எதையாவது சொல்லட்டுமா……..98

அகியசிங்கர்

மாம்பலத்தில் ஆர்யாகவுடர் ரோடு என்றுழ உள்ளது.  அந்த ரோடு ஒருவர் நடந்து போனல் போதும், பொழுது நன்றாகப் போய்விடும்.  மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.  எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக முடியாது.  நான் கிட்டத்தட்ட அநத ரோடு வாசி.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டல் காலனி முதல் தெருவில்தான் இருந்தேன்.  நல்ல சென்டரான இடம்.  ரோடு அகலமாக இருக்கும்.  ரொம்ப குறைவான அடுக்ககத்தில் நாங்கள் இருந்தாலும், எந்த இடத்திற்கும் அங்கிருந்து போய்விட முடியும்.  அந்தத் தெருவை ஒட்டித்தான் ஆர்யாகவுடர் ரோடு உள்ளது.  அயோத்தியா மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கூட்டம் நடக்கும். பாட்டுக் கச்சேரி நடக்கும்.  கதை உபன்யாசம் நடக்கும்.  எனக்குக் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு.  ஆனால் நாத்திகன் கிடையாது.  என் வீட்டில் உள்ளவர்கள் அயோத்தியா மண்டபம் போக வேண்டுமென்று சொன்னால், அயோக்கியா மண்டபமா என்று கேட்பேன்.  உடனே வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள்.  நான் சிரித்துக்கொள்வேன்.  

நாங்கள் போஸ்டல் காலனி இடத்திலிருந்து ராகவன் காலனி என்ற இடத்திற்கு வந்து விட்டோம்.  என் அப்பாவும், மாமியாரும் அங்கிருந்து ராகவன் காலனிக்கு வரவே விரும்பவில்லை. வலுக்கட்டாயமாக அழைத்து வரும்படி ஆகிவிட்டது.
ஆனால் அங்கிருந்தும் கொஞ்ச தூரம் நடந்து ஆர்யகவுடர் ரோடு வந்து விடலாம்.  போஸ்டல் காலனி தெருவில் நாங்கள் இருக்கும்போது பல திருட்டுகள் நடந்திருக்கின்றன.   ஒரு முறை தெரு முனையில் இருந்த ஒரு வீட்டில் ஒரு வயதான டீச்சரை கொன்று ஒருவன் நகைகளைக் கொள்ளை அடித்துக்கொண்டு போய்விட்டான்.   
     அந்தக் கொலைக்காரனை போலீசார் பிடித்தும் விட்டார்கள். நாங்கள் இருந்த அடுக்ககத்தின் கீழே ஒரு வீட்டிலிருந்து கலர் டீவியைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.  தலைக்காணிக்கு அடியில் மறைநத்து வைத்திருந்த நகைகள் திருடப்படாமல் தப்பித்து விட்டன. போஸ்டல் காலனி எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும்.  
ராகவன் காலனி அப்படி அல்ல.  தெரு முனையில் மாடுகள் வாலைச் சுழற்றியபடி இருக்கும்.  தெரு உள்ளே நுழைபவர்கள் கொஞ்சம் யோசனை செய்வார்கள்.  அதன் பின் வண்டி.  தெரு முழுக்க டூ வீலர்களை வைக்கும் இடம் எங்கள் தெருதான். கார்கள் கண்டபடி இருக்கும்.  
நான் வைத்திருக்கும் நானோ காரை எடுத்துக்கொண்டு வந்தால், யார் மீதும் இடிக்காமல் போக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  இன்னொன்றும் நினைத்துக் கொள்வேன் ஒருவர் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இந்தத் தெருவில் ஓட்டினால் போதுமென்று. சாமர்த்தியம் இல்லாவிட்டால் ஓட்ட முடியாது.  
இங்கே திருட்டே கிடையாது.  ராகவன் காலனி இரவாக இருந்தாலும், விழித்துக்கொண்டே இருக்கும்.  ஜனங்கள் நடமாடிக்கொண்டே இருப்பார்கள்.  திருடன் வந்தால் செத்தான்.  
எங்கள் வீட்டு பால்கனியில் ஒரு காக்கை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து கத்திக்கொண்டே இருக்கும்.  92 வயதாகிற என் அப்பா சொல்வார்.  üüஅது என் நண்பன்,ýý என்று.
நான் திரும்பவும் ஆர்யாகவுடர் ரோடிற்கு வருகிறேன்.  நேற்று என் டூ வீலரை எடுத்துக்கொண்டு சர்வீஸ் கொடுக்க ஆர்யாகவுடர் ரோடு முடியும் இடத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு, அந்தத் தெரு முனையிலிருந்து பிராக்குப் பார்த்தபடி ஆர்யாகவுடர் ரோடு முழுவதும் நடந்து வந்தேன்.  விதவிதமான கடைகள்.  ஜே பி டிபன் சென்டர் என்ற கடையில் காலை வேளையில் சுறுசுறுப்பாக எல்லோரும் டிபன் சாக்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.   பின் இரண்டு மூன்று தேசிய வங்கிக் கிளைகள்.  ஒரு வேர்கடலை விற்கிற கடை.  ஒரு பிள்ளையார் கோயில்.பேப்பர் கடைகள்.  நாட்டு மருந்து கடைகள்.  ஒரு டைலர் கடை.  இரண்டு கல்யாண மண்டபம்.  ஒரே வாகன ஓட்டம்.  பஸ்கள்.  நான் நடந்து வந்து கொண்டிருக்கிறேன். 
இந்தக் கூட்டம்.  வாகன இரைச்சல் எல்லாம் என்னை தொந்தரவு செய்யாமல் இல்லை.  ஆனால் நான் முன்பு பார்த்த ஆர்யாகவுடர் வேறு மாதிரியாக இருந்தது.  அதைப் பற்றி இப்போது சொல்ல முயற்சிக்கிறேன்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக மேற்கு மாம்பலத்தில் குடியிருப்பவன் நான்.  ஆரம்பத்தில் பஸ்கள் மேற்கு மாம்பலம் நோக்கி அவ்வளவாக வராது.  மழை பெய்தால் தெருவில் நடக்க முடியாது.  குண்டும் குழியுமாக மோசமாக இருக்கும்.  மேற்கு மாம்பலத்தில் அப்போதெல்லாம் முக்கியமான இடம் அயோத்தியா மண்டபம். அங்கு ஒவ்வொரு சம்மரிலும் பாட்டுக் கச்சேரி நடக்கும்.
நாங்கள் வினாயகம் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம்.  அறுபது ரூபாய் வாடகை.  என் அம்மாவிற்கு நாங்கள் மாம்பலம் வந்தது தெரியாது.  ஏன்என்றால் அம்மா இறந்த பிறகுதான் நாங்கள் இங்கு வந்தோம். 
வீட்டிற்குள் கையைத் தூக்கினால் மின் விசிறி கையில் தட்டுப்படும்.  அது வேகமாக சுழலும்போது தலையைச் சீவுவது போல் பயம் ஏற்படும். அப்போதெல்லாம் பல இடங்கள் காலியாக இருந்தன.  நடந்தால் காலில் மண் ஒட்டிக்கொள்ளும்.  கொசுக்கள் இல்லாமல் இருக்காது.  நிறைய பேர்கள் மாம்பலத்தில் குடி வரவே அஞ்சுவார்கள்.  யானைக்கால் நோய் வந்துவிடும் என்ற பயம்தான் காரணம்.  
மாம்பலம் ரயில் நிலையம் ஏறி நான் தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.  எப்போதும் பாட்டி மதியம் சாப்பிட ஒரு தயிர்சாதத்தை டிபன் பாக்ஸில் வைப்பாள்.  அதைச் சாப்பிடவே முடியாது.இந்தச் சமயத்தில் நான் ஒரு கவிதை எழுதினேன். கவிதையின் ஒரு பகுதி.
      விரிசலாய்க் கிழிந்த சுவர்கள்
வெயில் காலத்தில் 
வெயிலாய்த் தகிக்க
மழையோ
சன்னல் வழியே கம்பிபோட
வெளியே எடுத்து வைத்த
கால்கள் திரும்பும் சேற்றுடன்
அப்பா அரசாங்கத்தில் சேவகர்
படித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு
சமையல் செய்துபோட பாட்டி
அம்மா செத்துப்போய்
ஆயிற்றுப் பதினாறு வருடங்கள்
நான் படித்த கிறித்துவக் கல்லூரியில் அப்போதுதான் சங்கரன் என்கிற ஞாநி கசடதபற என்ற சிறு பத்திரிகை இனிமேல் வராது என்று யாருடனோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மறக்க முடியாத ஆர்யாகவுடர் சாலையில்தான் சாரதா ஸ்டோர்ஸ் என்கிற அப்பளாம் விற்கும் கடையில் பிரஞ்ஞை என்ற சிறு பத்திரிகை தொங்கிக் கொண்டிருந்தது.  அநதப் பத்திரிகையும் நின்று போகும் சமயம் என்று நினைக்கிறேன்.  அதை வாங்கி வைத்துக் கொள்வேன். படிக்க மாட்டேன்.  வீட்டிற்கு ஸ்டேஷனலிருந்து நடந்தே வந்து விடுவேன்.பஸ் போக்குவரத்து இல்லாத ஆர்யாகவுடர் சாலை காலியாக இருக்கும்.
என் அப்பா ரிட்டையர்டு ஆனபிறகு நாங்கள் வினாயகம் தெருவிலிருந்து ராகவன் காலனிக்கு குடி பெயர்ந்தோம்.  என் அப்பா அவர் ரிட்டையர்ட் ஆன பணத்தில் வாங்கிய இடம்.  வினாயகம் தெருவிலிருந்து இந்தத் தெருவிற்கு வருவதற்கே எனக்கு மனம் இல்லை.  ஆனால் சொந்த இடமாக ஒரு இடத்திற்கு வருகிறோம்.
யார் எங்கள் தெருவிற்கு காலடி எடுத்து வைத்தாலும் அருவெறுப்பு அடைவார்கள்.  தெரு இரண்டு பக்கங்களிலும் சாக்கடைகள்.  தெரு முனையில் மொட்டையம்மாள் சந்து என்ற ஒன்று உண்டு.  அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சுவார்கள்.  தெரு முனையில் மாடுகள் கட்டியிருக்கும்.  
அப்பாதான் ராகவன் காலனி நல சங்கத்திற்கு தலைவர்.   காலையில் சாக்கடையில் நீர் நிரம்பி கிடக்கும்.  அவருடைய பணிகளில் ஒன்று சாக்கடையை அருவெறுப்பு அடையாமல் தள்ளுவது.
அந்த ராகவன் காலனியும், ஆர்யாகவுடர் தெருவும் 40 ஆண்டுகளில் பெரிதும் மாறி விட்டது.  ஆர்யா கவுடர் தெரு வழியாக சாதாரணமாகவே நடக்க முடியவில்லை.  அந்த அளவிற்கு வாகன இரைச்சல்.  எங்கே வண்டி எதாவது மோதி விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.
மாலை நேரத்தில் ஆர்யாகவுடர் தெருவில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தாண்டியே போக முடியாது.  

