டாக்டர் பாஸ்கரன்’
விருட்சம் தனது 11 ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்வினை 25- 4 – 2015 அன்று
மாலை, தி நகர் அலமேலுமங்கா திருமண மண்டபத்தில் நடத்தியது. சமீபத்தில்
விஷ்ணுபுரம் பரிசு பெற்ற கவிஞர் திரு ஞானக்கூத்தன் அவர்கள் ‘படைப்பின்
இரக்சியம்’ பற்றிப் பேசினார்.
கொல்லன் பட்டறையில் ஈயாக நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்!
முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களைச் சந்திக்கும் அவா
மேலோங்கியிருந்தது !
முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களைச் சந்திக்கும் அவா
மேலோங்கியிருந்தது !
சுஜாதா அவர்கள் பல கட்டுரைகளில், பல சந்தர்ப்பங்களில்
ஞானக்கூத்தனைவாசிக்கச் சொல்லுவார்! கவிதையுலகில் தனக்கென ஒருதனியிடம்
உள்ளவர் – அவர் கவிதைகள், காலம் கடந்தும் அவர் புகழ் பாடும். அவரது கவிதை
உள்ளமும், வார்த்தைகளை அலசி ஆராயும் திறனும், தொலை நோக்குப் பார்வையும்,
பரந்துபட்ட இலக்கிய அறிவும், அவரது “கவிதைக்காக” ( கட்டுரைகள்,
மதிப்புரைகள்) – விருட்சம் வெளியீடு – புத்தகத்தை வாசிக்கும்போது
புலப்படும் ! அவரைப் போல்,வரிகளுக்கிடையே, வார்த்தைகளுக்கு நடுவே,
எழுத்துக்களுக்குப் பின்னே என அழகாகப் பொருள் சொல்லமுடியாது – அதற்கு,
அவருள் இருக்கும் கவிஞனின் பார்வையும், தேடலும் தேவை ! ’கவிதைக்காக’
புத்தகம் பற்றி சற்று விரிவாக வேறொரு சமயம் சொல்லவேண்டியிருக்கிறது .
முதலில், ஞானக்கூத்தன் அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது.
மிகச் சிறப்பான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. திருவல்லிக்கேணியில்
அவர் வாழும் வீடு, தெரு,பார்த்தசாரதி கோயில், கறவைப் பசு, சைக்கிள்,
மனிதர்கள் எல்லாம் கவிதை பேசின ! இலக்கிய ஆளுமைகள், உறவினர்கள், நண்பர்கள்
மற்றும் ஞானக்கூத்தன் ஆகியோரது கருத்துக்களை அவர்களே சொல்லுவதுபோல் நல்ல
முறையில் தொகுத்திருந்தார்கள். இரயிலின் கடைசீப் பெட்டி மெதுவாக ஊர்ந்து
மறைய, அது மனதில் ஏற்படுத்தும் வெறுமையைக் கூறும் ஞானக்கூத்தனின் கவிதை
வரிகளுடன் படம் முடிவது நல்ல முத்தாய்ப்பான நெகிழ்ச்சி. இப்படத்தினைத்
தயாரித்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் !
கணையாழியில் தான் எழுதிய ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரையை திரு மூர்த்தி
அவர்கள் வாசித்தார் – தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக ஞானக்கூத்தன் பற்றிய
அவர் கட்டுரைகள் வெளியாவதாகக் குறிப்பிட்டார். மூன்று கட்டுரைகள்
போதாதுதான் !
பிறகு பேசிய ஞானக்கூத்தன் அவர்கள், மொழி, சொற்கள், அவை உணர்த்தும் ‘இலை மறை
காய்’ அர்த்தங்கள் எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு
படைப்பாளி எப்படித் தன் தூக்கத்தை இழக்கிறான் என்று விளக்கிய அவர், அந்தக்
காரணத்தாலேயே கூட்டங்களுக்கு அதிகம் பேச வருவதில்லை என்றும் கூறினார்.
நல்லவற்றை எழுத, ஒரு படைப்பாளி நல்ல மனமுடையவனாகவும் இருப்பது அவசியம்
என்றார்.
கேள்வி பதில் நேரத்தில், சில கவிதைகளை அவற்றின் போக்கிலேயே, இடம், காலம்
சார்ந்து பொருள் கொள்ளவேண்டும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதில்
அளிக்கையில்,” காலைத் தூக்கி நிற்பவர்தான் நடராஜர் – இல்லையேல் அது அவர்
இல்லை “ என்றும், ‘காலைத் தூக்கி’ என்று எழுதுவதற்கும், ’தூக்கிய திருவடி’
என்பதற்குமான இலக்கிய நய வேறுபாட்டை அழகாக எடுத்துரைத்தார்.
திரு அசோகமித்திரன் அவர்கள் எழுத்தாளர்கள் தூக்கம் இழப்பதைப் பற்றியும்,
ஒரு கவிதை எந்த சூழலில் எழுதப்படுகிறது என்பதின் முக்கியத்துவத்தைப்
பற்றியும் அழகாகப் பேசினார். இந்தத் தள்ளாத வயதிலும் அவர் காட்டும் இலக்கிய
ரசனை இன்னும் இளமையாக இருப்பது வியப்புக்குரியது !
நன்றி கூறிய ஆடிட்டர் திரு கோவிந்தராஜன், புதியவர்கள் பலர்
இக்கூட்டங்களுக்கு வருகை தருவது மகிழ்ச்சிக்குரியது என்றார். மார்ச் மாத
சிறந்த சிறுகதைக்கான பரிசினை திரு அசோகமித்திரனுக்கும், சிறப்புரை ஆற்றிய
ஞானக்கூத்தன் அவர்களுக்குப் பரிசினையும் வழங்கியவுடன் கூட்டம்
நிறைவடைந்தது.
நல்ல இலக்கிய சிந்தனையுடனும், மகிழ்ச்சியான மன நிறைவுடனும் விருட்சம் இலக்கியக் கூட்டம் நிறைவடைந்தது !