1 நடப்பியல்
அன்றாட வாழ்வில்
மூச்சுத் திணறவைக்கும்
ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்
நித்தம் நித்தம் நிரந்தரமாய்
குரல்வளையை
நெறித்துக்கொண்டிருக்கையில்
உலக மகா தத்துவங்கள்
வரலாற்று ஆவணங்களை
பார்த்துப் பரவசப்படச்சொன்னால்……..?!
2 வலியும் கிலியும்
வலியை சகித்துக்கொள்ள
நெடுநாள் பயின்று பயின்று
ஒரளவுக்கு பழகமுடிந்தும்
வலிகள் வரப்போகிறதென்ற
ஆரம்ப சைகைகள்
கிடைக்கத் தொடங்கையிலேயே
நெஞ்சில் வந்து உடும்பாய்
கவ்வுக்கொண்டுவிடும்
வரப்போகும் வலியை
நினைந்துள்ள கிலி…….!
அதை அப்புறப்படுத்த
எடுத்துக்கொண்ட
அப்பியாசங்களெல்லாம்
தோல்விக்குமேல் படுதோல்வி
என் செய்வேன்..,.என் செய்வேன்…,
பராபரமே…………..