அழகியசிங்கர்
அப்பாவிற்கு 93 வயது. எனக்கும் 61 வயது. இந்தப் புதிய இடத்திற்கு வந்தபிறகு, அப்பாவால் வாசலைத் தாண்டி வெளியே வந்து நடக்க முடியவில்லை. வீட்டிலேயே நடப்பார். பெரும்பாலும் தூங்கி வழிவார். எழுந்தவுடன் தினசரிகள் வந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். தினசரிகளை எடுத்து அப்பா முன் வைப்பேன். அதற்கு முன் அப்பா பால்கனி முன் நின்று தெருவில் வருவோர் போவோரைப் பார்த்து கை அசைப்பார். எல்லோருடைய பெயர்களையும் கூப்பிட்டு காலை வணக்கம் சொல்வார். நலமுடன் வாழ்க என்பார். சிலரைப் பார்த்து, üகாப்பி சாப்பிட வரட்டுமா?ý என்பார். தெருவில் விளையாடும் சிறுவர்களிடம், மாஜிக் செய்வதாக சொல்வார்.
அப்பா எப்போதும் காலையில் சின்ன தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உணவு உண்பார். அந்தச் சின்ன தட்டில் கொஞ்சம் சாதம் வைத்துக்கொண்டு, ரசம் அல்லது சாம்பாரை பிசைந்து சாபபிடுவார். பின் தூங்கச் சென்று விடுவார். தூங்கிய பிறகு திரும்பவும் எழுந்து குளிக்கப் போவார். குளித்து விட்டு வந்தபிறகு தானே ஒரு பெரிய தட்டில் சாப்பாடு சாப்பிடுவார்.
தான் சாப்பிடுவதாக இருக்கட்டும், குளிப்பதாக இருக்கட்டும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டார். தானாகவே ஷேவ் செய்து கொள்வார். மாலை நேரங்களில் அப்பா டிவி போட்டு பார்த்துக்கொண்டே இருப்பார்.
அப்பா இருக்கும் அறையில்தான் நான் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருப்பேன். üüஎன் அறை என்றுதான் பேர், ஆனா உன் புத்தகங்கள்தான் இருக்கு,ýü என்று கோபமாக முணுமுணுப்பார். அப்பா என்னிடம் உள்ள புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு விடுவார். அசோகமித்திரனின் கதைகள் இரண்டு பகுதிகளாக இருந்தன. எல்லாவற்றையும் அப்பா படித்து விட்டார். üüஎன்னப்பா படித்தே, படித்த கதையைச் சொல்லு,ýý என்றால், அப்பாவிற்கு சொல்லத் தெரியாது.
அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன படிக்கிறார் என்று எனக்குத் தோன்றும். ஒரு முறை படபடவென்று இருக்கிறது என்று அப்பா சொல்ல, மலர் மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன். 90 வயதுக்கு மேலே உள்ள ஒருவரை பரிசோதிக்க மருத்துவர்கள் விரும்பவில்லை. அவர்கள் என்னையும் அப்பாவையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவிற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டார்கள்.
முன்பெல்லாம் என் நண்பர்கள் யாராவது வந்தால், அப்பா டீ போட்டுக் கொடுப்பார். உப்புமா நன்றாக செய்து கொடுப்பார். வீட்டில் யாரும் இல்லாவிட்டால் தானே சமையல் செய்ய ஆரம்பித்து விடுவார். அப்பா கொடுக்கும் டீ நன்றாக இருக்கிறது என்று சில நண்பர்கள் கூறுவதுண்டு. இப்போதெல்லாம் அப்பாவால் டீ போட முடியவில்லை.
நான்தான் காப்பி போட்டுக் கொடுப்பேன். அப்பா என்னைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேளவி. üüஇவ்வளவு புத்தகங்கள் வாங்கறியே, எப்ப படிக்கப் போறே?ýý அப்பாவின் இந்தக் கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியாது. அப்பா மீது கோபம்தான் வரும். அவர் காலத்தில் அவர் எந்தப் புத்தகத்தையும் வாங்கியதில்லை. அவர் வேலைக்குப் போன காலத்தில், தினசரிகளை வாங்கிக் கூட படிக்க மாட்டார். இப்போது நான் வாங்குவதைப் பார்த்துதான் அவர் எடுத்துப் படிக்கிறார்.
அப்பாவைப் பற்றி இன்னொன்று சொலலவேண்டும். அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. வெற்றிலைகூட போட மாட்டார். யாரைப் பார்த்தும் தப்பாகப் பேச மாட்டார். கோபமே வராது.
அப்பா 40 ஆண்டுகளாக பென்சன் வாங்குகிறார். நானும் பென்சன் வாங்குகிறேன். அவர் என்னைப் பார்த்து சொல்வார்: üüநான் சீனியர் பென்சன்கரான்.. நீ ஜøனியர் பென்சன் காரன்,ýý என்பார். உண்மைதான்.
(தந்தையார் தினத்தை முன்னிட்டு எழுதியது)
அப்பாவுடனான பந்தம் – சிறப்பாகச் சொல்லியது உங்கள் பதிவு.