13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்

அழகியசிங்கர்


ஒரு வழியாக 13வது சர்வதேச திரைப்பட விழா  13.01.2015 அன்று  முடிவடைந்துள்ளது.  6ஆம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை 12 படங்கள் பார்த்துவிட்டேன். உட்லன்ட் தியேட்டரில் ஐந்து படங்களும், உடலன்ட் சிம்போனியில் 3 படமும், ஆர்கேவியில் 3 படங்களும், ஐநக்ஸில் 1 படமும் பார்த்து முடித்துவிட்டேன்.  ஒரு நாளில் இரண்டு படங்கள் பார்ப்பது எனக்கு இயலாது மாதிரியே தோன்றியது.  
ஒவ்வொரு தியேட்டரிலும் கூட்டம் அதிகம்.  சிலசமயம் தாமதமாக வந்தால் உட்கார இடத்தைக் கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருக்கும்.  படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிலபேர்கள் படத்தை முழுதாகப் பார்க்காமல் தியேட்டரை விட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள். 
ஒரே இடத்தில் உட்கார்ந்து அசையாமல் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு பார்க்கிற அனுபவத்தில் எனக்கு இடுப்பு வலி வந்துவிடும்.  சிறிது நேரம் வலியுடன் படம் பார்க்க வேண்டியிருக்கும்.  எப்போதும் என்னால் நெருக்கமாக ஓரிடத்தில் ரொம்ப நேரம் உட்கார முடிந்ததில்லை.  அப்புறம் தலை. அசையாமல் வைத்திருப்பதால் எழுந்திருந்து நகரும்போது ஜாக்கிரதையாக நடக்க வேண்டி உள்ளது.  
மேலும் சினிமா பார்க்க வரும்போது ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டு இருக்கும்.  என் அப்பாதான் அது.  93 வயதான அவரை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும்.  அவர் சில நேரம் தானாகவே சாப்பாடை எடுத்துச் சாப்பிடுவார்.  சில நேரம் சாப்பிட மாட்டார்.  அவரைக் கூப்பிட்டு தொந்தரவு செய்ய வேண்டும்.  அதனால் தொடர்ந்து சினிமா தியேட்டரில் இரண்டு சினிமாக்களைப் பார்ப்பது சற்று சிரமமாக இருக்கும்.
13ஆம் தேதி காலையில் ஆர்க்கேவியில் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  இதுவரை எத்தனைப் படங்கள் பார்த்தீர்கள் என்று கேட்டேன்.  45 என்றார்.  எனக்கு அதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.  அவருக்கும் என் வயது.  ஆனால் அவருக்கு உபாதைகள் என்னை விட குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  ஆனால் அவர் சினிமாவில் தொடர்பு உடையவர்.  எடிட்டிங் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் ஒரு தகவலை சொன்னார்.  ஏதோ ஒரு படத்தில் காமெரா வர பிரச்சினையாகிவிட்டதாம்.  உடனே செல்போனில் அந்தக் காட்சியைப் படம் எடுத்துவிட்டார்களாம்.  அந்த மாதிரி காட்சி நன்றாக வந்ததா என்று நான் கேட்டேன்.  நன்றாகவே வந்துள்ளது. பார்க்கிறவர்களுக்குத் தெரியாது என்றார்.  
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் சினிமாப் படங்கள் எடுக்கிறார்கள்.  அதில் ஒரு துளிதான் சர்வதேசத் திரைப்படம் என்பது.  அந்தத் துளியில் உள்ள அத்தனைப் படங்களையும் பார்க்க முடியவில்லை.  எதாவது சந்தர்ப்பத்தில் இன்னும் சில படங்களைப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.  
நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் என்று பலர் இதில் ஈடுபட்டு படத்தைக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் யாருக்காக?  பார்வையாளர்களுக்காகத்தான். பார்வையாளன் தனக்கு விருப்பமான நேரத்தில் இந்தச் சினிமாக்களைப் பார்க்கிறான்.  இந்தப் பார்வையாளனை எல்லா சினிமாக்களும் கவர்ந்து விட முடியுமா?  கேள்விகுறிதான். பார்வையாளன்தான் எல்லா விதங்களிலும் சிறந்தவன்.  அவனுக்கு ஒரு படத்தை எடுப்பவரின் வலி என்ன என்று தெரியாது.  அதன் அவதி தெரியாது. அவன் சுதந்திரமானவன். விரும்பினால் அவன் ஒரு படத்தைப் பார்க்க முடியும். அல்லது வேண்டாமென்று விட்டுவிட முடியும்.  படத்தை எடுப்பவர்கள் பணத்தை அதில் போட்டு பணம் கிடைக்குமா என்று எதிர் பார்க்கிறார்கள். பலர் நடித்தாலும் பார்வையாளன்தான் சொல்ல வேண்டும்.  அந்தப் படத்தில் அந்த நடிகர் நன்றாக நடித்துள்ளார் என்று.  திரும்பவும் சொல்கிறேன்  நடிப்பவர்களை விட மிகச் சுதந்திரமானவன் பார்வையாளன்தான்.   எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அறுபது ஆண்டு இறுதியிலிருந்து சினிமாப் படங்கைளையே பார்க்கவில்லை என்று சொன்னார்.  பெரும்பாலோருக்கு தியேட்டரில் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது.  குறிப்பாக வயதானவர்களுக்கு தியேட்டரில் சினிமா பார்க்க முடியவில்லை. நேற்று  ஐநாக்ஸ் என்ற தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன்.  தியேட்டரில் உள்ளே உட்கார முடியவில்லை.  ஒரே ஏசி.  யூரின் போக நடு படத்தில் எழுந்து போக வேண்டியிருந்தது.  படத்தில் நடிப்பவர்களைப் பற்றி யாராவது எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 
 இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள்.  இதன் மூலம் சிலருக்கு புகழ் கிடைக்கும்.  அதுவும் மாயை. நடிடத்துக் கொண்டே இருக்க வேண்டும்
.  அப்போதுதான் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிப்பில் சிறந்த பெரிய நகைச்சுவை நடிகர் ஒருவரை பார்த்திருக்கிறேன்.  நேரில் அவர் பேசுவதைக் கேட்கும்போது  அவர் சாதாரண அறிவு கூட இல்லாதவர் என்று தோன்றியது.  
இதுமாதிரியான படங்களைப் பார்ப்பதன் முக்கியமான விஷயம்.  இடம்.   உலகில் வெவ்வேறு இடங்களை நாம் நேரில் பார்க்க முடியாது. இது மாதிரியான படங்கள் மூலமாகத்தான் பார்க்க முடியும்.    மொழி.  அந்த மொழி நமக்குப் புரியாவிட்டாலும், அந்த பேச்சு மொழி மூலம் எதுமாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடிகிறது.  மனிதர்கள்.  ஆண்கள் பெண்கள் குழந்தைகள்.  அவர்கள் வாழ்க்கை முறை.  சினிமா மூலம் இன்னொரு வாழ்க்கை முறையை யோசித்துப் பார்க்கலாம்.   
இதுமாதிரியான உலகச் சினிமாக்கள் தமிழில் படம் எடுப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியும்.  பல படங்களைப் பார்க்கும்போது மிகச் சாதாரண விஷயங்களைக் கூட எப்படி போரடிக்காமல் படம் எடுக்க முடிகிறது என்பதையும் இது காட்டுகிறது.  பல விதங்களில் படம் எடுக்கலாம் என்பதை யோசிக்க வைக்கிறது.  சுவாரசியமாக எந்தக் கதையும் படம் மூலம் சொல்லலாம் என்றும் தோன்றுகிறது.  டாக்ஸி என்ற ஒரு இரானியப் படத்தில் டாக்ஸி ஓட்டிக்கொண்டு போவதிலேயே ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தேன். 
 அதுவும் போரடிக்காமல் படத்தை எடுத்துள்ளார்கள். டாக்ஸியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 
பெரும்பாலான படங்களில் சாப்பிடுவதையே காட்டுகிறார்கள்.  எதாவது கிளப்பில், அல்லது வீட்டில்.  குடித்துக்கொண்டே இருக்கிறார்கள், அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அதெல்லாம் மீறி வசீகரமாகவே இந்தப் படங்கள் எடுக்கப் படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *