எதையாவது சொல்லட்டுமா…..93

                                                                                                       


அழகியசிங்கர்   

இந்த ஆண்டு பிப்பரவரி மாதம் போல் ஒரு சோதனையான மாதத்தை நான் சந்தித்ததே இல்லை.  வங்கியிலிருந்து 33 ஆண்டுகளுக்கு மேல் பணி ஆற்றி பதவி மூப்பு அடைகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.  அதாவது பிப்பரவரி மாதம் நான் பதவி  மூப்பு அடையும் மாதம்.  அந்த மாதம்தான் எனக்குப் பிரச்சினையான மாதமாக மாறிவிட்டது.  கண் பொறை காரணமாக எனக்கு இரண்டு கண்களிலும் சரியான பார்வை இல்லை.  வண்டி ஓட்டிக்கொண்டு செல்லமுடியவில்லை. கணினிகளைப் பார்க்க முடியவில்லை.   கண் பார்வையைச் சரி செய்யலாமென்றால் சர்க்கரை நோயையும், உயர் அழுத்த நோயையும் சரி செய்தால் முடியும்.  அதை உடனே செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் அலுவலகம் போகலாமா வேண்டாமா என்ற நிலை.  ஆனால் அலுவலகத்திற்கு வரும்படி தொந்தரவு.  வேறு வழியில்லாமல் அலுவலகம் வந்துகொண்டிருந்தேன்.  நிம்மதியாக ஏன் பதவி மூப்பு அடைய முடியவில்லை என்று தோன்றி கொண்டிருந்தது.


    ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து எனக்கு இந்தப் பிரச்சினை.  அதனால் அலுவலகம் வராமல் இருந்தேன்.  பிப்பரவரி நாலாம் தேதிதான் திரும்பவும் வந்தேன்.  அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மிஸஸ் ஐராவதம் அவர்களிடமிருந்து எனக்கு போன்.  “பேசிக்கொண்டே இருந்தார்..அப்படியே விழுந்து விட்டார்….அவசரமாக ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்..வர முடியுமா?” என்று அவசரமான தொனியில் பேசினார்.  நானும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவசரமாக அவர் வீட்டிற்குச் சென்றேன்.  நான் அப்போது ஒன்றும் நினைக்கவில்லை.  ஏதோ மயக்கமாகி விழுந்திருப்பார்.  ஆஸ்பத்ரியில் சேர்க்கும்படியாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்.  ஐராவதம் மனைவி முடியாதவர்.  கொஞ்ச மாதங்களாக கால் நடக்க முடியாமல் எங்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருப்பவர்.  அவருடன் பேசிக்கொண்டிருந்த ஐராவதம்தான் எதிர்பாராதவிதமாய் சாய்ந்து விட்டார். 

    நான் போனபோது ஐராவதம் பிணமாகத்தான் ஆஸ்பத்ரியிலிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டார்.  ஆப்புலன்ஸ் வண்டியில் தூங்குவதுபோல் படுத்துக்கிடந்தார்.  அன்று நெற்றியில் பட்டையாய் விபூதி இட்டிருந்தார்.  நான் இப்படி ஒரு ஐராவதத்தைப் பார்ப்பேன் என்று சந்றும் எதிர்பார்க்கவில்லை.  பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி சந்தித்துக்கொள்பவர்களில் ஐராவதம் ஒருவர்.  புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் விவாதித்துக்கொண்டிருப்போம்.  பின் அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொடுப்பேன்.  சரவணா பவன் ஓட்டலுக்குச் சென்று பொங்கல், காப்பி சாப்பிடுவோம்.  வண்டியில்தான் அழைத்துக் கொண்டு போவேன்.  அவரால் கொஞ்ச தூரம்கூட நடக்க முடியாது. 

    எனக்கு ஐராவதத்தைப் பார்க்கும்போது சம்பத் ஞாபகம் வரும்.  இரண்டு பேர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.  ஒரே குண்டு, ஒரே உயரம்.  இருவரும் நல்ல நண்பர்கள்.  பணம் பத்தும் செய்யும் என்ற கதையை இருவரும் சேர்ந்தே எழுதியிருக்கிறார்கள்.  ஐராவதம் சொல்வார் :  ‘நான் சொல்ல சொல்ல சம்பத் எழுதுவான்’ என்று.  சம்பத் ஐராவதம் விட சற்று திவீரமானவர்.  ஒருமுறை பரீக்ஷா நாடக விழாவில் சம்பத் சத்தம் போட்டு கத்தியதை நான் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.  ஐராவதம் அப்படி இல்லை. 

    ‘கெட்டவன் கேட்டது’ என்ற சிறுகதை ஒன்றை கவனம் என்ற சிற்றேட்டில் ஐராவதம் எழுதியிருந்தார்.  அதைப் படித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  அவரும் மாம்பத்தில்தான் வசிக்கிறார் என்பதை அறிந்தேன்.  அப்படித்தான் என் தொடர்பு அவருடன் ஏற்பட்டது. 

    அவர் மனைவியால் மட்டுமல்ல என்னாலும் அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.  ‘நான் ரிட்டையர்ட் ஆகி வந்து விடுகிறேன்.  அதன் பின் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன்’ என்று நான் அடிக்கடி அவரிடம் சொல்வது வழக்கம். அவர் இறந்த நான்காம் தேதி அன்று எனக்கு தூக்கமே வரவில்லை.  ஐராவதம் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. 

    ஐராவதம் புத்தகங்களைப் படித்துவிட்டு எழுதுவது வழக்கம்.  அவருடைய பொழுதுபோக்கே புத்தகம் படிப்பதுதான்.  அவர் கடைசியாக விஸ்வரூபம் என்கிற இரா முருகனின் மெகா நாவலைப் படித்தது.  அதைப் படித்தவுடன், ‘இரா முருகனைப் பார்க்க ஏற்பாடு செய்யா..’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்.  பொதுவாக அவர் எழுதுவதை என்னிடம் கொடுப்பார்.  நான் அப்படியே என் பிளாகில் ஐராவதம் பக்கங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதுவதைப் போடுவேன்.  அவர் வேகத்திற்கு என்னால் ஈடுகட்ட முடியவில்லை.  ‘கொஞ்சம் அவசரப் படாதீர்கள்.  நான் ரிட்டையர்ட் ஆகி வந்து விடுகிறேன்.  நேரம் அதிகமாகக் கிடைக்கும்,..,போடுகிறேன்..’ என்று சொல்வேன். 

    ஒருமுறை இலக்கியச் சிந்தனைக் கூட்டத்திற்கு என் வண்டியின் பின்னால் உட்காரவைத்து ஐராவதம் அவர்களை அழைத்துக்கொண்டு போனேன்.  ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஐராவதம் அவர்களால் எளிதில் வரமுடியாது.  யாராவது ஒருத்தர் துணை வேண்டும்.  அழைத்துக் கொண்டு போக ஒருவர் வேண்டும்.  என் துணையுடன்தான் பல இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.  அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்.  பல படைப்பாளிகளைப் பார்க்கவே விரும்ப மாட்டார்.  அதைப்போல் இலக்கியக் கூட்டமும் அவருக்குப் பிடிக்காது. 

    இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் ஐராவதம் அவர்களைப் பார்த்த நா. முத்துசாமி. “என்னய்யா…உம்மைப் பார்க்கிறதே அதிசயமாய் இருக்கிறது…இங்கெல்லாம் வந்திருக்கிற..”என்று விஜாரித்தார்.  ஐராவதம் அவர்களுக்கு எப்போதும் ஒருவித நகைச்சுவை உணர்வு உண்டு…உடனே என்னைக் காட்டி,”இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.

    ஒருமுறை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிரமிள் உயிருக்குப் போராடியபடி படுத்துக் கிடந்தார்.  நான் ஐராவதத்தை அழைத்துக்கொண்டு அங்கு வந்திருந்தேன்.  மருத்துவமனை மாடியில் பிரமிள் படுத்துக்கொண்டிருந்தார்.  ஐராவதத்தைப் பார்த்து, ‘பிரமிள் மேலே இருக்கிறார்…பார்க்க வருகிறீர்களா?’ என்று கேட்டேன்.  ஐராவதம் உடனே, ‘அவருக்கு நான் காட்சிப் பொருளாக இருக்க விரும்பவில்லை,’ என்றார்.  ஐராவதத்தின் இந்தப் பதில் எனக்கு திகைப்பாக இருந்தது.  யாருக்கு யார் காட்சிப் பொருள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  சில எழுத்தாளர்களை சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால், போய்ப் பார்க்கக் கூட விரும்ப மாட்டார்கள்.  ஐராவதமும் அப்படித்தான். 

    ஐராவதம் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  நான் கேட்பேன்.  ‘எதாவது குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடாதா?’ என்று.  அதைக் கேட்டவுடன், ‘நாயா பூனையா வளர்க்கிறதுக்கு,’என்றார் உடனே.  இப்படித்தான் எதாவது சொல்லிவிடுவார்.  சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்.  ஆனால் உண்மையில் அவருக்கு குழந்தைகள் மீது ஆசை.  அவர் வீட்டிற்கு மேலே குடியிருக்கும் குழந்தைகள் அவர் வீட்டில் உரிமை எடுத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும்.

    அவருக்கு சைக்கிள், டூ வீலர் என்று எதுவும் ஓட்ட வராது.  ஆனால் ஒரு கார் சொந்தமாக வாங்கிவிட்டார்.   டிரைவரை வைத்துக்கொண்டு அந்தக் காரில் பல இடங்களுக்குச் செல்வார்.  எனக்குத் தெரிந்து அவர் விருப்பப்பட்டு வாங்கியது கார் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  நல்ல துணிமணிகள் கூட அவர் வாங்கி போட்டுக்கொண்டு நான் பார்த்ததில்லை.  பிளாட்பாரத்தில் கிடைக்கும் பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவார். விலை உயர்ந்த உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிட விருப்பப் பட மாட்டார்.  நான்தான் அவரை வலுகட்டாயமாக சரவணபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போவேன்.  சாப்பிட்டுவிட்டு விலையைக் கேட்டு மலைப்பார்.  ஒருமுறை அவரை அவருக்குத் தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு போனேன்.  திருமணம் முதல்மாடியில் நடந்து கொண்டிருந்தது.  லிப்டில் ஏறிப் போய்விட்டோம்.  பின் விருந்து சாப்பிட்டுவிட்டு கீழே மாடிப்படிகள் வழியாக நடந்து வரும்போது, ஐராவதம் தடுமாறி விட்டார்.  அவரால் படிக்கட்டுகளில் காலை வைத்து நடக்க முடியவில்லை.  12 ஆண்டுகளுக்கு முன் இதயத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  இரண்டு மூன்று முறைகள் தெருவில் நடந்து  செல்லும்போது மயங்கி விழுந்திருக்கிறார்.  அவர் மனைவிக்கு அவரை தனியாக அனுப்ப பயம்.  நான் அழைத்துப் போகிறேன் என்றால் அனுப்புவார்.

    ஒருமுறை வைதீஸ்வரன் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது சரவணபவன் ஓட்டலுக்கு ஐராவதம் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.  வழக்கம்போல் பொங்கல் வடை ஆர்டர் செய்தேன்.  ஆனால் அன்று ஐராவதம் அவர்களால் உட்காரகூட முடியவில்லை.  ”உடனே போய் ஒரு மருந்து வாங்கிக்கொண்டு வா.” என்று ஐராவதம் சொல்ல, நான் அவசரம் அவசரமாக எதிரில் உள்ள அப்பல்லோ மருந்தகத்தில் அவர் கேட்ட மருந்தை வாங்கிக்கொண்டு வந்தேன்.  அதைச் சாப்பிட்டப்பிறகுதான் அவருக்கு சரியாயிற்று.  ஐராவதம் டாக்டரைப் பார்க்க அச்சப்படுவார்.  அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர் பட்டப்பாடை எளிதில் விளக்க முடியாது.  ”என் மனைவிக்கு முன்னே நான் போய்விட வேண்டும்” என்பார்.  
    ”என்ன வீட்டிற்குள்ளேயே இருக்கிறீர்கள்…வெளியே வாருங்கள்,”என்பேன்.
    “நான் வீட்டிற்குள்ளே இருந்தே போய்விடுகிறேன்..” என்பார்.

    என்ன இப்படியெல்லாம் சொல்கிறாரே என்று தோன்றும்.  உண்மையில் அவர் வீட்டிற்குள் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் இறந்து போனார்.  யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல்.

           (அம்ருதா மே 2014 அன்று வெளிவந்த கட்டுரை) 
     
     
       
   

“எதையாவது சொல்லட்டுமா…..93” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன