அழகியசிங்கர்
விருட்சம் இலக்கியச் சந்திப்பின் நான்காவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நடந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரை கூப்பிட்டுப் பேசச் சொல்வது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். இப்படிப் பேசச் சொல்லும்போது எத்தனைப் பேர்கள் வருவார்கள் அல்லது வராமல் போவார்கள் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை முக்கியமில்லை. ஆனால் பேச வருபவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பது தெரியில்லை.
இந்த முறை காந்தியிடம் காரியதரசியாக பணியாற்றிய ஸ்ரீ கல்யாணம் அவர்களை பேசக் கூப்பிட்டோம். அவருக்கு வயது 93. காந்தியுடன் உயிரோடு இருந்தவர்கள் 3 பேர்தான் உலகம் முழுவதும். அந்த மூன்று பேர்களில் கல்யாணமும் ஒருவர். கல்யாணம் ஒரு எளிமையான வாழ்க்கையை எந்தவித ஆடம்பரமுமின்றி வாழ்ந்து வருகிறார். தனியாக 93 வயது மனிதர் இருந்து வருகிறார். அவருக்கு செடிகொடிகள் மீது அலாதியான பிரியம். காலையில் மூணு நாலு மணி நேரம் அதற்காகவே செலவிடுகிறார். அவர் சாப்பாட்டு தேவை மிக மிகக் குறைவு.
இன்றைய அரசியல் குறித்த அதிருப்தியை அவர் காந்தியைப் பற்றி பேசும்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். வெள்ளைக்காரன் ஆட்சி சிறந்த ஆட்சி எண்கிளார். அந்த ஆட்சியில் இது மாதிரி பாலியல் பலாத்காரம், திருட்டெல்லாம் நடக்கவில்லை என்றார்.
‘காந்திக்கு மொத்தம் 3 காரியதரசிகள். மற்ற இரண்டு காரியதரசிகள் மிகச் சிறந்த நிர்வாகிகள். அவர்கள் சீக்கிரம் இறந்தும் விட்டார்கள். நான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னை முக்கியமாகக் கருதுகிறார்கள். உண்மையில் நான் காந்திக்கு ஒரு டைப்பிஸ்ட் மாதிரி என்றார் கல்யாணம் தன்னடக்கமாக.
ஒருமுறை நேரில் பார்க்கும்போது, ‘எனக்கு மாதம் மூவாயிரம் மேல் செலவு இல்லை,’ என்றார். அவரே சமையல் செய்து கொள்கிறார்.
காந்தியை கோட்úஸ சுட்டுக்கொள்ளும் தருணத்தில் அவர் அருகில் இருந்த பலரில் கல்யாணமும் ஒருவர். கல்யாணம் சொல்கிறார்: கோட்úஸ பலமுறை காந்தியைச் சுடுவதற்கு வந்து கொண்டிருந்தான். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அது நடக்கவில்லை….போலீசு காந்தியைப் பார்க்க வருபவர்களில் பாக்கெட்டுகளை சோதனை இட வேண்டும் என்றார்களாம். ஆனால் காந்தி சம்மதிக்கவில்லையாம். அதனால்தான் கோட்úஸ துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்தான் என்கிறார் கல்யாணம்.
காந்தியைச் சுடும்போது ஹே ராம் என்று சொன்னாரா என்பது தெரியவில்லை. ஒரே கூச்சலாக அமைதியின்றி இருந்தது. அந்தச் சத்தத்தில் அவர் ஹே ராம் என்று சொல்லியிருந்தால் கேட்டிருக்காது என்றார் கல்யாணம்.
காந்தியுடன் ரயிலில் பயணம் செய்யும்போது கட்டாயம் டிக்கட் வாங்க வேண்டுமாம். யாரோ டிக்கட் வாங்குவார்களாம். கல்யாணத்திற்கு இது தெரியாதாம். ஒருமுறை ரயில் பயணத்தின் போது காந்தி கல்யாணத்தைப் பார்த்துக் கேட்டாராம். ‘என்ன டிக்கட் எடுத்தீரா?’ என்று. கல்யாணம் ‘டிக்கட்டா,’ என்று முழித்தாராம். காந்தி அவரை அடுத்த ரயில் நிலையத்தில் டிக்கட் கட்டாயம் வாங்க வேண்டுமென்று சொல்லிவிட்டாராம். ரயில் அடுத்த ரயில் நிலையத்தில் நின்றபோது ஏகப்பட்ட கூட்டமாம். அந்தக் கூட்டத்தில் காந்தி ஸ்டேஷன் மாஸ்டரை பக்கத்தில் வரும்படி சொன்னாராம். அந்தக் கூட்டத்தில் தன்னை மாத்திரம் கூப்பிடுகிறாரே என்ற திகைப்பாம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு. பின் காந்தி அவரிடம் சொல்லி கல்யாணத்திற்கு ஒரு ரயில் டிக்கட் வாங்கினாராம்.
இந்தியா சுதந்திரம் அடைவதை விட காந்தியை ரொம்பவும் பாதித்தது ஹிந்து முஸ்லீம்கள் தகராறுதான். காந்தி இந்தக் கலவரத்தைக் கண்டு துவண்டு விட்டாராம். காந்தியைப்பற்றி பேசிக்கெணர்டே வரும்போது ஆங்கில ஆட்சியே சிறப்பானது என்று அடிக்கடி கல்யாணம் பேசும்போது சொல்லிக் கொண்டிருந்தார்.
எந்த வேலையும் இல்லாமல் கல்யாணத்தால் சும்மா இருக்க முடியாது. ஒரு முறை எந்த வேலையும் இல்லாமல் கல்யாணம் சும்மா இருந்தாராம். பின் காந்தியைப் பார்த்து எந்த வேலையும் இல்லை என்றாராம். கல்யாணத்தை காந்தி உடனடியாக கழிவறையைச் சுத்தம் செய்ய சொன்னாராம். காந்திக்கும் அவர் மனைவி கஸ்தூரிபாயிற்கும் இதுதான் பிரச்சினை. இன்னொருவர் பயன்படுத்தும் கழிவறையை ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று காந்தியைப் பார்த்து கஸ்தூரிபாய் கேள்வி கேட்பாராம். ஆனால் காந்தி அவர் சொல்வதில் உறுதியாக இருப்பாராம்.
அம்பேத்கார் பற்றி காந்தி நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தாராம்.
கல்யாணம் 2 மணிநேரம் விடாமல் பேசினார். அவர் காந்தியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தற்கால அரசியல் பற்றியும் அதிகம் பேசினார். இது அவர் பேச்சோடு சரியாக இணையவில்லை.