கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்
                                                     3
                          
விருட்சம் கூட்டத்தில் ஜெயகாந்தனைப் பற்றி அசோகமித்திரன் பேசியது.  
ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத ஆரம்பித்திருந்தார்.  பத்திரிகையில் அவர் கதை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  அவர் எழுதியவுடனே பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டும்.  ஒரு வாரம் தள்ளிப் போட்டால் கூட அவர் சண்டைப் போடுவார். 
ஆனந்தவிகடன் அந்தக் காலத்திலே முத்திரை கதைகளை வெளியிட்டது.  நீலவன், துமிலன், வையவன் என்று மூன்று பேர்களும் முத்திரைக் கதைகள்  எழுதி உள்ளனர்.  ஆனால் நீலவனும், துமிலனும் தொடர்ந்து எழுதவில்லை.  ஆனால் வையவன் கல்கியில் தொடர்ந்து எழுதினார். மகரிஷி என்ற எழுத்தாளர்.  இங்கு இப்போது பேசிய உமா பாலுவின் சித்தப்பா.  அவர் நேரிடையாகவே அவர் நாவல்களை புத்தகங்களாக வெளியிட்டவர்  அதன் மூலம் புகழ்பெற்றவர் பின்னால் பத்திரிகைகளிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார்.  
1950-60ல் கல்கிதான் அதிகப் பிரதிகள் விற்கும் பத்திரிகை.  60000 பிரதிகள் விற்றால், ஆனந்தவிகடன் 55000 பிரதிகள் விற்கும், அதற்குப்பிறகுதான் குமுதம் போன்ற பத்திரிகை.  ஆனால் போட்டி இந்த மூன்று பத்திரிகைகளுக்குத்தான்.
  
ஜெயகாந்தன் ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார்.  கல்கியில் நா பாரத்தசாரதி எழுத ஆரம்பித்தார்.  நா  பார்த்தசாரதி  தொடர் கதைகளாக எழுத ஆரம்பித்தார்.  அவர் தொடர் கதைகளில் எப்போதும் வ்ன்ர்ற்ஹற்ண்ர்ய்ள் களாக இருக்கும். அதைத் தனியாகப் பெரிசு பண்ணி வெளியிடுவார்கள்.  ஜெயகாந்தன் அப்படிஎயல்லாம் எழுத மாட்டார்.  கல்கி, ஆனந்தவிகடன் என்று போட்டியெல்லாம் இருந்து கொண்டு இருக்கும்.  
நா பா கல்கியில் ஆசிரியராக சேர்ந்து விட்டார்.  ஜெயகாந்தன் நினைத்திருந்தால்,  ஆனந்தவிகடன் பத்திரிகையில் சேர்நது விட்டிருக்கலாம்.  ஆனால் அவர் அதுமாதிரியெல்லாம் செய்ய வில்லை.  ஆனால் நா பாவால் தொடர்ந்து ஆசிரியர் பொறுப்பில் இருக்க முடியவில்லை.  அவர் அதில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.  ராஜினமா செய்ததை என் ராஜினமா என்று கட்டுரையும் எழுதி விட்டார்.  ஜெயகாந்தன் அப்படியெல்லாம் செய்யவில்லை. 
ஜெயகாந்தனுக்கு ஆனந்தவிகடனில் மணியனும், சாவியும் நண்பர்கள்.  சாவி வயதில் பெரியவர்.  இப்போது சாவி உயிரோடு இருந்தால், அவருக்கு 90 வயதாவது இருக்கும்.  படைப்புகளின் தரம் கண்டு பிடிப்பதில் சாவி திறமையானவர்.  எது பத்திரிகையில் வரவேண்டுமென்று அவருக்குத் தெரியும்.  
