புத்தக விமர்சனம் 5


 அழகியசிங்கர்

                                                                             

கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.  நான் தினமும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் வேகமாக என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடிவதில்லை.  மேலும் ஒரே புத்தகத்தை மட்டும் நான் எடுத்துப் படிப்பதில்லை.  ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு சில பக்கங்களை நான் படித்துக் கொண்டு வருகிறேன்.
சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகம் மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்ற நாவல்.   இந்த நாவலும் யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.  
தலித் எழுத்தை ஒரு தலித்து எழுதுவதுதான் சிறப்பாக அமையும்.அந்த வகையில் தூப்புக்காரி என்ற நாவல் ஒரு தலித்தால் எழுதப்பட்ட நாவல்.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது.  ஒரு தலித் நாவலை தலித் மட்டும்தான் எழுத முடியுமா?.  ஜெயகாந்தன் எப்படி ஒரு பிராமண நாவலை பிரமணர்களை விட நன்றாக எழுத முடிந்ததோ, அதேபோல் ஒரு தலித் நாவலை பிரமணரோ அல்லது மேல் வகுப்பினரோ எழுதமுடியுமா?  எது எழுதினாலும் அது கலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.  அந்த விதத்தில் யோசித்துப் பார்க்கும்போது, ஒரு பிரமணர் அல்லது மேல் ஜாதிக்காரர் ஒரு தலித் நாவலை எழுதலாம். ஆனால் கலைத் தன்மை கொண்டதாக அதைக் கொண்டு வர வேண்டும்.
பிப்பரவரி 2015 உயிர்மை இதழில் இமையம் 2000க்கு சற்று முந்தைய காலத்திலிருந்து, பிராமணர்கள் தமிழ் மொழியிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டதாக எழுதி உள்ளார்.   இப்போது பிராமண வாழ்க்கையை பிராமணர்கள் எழுதுவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். அவர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்று தமிழகத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  அதெல்லாம் நாவலில் வெளிப்பட வேண்டுமா? இமையம் கூறுவது போல் நிகழ்ந்த சரித்திர சான்றுகள் கதைகளாக மாறப்படுவதில்லை.  அதற்கான சாத்தியமும் குறைவு.  ஒரு நாவல் இதுமாதிரி சரித்திர சான்றுகளைக் கொள்ளமல் தன் மனம்போல் வெளிவருவதுதான் உண்மையான படைப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும் சரித்திர சம்பவத்தை கலைத் தன்மையாக மாற்றுவது கடினம்.  
மலர்வதி எழுதிய தூப்புக்காரியின் கதை மிகச் சாதாரண மனிதரைப் பற்றிய கதைதான்.  அந் நாவலின் வெற்றி அந்த வாழ்க்கையில் தென்படுகிற அவலங்களை அப்படியே விவரிப்பதில்தான் அமைகிறது.  அந்த நாவலில் மலர்வதி கையாளும் மொழி.  அப்படி ஒரு மொழியைக் கொண்டு வருவது கடினமாகத்தான் இருக்கும்.  இப்போதெல்லாம் பிரமண எழுத்தாளர்கள் பிராமண மெழியைப் பயன்படுத்துவதில்லை.  பிராமண மொழி பலரால் பேசப்பட்டு கிண்டலுக்கு உரிய மொழியாக மாறிவிட்டதால், அவர்கள் பயன் படுத்தும் பேச்சு மொழி அவர்களுக்கே அந்நியமாக மாறிவிட்டது.  அவர்கள் பொது மொழியில்தான் எழுதுகிறார்கள்.  சில வட்டார எழுத்தாளர்கள் வட்டார மொழியில் கதைகள் எழுதுகிறார்கள்.  ஆனால் படிப்பவர்களை வட்டார மொழியில் எழுதுபவர்கள் எந்த அளவிற்கு ஈர்ப்பார்கள் என்பது தெரியவில்லை.  
அப்படி எழுதப்படுகிற கதைகளைப் படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்.  ஆனால் மலர்வதி எழுதிய இந்த நாவலில் எனக்கு இந்தப் பிரச்சினை ஏற்படவில்லை.  
ஆனால் இந் நாவல் வழக்கமான நாவல்தான்.  ஒரு பெண் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறாள்.  அதனால் அவள் வாழ்வில் ஏற்படுகிற ஏடாகூடமான நிகழ்ச்சிகள்.  அதை அவள் துணிச்சலாக எதிர் கொள்கிறாள்.  தன் அம்மாதான் தூப்புக்காரியாக வாழ்ந்து வந்தாள்,  தானும் அவ்வாறு இருக்கக் கூடாது என்று நினைக்கிறாள் பூவரசி.   பூவரசியால் அவள் அம்மா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.   விதி பூவரசியையும் தூப்புக்காரியாக மாற்றி விடுகிறது.  தன் விதியை நொந்துகொண்டே அவள் வாழ்க்கையை எதிர்கொள்கிறாள்.  காதலில் தோல்விகண்ட பூவரசியை மாரி என்பவன் அவள் மீது உள்ள அன்பால் ஏற்றுக்கொள்கிறான்.  அவனோடு அவள் சேர்ந்துதான் வாழ்கிறாள்.  அவள் காதலன் மனோ மூலம் அவளுக்கு உண்டான குழந்தையை மாரி ஏற்றுக்கொள்கிறான்.  ஆனால் விதி அவனையும் விட்டுவிட வில்லை.  எதிர்பாராதவிதமாய் விபத்தில் மாரி இறந்து விடுகிறாள்.  
பூவரசி அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு போராடுகிறாள்.  அவள் அம்மா கனகம் எப்படி பூவரிசியை வைத்துக் கொண்டு போராடுகிறாளோ அதேபோல் பூவரசியும் போராடுகிறாள்.கதையில் தென்படுகிற முக்கிய குறை கதை ஆசிரியரின் தலையீடு.  அங்கங்கே நடக்கிற நிகழ்ச்சிக்கு சமாதானம் கூறுவதுபோல் ஆசிரியரின் தலையீடு அதிகமாகவே தெரிகிறது.  கதையின் ஆரம்பம்தான் கதையின் முடிவாக மாறி விடுகிறது.  கதையின் ஆரம்பிக்கும்போது, கனகம் அவள் பெண் பூவரசி இருக்கிறார்கள்.  அதேபோல் பூவரசியும் அவள் பெண்ணும் இருக்கிறார்கள் நாவல் முடிவில்.  
தூப்புக்காரி – நாவல் – மலர்விழி – பக்கம் : 136 – வெளியீடு : அனலகம், தண்ணீர் பந்தல், கருங்கல் 629 157 குமரி மாவட்டம் – விலை ரூ.75/-

   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன