ஆத்மாநாம் சில குறிப்புகள்

அழகியசிங்கர்
1984 ஆம் ஆண்டு ஜøலை 6ஆம் தேதி ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அந்தச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், காளி-தாஸ், ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன்

அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆத்மாநாம் ழ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாலும், சில இதழ்களுக்குப் பிறகு அவரால் அந்தப் பத்திரிகையைக் கொண்டு வர முடியவில்லை.  ஞானக் கூத்தன், ஆர் ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து கொண்டு வர காரணமாக இருந்தார்கள்.  அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய நெருங்கிய நண்பர்கள் கண்கலங்கி விட்டார்கள்.  ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த நோயின் தாக்கத்தோடு இருக்கும்போதுதான், நான் ஆத்மாநாமை ஒருமுறை சந்தித்தேன்.  வைத்தியநாதன் என்ற நண்பருடன்.  
நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்கு முதலில் சென்றோம்.  ழ வெளியீடாக வந்த கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மானமின் கவிதைத் தொகுதியையும் அவருடைய கையெழுத்தில் வாங்கினேன்.  
நாம் சிலசமயம் சிலரைப் பார்க்கும்போது நமக்கு அவர்கள் மீது காரணம் புரியாத பரிதாப உணர்ச்சி ஏற்படும்.  ஆத்மாநாமைப் பார்க்கும்போதும், எனக்கு அவ்வாறான உணர்வு உண்டாகாமல் இல்லை.
ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமை நான் சந்திப்பது வழக்கம்.  அப்போது அவர் கைகளைக் குலுக்கும்போது அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும்.  அதிக போதையால் அவர் கைகள் நடுங்கின்றன என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன்.
இன்னொரு முறை அவர் ழ இதழ்களைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பார். அதை எல்லோருக்கும் அளித்துக் கொண்டிருப்பார்.  அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் மீது பரிதாப உணர்வு ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.  அந்த சமயத்தில் எனக்கு அவர் அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாது.   அவரைப் பற்றி அவர் நண்பர்கள் கூறும்போது. அவருக்கு உடனடியாக  புகழ் வர வேண்டுமென்ற எண்ணம் இருந்ததாகக் கூறுவார்கள்.  இந்தக் காலத்தில் கவிதையை எழுதிவிட்டு அப்படியெல்லாம் புகழ் அடைந்து விட முடியுமா?  சினிமாவில் எழுதினால் ஓரளவு எல்லோருடைய கவனத்திற்கும் வரலாம்.  ஆனால் ஆத்மாநாம் வித்தியாசமானவர்.
கம்பீரமாக காட்சி அளிக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரால்தான் நம்ப முடியும்.  அவர் தற்கொலையைப் பற்றி குறிப்பிடும் அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ், தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிறஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு  அலைந்தாக நேரிடும் என்று சொல்கிறார்.  
ஆத்மாநாம் பற்றி அப்படி குறிப்பிட்ட ஸ்டெல்லா புரூஸ் தானும் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி என்ன சொல்வது.
ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தை ஞானக்கூத்தன் ஏற்பாடு செய்தார்.
  ஆத்மாநாம் படத்தை ஆதிமூலம் பிரமாதமான முறையில் வரைந்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.  ஆத்மாநாம் நண்பர்கள் எல்லோரும் சோகமாய் இருந்தார்கள்.  சிலர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள்.
ஆத்மாநாம், ஞானக்கூத்தன் பற்றியெல்லாம் மோசமாக விமர்சனம் செய்யும் பிரமிள் அக்கூட்டத்திற்கு வந்திருந்து ஆத்மாநாம் பற்றி பேசியது ஆச்சரியமாக இருந்தது.  
ஆத்மாநாமின் ஒரு கவிதையைப் படிக்கும்போது பிரமிள் அழ ஆரம்பித்து விட்டார்.  வெளியேற்றம் என்பதுதான் அந்தக் கவிதை.
  
 வெளியேற்றம்
சிகரெட்டிலிருந்து 
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி 
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
பிரமிள் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.  ஆத்மாநாம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உள்ள கணத்தில் ஆத்மாநாம் நினைத்திருந்தால், தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்க முடியும்.  அந்தக் கணம் மிக முக்கியமானது. 

“ஆத்மாநாம் சில குறிப்புகள்” இல் ஒரு கருத்து உள்ளது

மணியோசை உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன