புத்தக விமர்சனம் 9

புத்தக விமர்சனம் 9
                                                   அழகியசிங்கர்
சமீபத்தில் சிறுகதைத் தொகுதியா கவிதைத் தொகுதியா எது விற்பனை ஆகிறது என்று கணக்கெடுக்கும்போது, இரண்டுமே பெரிதாக விற்பதில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை நம்ப மறுத்ததால், சிறுகதைகள் வெளி வருவதே நின்றுவிட்டன.  அதுவும் இலக்கியத் தரமான கதைகளை கண்டு பிடிப்பதே பெரிய பாடாக இருக்கிறது. 
 இந்தத் தருணத்தில்தான் ராமலக்ஷ்மி எழுதிய ‘அடை மழை’ என்ற சிறுகதைத் தொகுதி என் கண்ணில் பட்டது.
ஒரு புத்தகம் படிக்க எடுக்கும்போது, ஒரு நிதான வாசிப்பில் நம்மை தள்ளி விட்டால், அது ஓரளவு தரமான புத்தகமாக இருந்து விடும்.  கவிதைகளையும், சிறுகதைகளையும் நிதான வாசிப்பில்தான் நாம் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். 108 பக்கங்கள் கொண்ட 13 கதைகளைக் கொண்ட தொகுப்புதான் அடை மழை என்ற தொகுப்பு. இதில் உள்ள எல்லாக் கதைகளும் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகி இருக்கின்றன. 
2010லிருந்து இவர் கதைகள் எழுதி வருகிறார்.  கவிதை, மொழிபெயரப்பு கவிதைகள் என்று பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  அகநாழிகை பதிப்பகம் மூலம் வெளிவந்த இத் தொகுப்பின் பின் அட்டையில் பொன் வாசுதேவன் இப்படி குறிப்பிடுகிறார் : காலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற போலித்தனங்கû அழுத்தமாகச் சொல்கின்றன ராமலக்ஷ்மியின் கதைகள்.
ரிஷபன் என்பவரோ, üகதைகளை ஒவ்வொன்றாய் சொல்லி என்ன ரசித்தேன் என்று விவரிக்கலாம்.  அதுவேதான் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நேரப் போகிறது என்பதால் கொஞ்சம் விலகி நின்று உங்களுக்கு வழி விடுகிறேன்.  வாசித்து முடிந்ததும் சேர்ந்து கை தட்டலாம் நாம்,ý  ரிஷபனும் இப்படி சொல்லி தப்பி விடுகிறார். 
‘எளிய மக்களின் வலிகளும், சராசரி மனித வாழ்வின் நிதர்சனங்களுமே இக் கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன,’ என்கிறார்
ராமலக்ஷ்மி. இதையெல்லாம் படித்தால், ராமலக்ஷ்மி எதுமாதிரி கதை எழுதுகிறார் என்பதைக் கண்டு பிடித்து விட முடியாது.  பொதுவாக இவருடைய கதைகளில் ஒரு பொதுவான தன்மையை என்னால் கண்டு பிடிக்க முடிந்தது.   அது அநீதிக்கு குரல் கொடுக்கும் தன்மை.  பின் ஏழ்மையைக் கண்டு கண் கலங்கும் தன்மை.  பின், எல்லாப் பிரசசினைகளுக்கும் கதைகள் மூலம் தீர்வு கொடுத்து விடுகிறார்.  
பொட்டலம் என்ற கதை.  இக் கதையை தலை முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வரவில்லை என்பதால், ஒரு பையனின் தலைமுடியை ஆசரியை வெட்டி, வெட்டிய தலை முடியை அவனிடம் அள்ளிக் கொடுத்து விடுகிறாள்.  இது எவ்வளவு கொடுமை.  இதற்கு அடிப்படையாக தலை முடியைக் கூட வெட்ட முடியாமல் போகிற வறுமையை காரணம் வைக்கிறார்.  இது மாதிரியான வறுமைச் சித்தரிப்புக் கதைகளை பலர் தமிழில் எழுதி எழுதி படித்தாயிற்று.  சம்பவங்கள் வேற மாதிரி இருக்கிறதே தவிர, அடிப்படை காரணமான வறுமை மாறவில்லை.
கதைகளை உருக்கமாக எழுதுவதில் ராமலக்ஷ்மி தேர்ந்தவராக இருக்கிறார்.  முதல் கதையான வசந்தா என்ற பெயரில் உள்ள கதையில், வசந்தா மேலே படிக்க முடியாமல் போன கோபத்தை வெளிப்படுத்துகிறார்.  படிப்பவரை நெகிழ வைக்கும் கதை இது.
ஈரம் என்ற கதையில் இரண்டு பேர்கள் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலையில், பிறந்த குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு ஓட வேண்டிய அவதியை விவரிக்கிறார்.
இவர் கதைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?  ஒருவித ஒழுங்கு எல்லாக் கதைகளிலும் இருக்கிறது.  அதுதான் இவருடைய கதைகளை குலைப்பதாக தோன்றுகிறது.  என்னதான் பிரச்சினையாக இருக்கட்டும், இவர் கதைகளில் எலலாம் சுலபமாக முடிந்து விடுகிறது.  
உலகம் அழகாலனது என்ற கதையில் அறிவுரை கூற ஆரம்பித்து விடுகிறார்.
“என்ன சொல்லி புரிய வைப்பது? விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப்  தி பிட்டஸ்ட்’ எனச் சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாகி விட்டார்கள் என்றே தோன்றியது..” என்றெல்லாம் அறிவுரை வழங்க ஆரம்பிக்கிறார்.  இது கதையின் சுவாரசியமான தன்மையைப் பெரிதும் குறைத்துவிடும் என்று எனக்குப் படுகிறது.  
இது இவருடைய முதல் கதைத் தொகுதி என்பதால், ஒரு சில குறைபாடுகளை பார்த்தாலும் அவற்றைப் பெரிது படுத்தக் கூடாது என்று தோன்றுகிறது.
இதுவும் கடந்து போகும் என்ற கதையில் தானே புயலால் படும் அவதியை எழுதுகிறார்.அடைக் கோழி என்ற கதையில் கோழி முட்டையைப் பறறி சொல்கிறார்.  இப்படி மாற்றி மாற்றி பல விஷயங்களை விவரிக்கிறார்.  பயணம் என்ற கதையில் தொடர்பு படுத்த முடியாத இரண்டு நிகழ்ச்சிகளை விவரிக்கிறார்.  கதையின் பிரச்சினை ரயில் பயணத்திலேயே ஆரம்பித்து முடிந்து விடுகிறது.
கதையின் தீர்வு என்பது ஆபத்தில்லா தீர்வாக இருக்கிறது.
அடைமழை – சிறுகதைகள் – ராமலக்ஷ்மி – வெளியீடு : அகநாழிகை பதிப்பகம் – எண். 33 மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306 – பேச :
9994541010 – விலை ரூ.100


  

3 Replies to “புத்தக விமர்சனம் 9

  1. நாங்கள் எழுதியது எல்லாம் புகழுரை. இதுதான் உண்மையான விமர்சனம். சில விஷயங்களில் எனக்கு ராமலெக்ஷ்மியின் எண்ணப் போக்கில் உடன்பாடு இருந்தாலும் ஒரு விமர்சகராக நீங்கள் முன் வைக்கும் கருத்துகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

    வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி. 🙂

  2. தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. சொல்லியிருக்கும் கருத்துகளைக் கவனத்தில் கொள்கிறேன்.

    மனதை அழுத்தும் பிரச்சனை, மற்றுமோர் பெரிய பிரச்சனை வருகையில் எப்படி ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்பதேயே 'பயணம்' கதையில் சொல்ல விழைந்திருக்கிறேன்.

  3. இங்கிருக்கும் கருத்துகளில் சிலவற்றை நீங்களும் உங்கள் விமர்சனத்தில் முன்னர் குறிப்பிட்டிருந்தீர்கள் தேனம்மை. வாழ்த்துகளுக்கு நன்றி:).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *