விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பதினோராவது கூட்டம்

அழகியசிங்கர்
ஆச்சரியமாக இருக்கிறது.  11 கூட்டங்கள் நடந்து முடிந்து விட்டதை எண்ணி.  முதலில் நானும் ஆடிட்டர் கோவிந்தராஜன் அவர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டம், சில கூட்டங்களில் நின்று விடுமென்று நினைத்தேன்.

ஆனால் கூட்டம் தொடர்ந்து நடத்துவதென்பது சாத்தியமாக எனக்குத் தோன்றவில்லை.  ஒவ்வொரு கூட்டம் முடிவிலும் ஒவ்வொன்றை சரி செய்ய வேண்டுமென்று நான் நினைப்பேன்.  ஸ்ரீ அசோகமித்திரனை வைத்து முதல் கூட்டம் ஆரம்பித்தபோது, மைக் முதலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தோம்.  உடனே வாங்கினோம்.  இப்போது மைக் மூலமாகத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருகிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை.  எனக்கும் ஆடிட்டருக்கும் இதில் தெளிவான பார்வை உண்டு.  ஆனால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்காக செலவழிக்கும் நேரத்தை உபயோகமாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  அதனால் கூட்டத்தில் பேசுவதை பதிவு செய்ய வாய்ஸ் ரெக்கார்டரை நான் பயன் படுத்துவது வழுக்கம்.  சோனியின் இந்த வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பல கூட்டங்களைத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறேன்.
என் நெடுந்நாளைய நண்பரும், கவிஞருமான ஞானக்கூத்தனை இந்த முறை பேசக் கூப்பிட்டேன்.  அவரும் பெரிய மனது பண்ணி பேச இசைந்தார்.  அவர் என்னைவிட 15 ஆண்டுகளுக்குமேல் மூத்தவர்.  மேலும் திருவல்லிக்கேணியிலிருந்து அவர் கூட்டம் நடக்குமிடத்திற்கு வரவேண்டும்.  எந்தத் தலைப்பில் அவர் பேசப் போகிறார் என்று கேட்டதற்கு அவர் உடனே படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் பேச ஒப்புக் கொண்டார்.
முன்னதாக ஸ்ரீ வினோத் என்பவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்  ஞானக்கூத்தன் குறித்து ஒரு குறும்படம் எடுத்திருந்தார். அதைச் சிறப்பாகவே அவர் எடுத்திருந்தார்.  ஆரம்பத்தில் எனக்கு ஸ்ரீ வினோத் மீது அவநம்பிக்கையே கூடி இருந்தது.  ஆனால் அந்த குறும்படத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாகப் போய்விட்டது.  கச்சிதமாகவும் திறமையாகவும் அந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது.  அந்தக் குறம்படத்தைக் காட்டிவிட்டு பின் கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று தோன்றியது.  அதன்படியே குறும்பட நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்தோம்.
குறும்படம் முடிய 45 நிமிடங்கள் ஆனது. ஞானக்கூத்தன் பேசுவதற்கு முன் தேவகோட்டை வா மூர்த்தி என்ற எழுத்தாளர் ஞானக்கூத்தன் குறித்து எழுதிய கட்டுரையை வாசிக்க விரும்பினார்.  கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கட்டுரையை வாசித்தார்.  அக் கட்டுரை 1960ல் கணையாழியில் எழுதிய கட்டுரை.  தொடர்ந்து இப்போதும் ஞானக்கூத்தன் கவிதைகள் எழுதி வருகிறார்.  அது குறித்து அவர் என்ன நினைக்கிறார்.  பின் ஞானக்கூத்தன் தன்னுடைய உரையைத் துவக்கினார்.  கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் பேசினார்.  கடந்த 11 கூட்டங்களில் நான் கேட்ட  சற்று கனமான உரை வீச்சை அன்றுதான்  உணர்ந்தேன்.  கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் அவர் என்ன பேச வருகிறார் என்பது தெரியாமல் போய்விடும்.   ஆரம்பத்தில் அவர் சொல்வது சற்று புரியாமல்தான் போயிற்று.  
ஞானக்கூத்தன் பேசும்போது குறிப்பிட்டார், ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன்.  இந்தக் கவிதையை எல்லோரும் சொன்னதை நான் கவிதையாக எழுதி உள்ளேன்.  நான் சொல்லலை அது மாதிரி,’ என்றார். 
‘எழுத்தெல்லாம் படிக்கறவங்க மனசுல புகுந்து கொள்கிறது.  அதனால் எழுதறவங்க படிக்கிறவங்க மனசை கெடுக்காமல் எழுத வேண்டும்.’
அசோகமித்திரன் ஞானக்கூத்தனைப் பற்றி எடுத்த குறும்படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.  கூட்டம் வழக்கம்போல் எட்டுமணிக்கு முடிந்துவிட்டதுஞி
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *