அழகியசிங்கர்
புத்தகக் காட்சி என்பது நண்பர்களை, உறவினர்களை, எழுத்தாளர்களை சந்திப்பதற்காக அமைந்த இடம். இந்த முறை கூட்டம் அதிகம். கடைசி நாள் கூட கூட்டம் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியின் போது, கால சுப்பிரமணியமை சந்திப்பது வழக்கம். என் கடையில் அவர் சிறிது நேரம் இல்லாமல் இருக்க மாட்டார். அவர் முகத்தைப் பார்க்கும்போது ஒரு நீண்ட மௌனம் தொங்கிக் கொண்டிருப்பதாக தோன்றும். சத்தமாகவே பேச மாட்டார். யாருடனும் அவர் சண்டைப் போட்டு நான் பார்த்ததில்லை. ஆனால் தன்னுடைய அபிப்பிராயத்தில் அவர் உறுதியாக இருப்பார். பிரமிளைத் தவிர வேற யாரையாவது அவர் எழுத்தாளராகக் கருதுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் நானோ வேற மாதிரி. அவரை மாதிரி எழுத்தாளர்களை உதற மாட்டேன்.
ஒரு எழுத்து சரியில்லாத எழுத்து என்று சொல்வதை நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். அதனால் கையில் கிடைக்கும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன். கவிதைகள் எழுதும் கவிஞர்கள் மீது எனக்கு அலாதியான பிரியம் உண்டு. ஏன் என்றால் கவிதைப் புத்தகத்தைதான் நான் விற்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பேன்.
லயம் சுப்பிரமணியம் ஒன்று சொன்னார். அவர் ஒரு தமிழ் புத்தகத்தைப் படிப்பதற்கு எடுத்தால் ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் படித்து முடித்து விடுவாராம். என்ன கதை விடுகிறாரா என்று தோன்றியது. ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன், இன்னொரு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவாராம். புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத மாட்டாராம். என் விஷயம் வேறு, நான் எதாவது எழுத வேண்டுமென்று நினைப்பவன். அப்படி எழுத மறந்து விட்டால், திரும்பவும் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது, என்ன படித்தோம் என்று எனக்கு மறந்து விடும். அதனால் சரியோ தப்போ எதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்தாலோ, அல்லது ஒரு சினிமாவைப் பார்த்தாலோ எழுத வேண்டுமென்று தோன்றும்.
எனக்கு அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. தமிழ் புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் படிப்பதா? நானும் எவ்வளவு பக்கங்கள் படிக்க முடியும் இன்று முயற்சி செய்து பார்த்தேன். 50 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை.
ஆங்கிலப் புத்தகங்கள் 80 பக்கம் வரை படிக்க முடியுமாம். நான் 30 பக்கம் படிப்பேனா என்பது சந்தேகம். இதைப் பற்றி அவர் சொன்னதைக் கேட்டு, ஒவ்வொருவரிடமும் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் புத்தகக் கண்காட்சியின்போது.
சுப்பிரமணியம் இன்னொன்றும் சொல்கிறார். படிக்க படிக்க பக்கங்கள் அதிகமாக படிக்க முடியும் என்று. ஒரு தடியான நாவலைப் பார்த்தால் எனக்கு அயர்ச்சியாக இருக்கும். ஆனால் அவரோ எளிதாக ஒரு சில தினங்களில் முடித்து விடுவாராம்.
என் புத்தக ஸ்டாலுக்கு வந்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் வாங்கும் புத்தகங்களைப் படிப்பீர்காள?’
என்று கேட்க நினைத்தேன். அப்புறம் விட்டுவிட்டேன். ஏன் என்றால் புத்தகம் வாங்குபவர்களை அப்படி ஒரு கேள்வி கேட்டால், புத்தகம் வாங்காமரல் போய்விட்டால் என்ன செய்வது?’