அழகியசிங்கர்
திரைப்படத் துவக்க விழா அன்று காட்டிய படம் விக்டோரியா என்ற படம். இந்தப் படம் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். நான் சற்று தாமதமாகச் சென்றதால் முண்டி அடித்துக்கொண்டு போக வேண்டி உள்ளது. உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் ஒரு தள்ளு தள்ளி உள்ளே சென்றேன். ஏற்கனவே சுந்தர்ராஜன் அவர்களிடம் சொன்னதால் அவர் இடம் பிடித்து வைத்திருந்தார்.
மிக எளிமையாக துவக்க விழா நடந்தது. யாரும் பெரிய வார்த்தைகளையே பேசவில்லை. மேலும் படம் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் கொஞ்சமாகப் பேசினார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்தது விழா. குத்துவிளக்கு ஏற்றினார்கள். விக்டோரியா படம் எடுத்தவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அந்தப் படத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார்.
இந்த விக்டோரியா என்ற படம் பல பரிசுப் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டுள்ளது. பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி உள்ளிட்ட ஆறுவிதமான பரிசுகள் பெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சுடுர்லா பிராண்ட் கோர்விலன் தன் கேமராவில் ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து சாதனை பண்ணி உள்ளார். அதாவது ஒரு நகரம், ஒரு இரவு, ஒரு ஷாட் என்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பெர்லின் என்ற இடத்தில் ஒரு இரவில் எடுக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியம்தான். லையா கோஸ்டா என்ற நடிகை முதல் காட்சியிலிருந்து கடைசி வரை நடித்திருக்கிறார். ஒரு நடனவிடுதியில்தான் ஆரம்ப காட்சி ஆரம்பமாகிறது. விக்டோரியா என்ற பாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை அந்த இரவில் அந்த விடுதியில் இருட்டில் பலருடன் நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.
இந்தக் காட்சியின் முடிவில் விக்டோரியா அந்த இடத்தை விட்டு வெளியில் வருகிறாள். வெளியில் நான்கு இளைஞர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்தவண்ணம் இருக்கிறார்கள். விக்டோரியாவை அவர்கள் பார்த்தவுடன், அவளுடன் பேசுகிறார்கள். அவளுக்கு ஜெர்மன் மொழி தெரியாது. அவர்களுக்கு ஜெர்மனியைத் தவிர வேற மொழி தெரியாது. அதில் ஒருவனான சோன் அவளுடன் நெருக்கமாகப் பேச்சு கொடுக்கிறான். இது மாதிரி இந்தியா மாதிரியான ஒரு இடத்தில் நடந்தால், அதுவும் அந்தத் தனிமையான இரவு நேரத்தில், பாலியல் பலாத்காரம் தான் நடந்திருக்கும்.
படத்தை வேறுவிதமாக இந்தப் படத்தை இயக்கியவர் எடுத்திருக்க வேண்டி வரும். அவர்கள் நால்வரும் சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ”புதிய கார் வாங்கியிருக்கிறோம், வருகிறாயா?” என்று விக்டோரியாவை கூப்பிடுகிறார்கள். அதில் ஒருவன் விக்டோரியா முன் சர்கஸ் மாதிரி உடலை வளைத்து நடித்துக் காட்டுகிறான். மேலே என்ன பேசுவது என்று தெரியாதபோது, இன்னொரு கிளப்பில் அவளை குடிக்க சோன் கூப்பிடுகிறான். அவளும் அவர்களுடன் சென்று கூரை மீது அமர்ந்து குடிக்கிறாள்.
திரும்பவும் சோனை விக்டோரியா அவள் பணிபுரியம் இடத்திற்கு அழைத்து வருகிறாள். இந்தப் படத்தில் பாதிவரை அவர்கள் நாவல்வரும் பேசிக் கொண்டே இருப்பதுதான். சோனும் விக்டோரியாவும் பேசிக்கொண்டிருப்பதை சிறப்பாக படம் எடுத்திருப்பார்கள். சோனிற்கு பியானோ வாசிக்கத் தெரியாது. மோஸர்ட் என் உறவினன் என்பான்.
விக்டோரியா அவனுக்கு பியோனாவை வாசித்துக் காண்பிப்பாள். ஒரு கட்டத்தில சோன் அவளைப் பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தப் படத்தின் அடுத்தக் கட்டம் இப்போது நடக்கிறது.
சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்ட அவர்கள் ஒரு பெரிய திருட்டை நடத்தும்படியான சூழலுக்கு மாறுகிறார்கள். கட்டாயத்தின் பேரில் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் கட்டளைக்காக இதை செய்யுமபடி நேர்கிறது. சோன் நண்பன் பாக்ஸருக்காகவும் அவன் சிறையில் இருந்தபோது நேர்ந்த நிர்பந்தம் பேரிலும் காலை நேரத்தில் ஒரு வங்கியில் கொள்ளை நடத்த ஒப்புக்கொள்கிறார்கள். இந்தத் திருட்டிற்கு விக்டோரியா உடந்தையாகப் பயன்படுத்தப்படுகிறாள். ஏன் எனில் அவர்கள் நால்வரில் ஒருவன் ரொம்பவும் குடித்து விட்டிருப்பான். அவள் அவர்களுக்காக கார் ஓட்டிக்கொண்டு வருகிறாள்.
பணம் கொள்ளை அடித்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து அவர்கள் தப்பித்து வரும்போது எல்லாமே குழப்பமாக மாறி விடுகிறது. அவர்கள் தப்பித்து வந்து தங்கியிருக்கும் இடத்தில் போலீஸ் சூழ்ந்து விடுகிறது. துப்பாக்கி சூட்டில் சோன் நண்பர்கள் தப்பிக்க முடியவில்லை. சோனும், விக்டோரியாவும் போலீûஸ ஏமாற்றி அந்த இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். போலீசுடன் நடந்த கலவரத்தில், அவன் நண்பன் பாக்ஸர் மூலம் சோன் கையில் 50000 யூரோ கிடைக்கிறது. சோன் வயிற்றில் துப்பாக்கி சூட்டுடன் விக்டோரியாவுடன் வாடகைக் காரில் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஒரு ஓட்டலுக்குச் செல்கிறான். அங்கே அறை எடுத்துக்கொண்டு தங்குகிறார்கள். சோனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறாள் விக்டோரியா.
அங்கே தான் உயிர் பிழைக்க முடியாது என்று நினைத்த சோன் தன் கையில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு விக்டோரியாவை போய்விடும்படி சொல்கிறான். விக்டோரியா ஆம்புலன்ஸிற்கு போன் செய்கிறாள். விக்úடிôரியாவின் கையைப் பிடித்தபடி சோன் இறந்து விடுகிறான். சோனின் மரணத்தைப் பார்த்து விக்டோரியா கண்கலங்குகிறாள்.
அவள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டுகிறது. செய்வதறியாது திகைக்கிறாள். இநத இடத்தில் லையா கோஸ்டா என்ற நடிகை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் மனக்குமறலை வெளிப்படுத்துகிறார். பின் ஓட்டல்அறையிலிருநது பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டலை விட்டே விக்டோரியா போய்விடுகிறாள்
. அறையில் போன் மணி அடித்துக் கொண்டிருக்கிறது. அவள் தெருவில் நடந்து செல்வதுடன் படம் முடிவடைகிறது. எதிர்பாராத திருப்பத்திற்கு ஆளாகி விக்டோரியா மாட்டிக் கொள்வதுதான் இந்தக் கதை. பரபரப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது. கொஞ்சங்கூட ஆபாசமில்லாமல் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.