ஒரு வருத்தமான சந்திப்பு…

அழகியசிங்கர்


போனவாரம் செவ்வாய்க் கிழமை நானும், பெ சு மணி அவர்களும் லா சு ரங்கராஜன் என்ற முதிய எழுத்தாளரைப் போய்ப் பார்த்தோம்.  அவர் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்படுவதாக பெ சு மணி சொன்னபோது, பெ சு மணியை அழைத்துக் கொண்டு அவரைப் போய்ப் பார்ப்பது என்று தீர்மானித்தேன்.  
டிசம்பர் 1930ல் பிறந்த லாசு ரங்கராஜன் ஒரு காந்திய அறிஞர்.  சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் உதவி ஆசிரியராக 1952-55 வரை பணியாற்றினார்.  பின்னர் புது டில்லியில் மத்திய அரசு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார்.  
 மகாத்மாகாந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிடசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு “கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் மகாத்மா காநதி” என்ற பெயரில் இந்திய அரசு தனி அலுவலகத்தில் லா சு ரங்கராஜன் விசேஷ அதிகாரியாகவும், பின்னர் துணை இயக்குநராகவும் நியமனம் பெற்றார்.  அங்கு கால் நூற்றாண்டு (1965-1988) தொடர்ந்து பணியாற்றினார். அவ்வமைப்பின் பிரதம ஆசிரியராக இருந்த காந்திய மாமேதை பேராசிரியர் கே சுவாமிநாதன் (1896-1994) அவர்கட்குக் காந்திய பதிப்புக் பணியில் உறுதுணையாக உதவி  வந்த ரங்கராஜன் காந்திய லக்கியத்தில் பெரும் புலமை பெற்றார்.  1988 இறுதியில் வேலை ஓய்வு பெற்றவுடன், மத்திய அரசின் ப்பளிகேஷன்ஸ் டிவிஷனில் (1989-91) பணியாற்றினார்.  அது முதற்கொண்டு, காந்தியம், தேசியம் சார்ந்த சிறப்புக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.  
   இரண்டாண்டுகள் (1992-94) இலக்கிய மாத இதழான கணையாழியில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  üüமகாத்மா காந்தியின் ஆன்மிகப் பயணம்ýý என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆதாரபூர்வமான ஆவணம் தயாரித்தளிக்கும் பொருட்டு இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் லா சு ரங்கராஜனைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டு காலம் (2008-09) சீனியர் ஃபெல்லோஷிப் வழங்கிற்று. அதற்காக லாசு.ரா மூன்று லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் பெற்றார்.   
இவ்வளவு பெருமைக்குரிய லா சு ரா,  உடல்நிலை சரியில்லாமல வீட்டில் கட்டிலில் படுத்தப் படுக்கையாக இருந்தது பரிதாபத்துக்குரியதாக தெரிந்தது. அவரால் எழுந்து கூட உட்கார முடியவில்லை.  முதுகில் அவருக்குப் பிரச்சினை.  
ஒரு வினாடி அவரை நான் பார்க்கும்போது அவரைத் தொந்தரவு செய்ய வந்து விட்டோமோ என்று தோன்றியது.  பெ சு மணி கட்டாயம் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சொன்னதால் நானும் பெ சு மணியை அழைத்துக் கொண்டு வந்தேன்.  லா சு ராவிற்கு வாரிசு யாருமில்லை.  அவரைப் பார்த்துக் கொள்ள 80வயதான அவர் மனைவி இருக்கிறார்.  அவர்கள் இருவரும்தான் அந்த வீட்டில்.  மனைவி அவர் பக்கத்திலிருந்து எல்லா உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார்.
எந்த மனிதனாக இருந்தாலும், அவர் மாதிரியான உடல் உபாதையில் இருக்கும்போது, பேசவே தோணாது.  யாராவது வருகிறார்கள் என்றால் வெறுப்புடன் பார்ப்பார்கள்.  தன்னுடைய துக்கத்தை, வலியை எப்படியாவது காட்டுவார்கள்.  ஆனால் லா சு ரா வேறு மாதிரியாக இருந்தார்.  நான் கொண்டு வந்த புத்தகங்களை வாங்க மறுத்தார்.  படிக்க முடியாது என்று.  அவரைப் பார்த்துக்கொள்ள யாராவது ஒருவர் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.  80 வயதான மனைவிதான் பக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
நானும், பெ சு மணியும் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினோம்.  அவர் மறுத்தார்.  தன்னால் உடலை அசைக்க முடியாது என்று கூறினார்.  கேட்க எங்களுக்கு வருத்தமாக இருந்தது.  ஒரு வழியாக அவர் படுத்தப் படுக்கையில் இருக்கும்போது நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  
நாங்கள் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பும் போது, லர சு ரா எங்களுக்கு அவர் எழுதிய மூன்று புத்தகங்களைக் கொடுத்தார்.  1. பிரார்த்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி 2. 21 ஆம் நூற்றாண்டின் மகாத்மா காந்தி 3. காந்திஜியின் ஹிந்த் ஸ்வராஜ்.  அந்த மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் வெளிவந்தபோது, அவர் மனைவி சொன்ன விஷயம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  அவருக்கு முதுகில் எலும்பில் கான்சராம்.  இந்த விஷயம் அவருக்கே தெரியாதாம்.  அன்று முழுவதும் லாசுரா வே என் மனதில் இருந்தார்.   80 வயது நிரம்பிய அவர் மனைவியை நினைத்துதான் எங்களுக்கு வருத்தம்.  நாங்கள் திரும்பி வரும்போது மழை பெய்துக் கொண்டிருந்தது.  
தயவுசெய்து இதைப் படிக்கும் யாரும் அவர் நோயைப் பற்றி அவரிடம் சொல்லி விடாதீர்கள்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன