எதையாவது சொல்லட்டுமா……96


    அழகியசிங்கர்

            இன்று மதியம் தொலைபேசியில் ஒரு கேட்ட குரல் ஒலித்தது.  ”நீல பத்மநாபனா?” என்று கேட்டேன்.  ‘ஆமாம்’ என்று பதில் வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டரில் அவருடைய கூட்டம்.  

               
                உண்மையில் அந்தக் கூட்டம் சனிக்கிழமையே முடிந்து விட்டது என்று நினைத்துவிட்டேன்.  உடனே நான் சில நண்பர்களுக்கு போன் மூலம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன்.  இந்தக் கூட்டத்தின் முக்கியமான பங்கு என்னவென்றால், பல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கலாம்.  முக்கியமாக நீல பத்மநாபனை சந்திக்குமிடமும் இதுதான்.  வயதின் முதிர்ச்சியில் அவர் தளர்ந்து காணப்பட்டார்.  
       அவருடைய ‘இலைஉதிர் காலம்’ நாவலைப் பற்றி சுப்ர பாலன் என்ற எழுத்தாளர் விமர்சனம் செய்தார்.  பின் நீல பத்மநாபன் சுருக்கமான ஒரு உரையை வெளிப்படுத்தினார்.  கூட்டம் 40 அல்லது 50 பேர்கள் கொண்டதாக இருந்தது.  நீல பத்மநாபன் நாவல்கள் முழுவதையும் மறு வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டுமென்று தோன்றியது.  இன்றைய சூழ்நிலையில் தமிழில் புத்தகம் படிப்பவர்களே அரிதாக மாறிக்கொண்டு வருகிறது.  அதுவும் தமிழில்.  ஒரு போராட்டமே நடத்தினால்தான் புத்தகம் படிக்க வைக்க முடியும்.  நீல பத்மநாபன் அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் அவருடைய படைப்புகளால் தலை நிமிர்ந்து நின்றவர்.  அவருக்கு எல்லா பரிசுகளும், மரியாதைகளும் கிடைத்து விட்டன. அவர் திரும்பவும் அவர் எழுத்துக்களையே திரும்பிப் பார்க்கும் நிலையில் உள்ளார். 

    எனக்கு எப்போதும் நீல பத்மநாபன் என்று சொன்னால், நகுலன் ஞாபகம்தான் வரும்.  திருவனந்தபுரம் என்றால் நகுலன், நீல பத்மநாபன், காசியபன், ஷண்முக சுப்பையா பேர்கள்தான் ஞாபகத்தில் வரும். 

       நீல பத்மநாபனை பலர் கேள்வி கேட்டார்கள்.  நான் ஒரு கேள்வி கேட்டேன்.  ‘உங்கள் நண்பர் நகுலனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று.

         ‘நகுலன் என் குருமாதிரி.  நான் எழுதுவதை அவரிடம் காட்டி அபிப்பிராயம் கேட்பேன்.  அவர் அதைப் படித்துவிட்டு எல்லோரிடமும் குறிப்பிடுவார்,’என்றார். 

    நீல பத்மநாபன் பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *