அழகியசிங்கர்
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது என்பது தேவதச்சனின் கவிதைத் தொகுதியின் பெயர். எப்படி இந்தப் பெயரை தலைப்பாக தேவதச்சன் வைத்தார் என்று யோசித்தேன். ஏன்எனில் சினிமா தயாரிப்பாளர்கள் பார்த்தால் இந்தப் பெயரை ஒரு படத்தின் தலைப்பாக வைத்துக்கொள்ள விரும்பலாம்.
இன்று பரவலாக தேவதச்சன் பெயர் பலரால் உச்சரிக்கப் படுகின்றது. எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற இதழ்களில் அவர் எழுத ஆரம்பித்தபோது, அவருடன் இன்னும் பலரும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். அவர்களில் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை. பெரும்பாலோர் கவிதை எழுதுவதை விட்டிருப்பார்கள்.
அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தேவதச்சனும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார். 1982ல் முதன் முதலாக அவருடைய கவிதைத் தொகுதி அவரவர் கைமணல் ஆனந்த் கவிதைகளுடன் சேர்ந்து வெளிவந்தது. 1982க்குப் பிறகு 2000ல்தான் அவருடைய மற்றொரு கவிதைத் தொகுதி வெளிவருகிறது. தன்னுடைய கவிதைகள் புத்தகமாக வர வேண்டுமென்று ரொம்ப ஆர்வமாக இருக்க மாட்டார்.
அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் மட்டும் கவிதைகள் பற்றி, இன்னுப் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அவருடன் பேசுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். பேச வேண்டுமென்று நண்பர்கள் சிலர் எப்போதும் இருந்து கொண்டிருப்பார்கள்.
48 கவிதைகள் கொண்ட இத் தொகுதியில் தேவதச்சன் எப்போதெல்லாம் கவிதை எழுதினார் என்பதைக் குறிப்பிடவில்லை.
எப்போதும் ஒரு கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது, யாராவது கேட்டால் உடனே கொடுத்துவிடத் தோன்றும். அப்படி கொடுத்துவிட்டப் பின் அந்தத் தொகுதி வேண்டும் என்று கேட்கக் கூடத் தோன்றாது. நம்மை விட்டுப் போனால் போகட்டும் என்று கூடத் தோன்றும். கவிதைத் தொகுதி விற்கவும்விற்காது. அதுபோல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக மாறிவிடக் கூடியதும் கவிதை. நூல்தான். ஆனால் தேவதச்சனின் இந்தத் தொகுதியை அப்படி கொடுத்துவிட மனம் வராது.
அதேபோல் இன்னொரு விதி. எந்தக் கவிதைத் தொகுதியும் அதிக எண்ணிக்கை விற்காது. ஆனால் ஒரு பெண்மணி அவர் கவிûத்தொகுதிக்கு ராயல்டி கிடைத்தது என்று சொன்னார். என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா? கவிதை புரியவும் வேண்டும் அதேசமயத்தில் ரொம்பவும் புரிந்து விடக். கூடியதாக இருக்கக் கூடாது. நான் முன்பெல்லாம் தேவதச்சன் கவிதைகளைப் படிக்கும்போது, அவர் கவிதை மூலம் புதிர் போடும் தன்மையைக் கொண்டு வருகிறாரா என்று நினைப்பேன். அவர் எளிமையாக கவிதைகளை எழுதுகிறார். வித்தியாசமாக சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது.
இத் தொகுதியில் 18 ஆம் பக்கம் நிர்வாணம் என்ற கவிதை.
யாருமில்லை என்பதால்
வீட்டில் சில நேரம்
நிர்வாணமாக இருந்தாள்
யாருமில்லை என்பதால்
நிர்வாணமாக இல்லை.
ஒருவிதத்தில் இக் கவிதையைப் படிக்கும்போது புதிர் தன்மை உடையதாக இருந்தாலும், நிர்வாணம் என்பது என்ன என்று கேள்வி கேட்டே இக் கவிதை முடிந்து விடுகிறது. தேவதச்சன் இப்படித்தான் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக யோசிக்க வைக்கிறார்.
இவர் கவிதைகளின் இன்னொரு விசேஷம் எப்போதும் இவர் கவிதைகளை எடுத்து வாசிக்கும்போது, இன்னொரு முறை வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துவது. ஒவ்வொரு முறையும் படிப்பவர்களுக்கு ஒவ்வொரு விதமாய் தோன்றும்.
கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது, வரிகளை வைத்து கவிதை எழுதுவதன் மூலம் ஒரு விளையாட்டை விளையாடுகிறார் தேவதச்சன் என்று தோன்றுகிறது.
பக்கம் 34ல் உள்ள ன்மீ என்ற கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருபோதும்
மீன்கள் திரும்புவதில்லை
திரும்பக் கூடுவதுமில்லை
கடல்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றன
மீன் திரும்பினால்
ன்மீ ஆகிவிடுமே
யாராவது
ன்மீயைப் பார்த்திருக்கிறீர்களா
வலைவீசிப் பிடித்திருக்கிறீர்களா
மேலும்
ன்மீயை எப்படித்தான்
சமைப்பது
ஆனால், திரும்பி
திரும்பிக் கொண்டிருக்கும்
ன்மீயை எப்போதும் விரும்பி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படித்தான் தேவதச்சன் ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு விதமான விளையாட்டாக விளையாடத் தொடங்குகிறார். அவர் கவிதைகள் படிப்வர்களை பரவசமூட்ட தவறுவதில்லை. அவருக்கு கவிதை மூலம் சொல்வதில் எந்தக் குழப்பமும் இல்லை. படிப்பவர்களுக்குத்தான் குழப்பம் இருக்கும்.
தேவதச்சனின் எந்தத் தொகுதியையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது – கவிதைகள் – தேவதச்சன் – பக்கம் : 62 – விலை ரூ.40 – உயிர்மைப் பதிப்பகம் – 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018