சாவி ஆனந்தவிகடனை விட்டுவிட்டு தினமணி கதிர் என்ற பத்திரிகைக்குச் சென்று விட்டார்.  தினமணி கதிருக்கு வந்தவுடன் அவர் ஜெயகாந்தனின் ஏற்கனவே வந்த கதைகளை திரும்பவும் பிரசுரம் செய்தார்.  இந்த விஷயத்தில் சாவி துணிச்சல்காரர்.  அநதப் பத்திரிகையில்தான் ஜெயகாந்தனின் ரிஷிமூலம் என்ற நாவல் வெளிவந்து கொண்டிருந்தது.  அந்த நாவல் மூன்று வாரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோது, தினமணி ஆசிரியர் சிவராமன் அந்நாவல் தொடர்ந்து வருவதை விரும்பவில்லை. நிறுத்தச் சொன்னார்.  அதனால் அந்த நாவல் நின்றுவிட்டது. நிறுத்துவதற்கு சாவியே ஒரு குறிப்பு எழுதியிருந்தார். 
ஒரு எழுத்தாளனுக்கு தொடர்ந்து வரும் எழுத்து நின்று போவது ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும்.  ஜெயகாந்தனும் அந்த நாவல் நின்று போவதற்கான குறிப்புகளை எழுதினார்.  அதன் பின் அவர் கதைகள் எழுதுவதை குறைத்துக்கொண்டு விட்டார்.  ஆனால் சுயசரிதம் எழுதினார்.  அதையும் மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.  கலை, அரசியல், எழுத்து வாழ்வு என்று.  கே எஸ் மாதிரி ஒரு நண்பர் ஜெயகாந்தனுக்குக் கிடைத்தது பெரிய விஷயம்.  நிறையா அபிமானிகள் கிடைப்பார்கள்.  ஆனால் டோட்டல் ஐடைன்டிவிக்கேஷனுடன் ஒருவர் கிடைப்பது ரொம்ப கடினம்.  அவர் ஜெயகாந்தனின் எல்லா எழுத்துக்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.  அவ்வளவு நெருக்கம் ஜெயகாந்தனுடன்.  அதனால்தான் ஜெயகாந்தன் கே எஸ் அம்மா இறந்தபோது துக்கம் விஜாரிக்க அவர் வீட்டிற்குப் போயிருக்கிறார்.  பொதுவாக ஜெயகாந்தன் துக்கம் விஜாரிக்க எங்கும் போக மாட்டார்.  உண்மையில் துக்கம் விஜாரிக்க யாருமே போக விரும்பமாட்டார்கள்.  ஆனால் வேறு வழியில்லாமல்தான் போக வேண்டியிருக்கும்.  நெருங்கிய உறவினர்கள் இறந்தால் போகும்படி நேரலாம்.  பார்க்கப் போனால் இறந்துபோன பிரேதத்தைப் பார்ப்பது போல் சங்கடம் இல்லாமல் இருக்காது.  உயிரோடு இருந்தபோது நாம் அவருடன் நெருங்கிப் பேசியிருப்போம்.  பிணமாகப் பார்க்க விரும்பியிருக்க மாட்டோம்.  அதனால்தான் ஜெயகாந்தன் துக்க வீட்டிற்குப் போவதை விரும்ப மாட்டார். அதனால்தான் அவர் கே எஸ் வீட்டிற்குச் சென்று,  “உங்க அம்மா உங்களுக்கு மட்டும் அம்மா இல்லை,” என்று சொன்னது  நாடகத் தன்மையாக இருக்கிறது. ஆனால் அவர் நிஜமாகவே அந்த நேரத்தில் அப்படி கருதி இருக்கலாம்.  
ஜெயகாந்தன் சிறு வயசிலே தாய் தந்தையெல்லாம் விட்டுவிட்டார்.  அவருக்கு குடும்ப ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கு சமூகத்தின் மீதும், வாழ்க்கையின் மீதும் வெறுப்பு இருந்துகொண்டிருக்கும்.  அவருடைய இளமை காலத்திலே அவர் அனாதையாகத்தான் இருந்திருக்கிறார்.  சின்ன வயசிலே சினிமா பாட்டுப் புத்தகங்களை விற்றிருக்கிறார்.  அப்புறம் அச்சுக் கோர்த்திருக்கிறார்.  அதாவது இது மாதிரி அச்சுக் கோர்த்த எழுத்தாளர்கள் மூன்று நான்கு பேர்கள் இருந்திருப்பார்கள். ம பொ சியைச் சொல்லலாம். இன்னொருவர் விந்தன்.  விந்தனுக்குக் கூட வாழ்க்கை மீது ஒரு வெறுப்புணர்ச்சி இருந்திருக்கலாம்.  விந்தன், ஜெயகாந்தன், தமிழ்ஒளி எல்லோரும் சேர்ந்து மனிதன் என்ற பத்திரிகை நடத்தினார்கள்.  மூன்று இதழ்கள்தான் அந்தப் பத்திரிகை வந்தது.
ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுதிக்கு, தி ஜா ரங்கநாதன்தான் முன்னுரை எழுதி இருக்கிறார்.  திஜரா ஒரு படிக்காத மேதை. ஐந்தாவதுக்கு மேலே அவர் படிக்கவில்லை. ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  கணிதத்தில் அவர் மேதையாக இருந்திருக்கிறார்.  முக்கியமாக கால்குலஸில் மேதையாக இருந்திருக்கிறார்.  செஸ் விளயாடுவதில் பெரிய மேதை.  அப்படிப்பட்ட தி ஜ ர ஜெயகாந்தனுடன்  கூடவே இருந்திருக்கிறார்.  ஒய்ஆர்கே ஷர்மான்னு இன்னொரு நண்பர் அவருக்கு.  அக்னி பிரவேசம்னு ஒரு கதை.  அக் கதைக்கு மேடையிலே வெளியிலே நல்ல எதிர்ப்பு.   அக் கதை 1966ல் எழுதியது.  ஆனா அந்தக் கதைப்படி ஒரு பெண்ணுக்கு நடந்தா என்ன செய்யறது?  இவரும் ஒரு மாதிரியா அதற்கு முடிவு கொடுத்திருப்பார்.   அப்ப நிறைய இலக்கியக் கூட்டங்கள் நடக்கும்.இலக்கியக் கூட்டங்களுக்கு இன்னும் நிறையப் பேர்கள் வருவார்கள்.  சாதாரணமா 40 பேர்கள் வருவார்கள்.  ஆனா அப்ப நிறையப் பேர்களுக்கு வேலை இல்லைன்னு தெரியறது.  அக்னிப் பிரவேசம் பற்றி ஒருத்தர் கேள்வி கேட்டார்.    ஜெயகாந்தன்  அவரிடம் ஓரு கேள்வி கேட்டார். “நீங்க யாரு?” என்று.  அதற்கு கேள்வி கேட்டவர், “நானும் ஒரு எழுத்தாளன்,” என்றார்.  “அப்ப நீங்க ஒரு கதை எழுதிடுங்களேன்,” என்றார் ஜெயகாந்தன்.  அப்படி கேள்வி கேட்டவர் நாகநந்தி.  கல்கி கதைகளில் வர்ற கதாபாத்திரத்தின் பெயர்தான் நாகநந்தி.  
அந்தக் காலத்தில நாவல்களில் வர்ற கதாபாத்திரங்களை பெயர்களாக வைத்துவிடுவார்கள்.  சினிமாவில கூட எதாவது ஒரு கதாபாத்திரம் பெயர் மனசுல பதிஞ்சா, அந்தப் பெயரை பிறக்கறவர்களுக்கு வைத்து விடுவார்கள். அப்படித்தான் சினிமாவில உள்ள சரோஜா என்கிற பெயரை எல்லோரும் வைத்திருப்பார்கள். அதே போல கமலா கமலான்னு பெயர் வைத்திடுவார்கள்.
  அதேபோல் பத்மினி பத்மினின்னு வைத்திடுவார்கள்.  ஆனால் வைஜெயந்திமாலான்னு பெயர் நீளமா இருக்கு.  அதை யாரும் வைக்க மாட்டார்கள்  நாகநந்தியும் ஒரு கதை எழுதினார்.  அந்தக் கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்ளுவதுபோல.  
ஜெயகாந்தனும் அக் கதையின் தொடர்ச்சியாக சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நாவல் எழுதினார்.  ஆனால் இப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடந்தால் எவ்வளவு சங்கடமாக இருக்கும்.  அதன் பின் அவர் எழுதுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.  சினிமாவில அவருக்கு உண்மையான ஈடுபாடு இல்லை.  சினிமான்னா நிறையா சமரசம் செய்யணும்.  அவரோட ஐந்தாறு படங்கள் சொல்லலாம்.  உன்னைப் போல் ஒருவன் படத்தில சிட்டின்னு ஒரு பையன் வருவான்.  அது அவருடைய கதாபாத்திரம்தான்.  அந்தப் பையனைப் பார்த்து வாத்தியார் கேட்பார்: “நீ சிகரெட் பிடிக்கிற…ஆனா எதுக்கு சிகரெட் பிடிக்கிற?  பெரியவங்ககிட்ட உனக்கு உள்ள எதிர்ப்பைக் காட்டத்தான்,” என்பார்.
ஒரு கட்டத்தில அவரால சினிமாவில ஈடுபட முடியலை.  ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்று ஒரு நாவல் எழுதி இருந்தார்.  அதில் உள்ள உருவ அமைதி  வேற நாவல்கள் இருக்காது.  அதை அவர் ஒரு பக்குவமான கட்டத்தில் எழுதி இருக்கிறார்.  அதன் பின் அவர்  ஜெய ஜெய சங்கரா எழுதினார்.  அதில் கூட முதல் பகுதி மாதிரி இரண்டாவது, மூன்றாவது பகுதி வராது.  முதல் பகுதியிலே எல்லாம் முடிஞ்சுப் போச்சு.  அது ஒரு லட்சம் பிரதிகள் விற்றதா சொல்வார்கள்.  
அதன் பின் அவர் எழுதவில்லை.  ஆனாலும் அவரை நான் போய் பார்ப்பேன்.  அவர் அமெரிக்கா எல்லாம் போயிருக்கார்.  ஆனால் அவர் சோவியத் யூனியனுக்குப் போகிற விருப்பம் அமெரிக்கா போவதில் இல்லை. அமெரிக்கா போய்விட்டு வந்தபின் அவர் அபிப்பிராயம் மாறி விட்டது.  ஆனால் அவர் அதைப் பற்றி எழுதவில்லை.  இப்பெல்லாம் எழுதுகிறவர்கள் சாதாரணமா ஒரு இடத்திற்குப் போய்வந்தால் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.  ஆனால் அவர் அதுமாதிரி செய்யவில்லை.    
கூப்பிட்டால் அவரும் எங்கள் வீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிக்கெல்லாம் வருவார்.  சிமந்தம் மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு மழையில் நனைந்து வந்திருக்கிறார்.   திவேஷம், வெறுப்பு எல்லாம் அவரிடம் கிடையாது.     கவிதா பதிப்பகம் அவருடைய கதைகள் எல்லாவற்றையும் அவருடை சஷ்டியப்தி பூர்த்தி அன்று சேர்த்துப் போட்டிருக்கிறார்கள்.  ஆனந்தவிகடன் கொண்டு வந்த கதைகள் ஒரு பகுதிதான்.   அப்புறம் கே எஸ் அவர்கள் அவருடைய எல்லாக் கதைகளையும் ஆங்கிலத்தில் கொண்டு வந்திருக்கிறார்.   அவர் காலத்தில அவருக்கு எல்லாம் கிடைத்துவிட்டது.  
(23.05.2015அன்று அசோகமித்திரன் விருட்சம் கூட்டத்தில் பேசியது.)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன