட
மிக அழகானவை.
தயக்கமோ
உறுத்தலோ இன்றி
ஒரு நாளில்
இருபது மணி நேரத்திற்கு
உறங்கக் கூடியவை.
எப்போதெல்லாம்
சோர்வாக உணருகிறேனோ
அப்போதெல்லாம் நான் செய்ய வேண்டியது
என் பூனைகளைக் கவனிப்பதுதான்.
என் தைரியம் திரும்பி வந்து விடுகிறது.
இந்தப் பிராணிகளை
ஆராய்ச்சி செய்கிறேன்.
அவை என்னுடைய
ஆசான்கள்.
*