“எதையாவது சொல்லட்டுமா……..98” இல் ஒரு கருத்து உள்ளது

  1. நான் 1974 இல் மேற்கு மாம்பலத்திற்குக் குடிவந்தேன். (இராணிப்பேட்டையில் இருந்து.) நாயக்கமார் தெருவும் அசோக்நகர் பத்தாம் அவென்யூவும் சந்திக்கும் இடத்திலுள்ள மூவேந்தர் காலனியிலும் பின் அதன் எதிரில் உள்ள ராம்ஸ் மாருதி குடியிருப்பிலுமாக நாற்பதாண்டுகள் கழிந்துவிட்டன. (ஆ) ஆரிய கவுடர் ரோடு மானிடர்கள் குறுக்கே கடந்துசெல்ல வழியில்லாதபடி போக்குவரத்து நெரிசலும் வணிகர்களின் செறிவுமாக நிறம்பி வழிகிறது. (இ) அயோத்தியா மண்டபம் மேலும் மெருகேறி இருக்கிறது. வளம் கொழிக்கும் நிறுவனமாக மாறிவிட்டது. என்றாலும் அந்த நாளில் நவராத்திரி கச்சேரிகளில் விடியற்காலை இரண்டு மணிவரை பாடிய மதுரை சோமு மாதிரியான பாடகர்களை இப்போது பார்க்கமுடியவில்லை. (ஈ) ஜெய்சங்கர் தெருவில் இந்தப்புறம் சாய்பாபா கோவிலும் மறுகோடியில் அமுதசுரபி விக்கிரமன் அவர்களும் எளிதில் காணமுடிகிற இருவர்…

    என்ன சொல்லி என்ன? நூற்று வருடங்களாக அழகான குடியிருப்பு பகுதியாக விளங்கிவந்த மேற்கு மாம்பலம் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதாரமற்ற சிறுசிறு உணவங்காடிகள் நிறைந்த நவீன சைதாப்பெட்டையாக மாறிக்கொண்டு வருவதை என்னால் சகிக்கவே முடியவில்லைதான்… – இராய செல்லப்பா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன