அழகியசிங்கர்
ரெட்ஹில்ஸ் பக்கத்தில் உள்ள பம்மாத்துக்குளம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அங்குதான் என் மாமனார் (நான் அவரைப் பார்த்ததில்லை) அறுபதுகளில் இரண்டு கிரவுண்டு வீட்டு மனை வாங்கிப் போட்டிருக்கிறார். அதைப் பற்றி அவருடைய வாரிசுகள் யாரும் கவலைப்படவில்லை. என் மாமியார் உயிரோடு இருந்தவரை அந்த வீட்டு மனை நல்ல விலைக்குப் போகும் என்ற கற்பனையோடு இருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அந்த இடத்தைப் பார்க்க பெரிய முயற்சி செய்து பார்க்கவும் செய்தேன். அப்போது அந்த இடத்தில் மண் வாரிக் கொண்டிருந்தார்கள். பெரிய பள்ளமாக இருந்ததால் அங்கு வீட்டு மனைகள் உண்டா என்ற சந்தேகம் வந்து விட்டது. அதன் பின் நான் பார்க்கும் முயற்சியை கைவிட்டுவிட்டேன். ஆனால் சமீப காலமாக ஒரு புரோக்கர் என் மாமனார் இடத்தை 2 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லி பலமுறை போன் தொல்லை செய்து கொண்டிருந்தான்.
அந்த இடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நானும் அந்த இடம் பத்து லட்சம் போகும் என்று அடித்துப் பேசினேன். அவன் விடவில்லை. தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான். மேலும் என்னை நேரில் பார்த்துப் பேச விரும்பினான். நான் அவனைப் பார்க்க தவிர்த்தேன். கடைசியில் அவன் என்னிடம் சொன்னான். “நீங்கள் பத்து லட்சம் போகும் என்று சொல்கிறீர்கள். என்னிடமும் சில காலி மனைகள் உள்ளன. நீங்கள் கூறும் விலைக்கு விற்றுத் தர முடியுமா?”என்று என்னை மடக்கினான். பின் எனக்கு அவன் போன் பண்ணவில்லை.
எப்படியாவது அந்த இடத்தை இன்னொரு முறை போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. முன்பு நான் டூ வீலரில் போய்ப் பார்த்தேன். ஆனால் இப்போதோ என்னால் அப்படியெல்லாம் முடியாது என்று தோன்றியது. என் மாமனாரின் வாரிசான நான்கு பெண்களுக்கும் அந்த இடத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. எப்படி ஒரு இடத்தை வாங்கிப்போட்டுவிட்டு அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. பத்திர அலுவலகம் மூலமாக வில்லங்கம் வாங்கிப் பார்த்தேன். நல்லகாலம். என் மாமனார் பெயர்தான் இருக்கிறது. ஆனால் புரோக்கர் சொன்ன இன்னொரு தகவலும் என் ஞாபகத்திற்கு வந்தது. அந்த இடத்தைத் திரும்பவும் இன்னொரு லே அவுட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதாக. அது உண்மையா என்பதைப் போய்ப் பார்த்துவிட நினைத்தேன்.
எந்த ஞாயிற்றுக்கிழமையும் என்னால் போக முடியாது. ஒருநாள் அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டுப் போக வேண்டும். அலுவலகத்தில் யூரின் போவதற்குக்கூட நான் அனுமதி கேட்கவேண்டும். அந்த அளவிற்குக் கெடுபிடி. ஏதோ பொய் சொல்லி ஒருநாள் லீவு எடுத்துக்கொண்டேன். மதியம் 3 மணி சுமாருக்குக் கிளம்பலாம் என்று நினைத்தேன். என்னுடைய நானோ கார் ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. நானே எடுத்துக்கொண்டு அவ்வளவு தூரம் ஓட்ட முடியாத என்ற காரணத்தால், ஒரு டிரைவரை ஒரு அமைப்பு மூலம் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டேன். காலி மனையைப் பார்ப்பதோடல்லாமல், சில புத்தகக் கட்டுகளை ஒரிடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் சேர்த்துக் கொண்டேன்.
டிரைவர் வந்தான். பார்க்க இளைஞனாக இருந்தான். புத்தகங்களை ஒரு இடத்தில் கொண்டு போடவேண்டும் என்று குறிப்பிட்டேன். அவன் திடீரென்று நகுலனைத் தெரியுமா, சார்.”என்றான்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. கார் ஓட்ட வருபவன் எப்படி நகுலனைத் தெரியுமா என்று கேட்கிறான் என்பது போல் யோசித்தேன்.
அவரைப் போல ஒரு எழுத்தாளரைப் பார்க்க முடியாது
நகுலன். என் நண்பர்.
:அவருடைய புத்தகம் இருக்கிறதா படிக்க,,”என்று கேட்டான்.
“இல்லை..ஆனால் அவருடைய இரு நீண்ட கவிதைகள் புத்தகத்தை நான்தான் பிரசுரம் செய்தேன்..”
“சார்..அவர் நினைவுப் பாதை அற்புதம். நான் காலேஜ் படிக்கும்போது, நகுலன் புத்தகத்தைத்தான் படிப்பேன்…அற்புதமான எழுத்தாளர்.”
:நகுலன் சென்னை வந்தபோது என் வீட்டு பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில்தான் தங்குவார்..என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.
மெதுவாக ரெட்ஹில்ஸ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது கார் பம்மாத்துக்குளம் பற்றி அங்குள்ளவர்களிடம் விஜாரித்தோம். அவர்கள் சொன்ன வழியில் பம்மாத்துக்குளத்தைக் கண்டுபிடித்தோம். ஆனால் எங்கள் மனை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வண்டியை வெகுதூரம் ஓட்டி வந்துவிட்டோம். பின் அந்தப் பம்மாத்துக்குளம் இல்லை இன்னொரு பம்மாத்துக்குளம் என்று சொன்னார்கள். வெறுத்துவிட்டேன்.
டிரைவருக்கு ஒரு போன் வந்தது. “சார் நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போக வேண்டும்.” என்றான்.
என் திட்டமெல்லாம் வீணாகப் போய்விட்டது. புததகங்களைக் கூட சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியவில்லை. வண்டியை டிரைவர் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த வேகத்தில் நான் வண்டியை ஓட்டி பார்க்கவில்லை.
” பி இ படித்திருக்கிறேன். ஆனால் ஒரு பேப்பர் கூட பாஸ் பண்ணவில்லை.. இப்ப அஸிஸ்டென்ட் டைரக்டராக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன்..”
“ஏன் டிரைவராகப் பணிபுரிகிறீர்கள்?” என்று கேட்டேன்.
:பணம் வேண்டும் சார். வாடகை கொடுக்கப் பணம் வேண்டும். வீட்டுக்காரர் வேற இடம் பார்க்கச் சொல்கிறார். வேற இடத்தைத் தேட வேண்டும்.”
பின் அவன் ஒரு கடை முன் நின்றான். சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டான்.
“நீங்கள் புகைப்பீரா?” என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் சிரித்தான். “புகைப்பதையே விதம் விதமாக புகைக்கத் தெரிய வேண்டும். அது தெரிந்தவர்கள்தான் மாடர்ன் எழுத்தாளர்கள்.”
அவன் என்னை அவசரம் அவசரமாக வீட்டிற்குக் கொண்டு விட்டு ரூ.300 கேட்டான். உண்மையில் ரூ250தான் கொடுப்பார்கள். நகுலனைப் பற்றி பேசினானே என்று கொடுத்தேன். நகுலன் அவனைக் கெடுத்துவிட்டதாக மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
எனக்குப் பெரிய வருத்தம். பம்மாத்துக்குளத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம். அதைவிட வருத்தம் புத்தகப் பார்சலை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.
போகும்போது திரும்பவும் சொன்னான் : “நீங்கள் கூப்பிடுங்கள் திரும்பவும் புத்தகங்களைக் கொண்டு போக வருகிறேன்” என்றான்.
நகுலன் ஏன் இப்படி குறுக்கே வருகிறார் என்று யோசித்தேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு என் வீட்டிற்கு நான் இல்லாதபோது வந்திருந்து என் அப்பாவைப் பார்த்து நகுலன் புத்தகம் கேட்டிருக்கிறான். புத்தகம் என்றவுடன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுவாக அவருக்கு காது கேட்காது. புத்தகம் என்றவுடன் இன்னும் காது கேட்காது.
அவன் அங்கிருந்து போன் செய்தான். “சார் க.நா.சுவின் அசுரகணம் புத்தகம் படித்து விட்டேன். பிரமாதம்.. எப்படி எழுதியிருக்கிறார், பாருங்கள்..” என்றான்.
“க.நா.சு படிக்கறது அவ்வளவு ஈஸி இல்லை,” என்றேன்.
“சார். நகலனின் Non Being ..கேட்டேனே.”
“என்னிடம் இல்லை. வேற எங்காவது முயற்சி செய்யுங்கள்..”
என்றேன்.
“சார், வாடகைக்கு எதாவது இடம் கிடைக்குமா?”
“எனக்குத் தெரியாது.” என்றேன்.
எழுத்தாளர் அசோகமித்திரன் பொதுவாக யாராவது அவரைப் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி விஜாரிப்பார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால், படிப்பை முடித்துவிட்டு இலக்கியத்துக்கு வாருங்கள் என்பார். நான் அவரைப் பார்க்க போனபோது கூட என்னைப் பற்றி அவர் விஜாரித்திருக்கிறார்.
ஒருவித அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இந்தப் புத்தகம் படிக்கிறது அல்லது எழுதுவதில் நுழைய வேண்டும். எந்தவிதத்திலும் இந்த எழுத்து அடிப்படைகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் உதவி செய்யாது. அடிப்படைகளைப் பேணி காக்காத எத்தனையோ எழுத்தாள நண்பர்களை எனக்குத் தெரியும். ஒரு சிலருக்குத்தான் இதில் வெற்றி கிடைக்கும்.
சில தினங்கள் கழித்து அவனிடமிருந்து போன் செய்து கட் செய்து விட்டான். நான் போன் பண்ணவில்லை. அவன் திரும்பவும் போன் செய்தான். “சார்.. Non Being கிடைத்ததா.”என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
அவன் திரும்பவும்,”சார்.. ஒரு உதவி..வாடகைக் கட்டணும்..பணம் கடனா தர முடியுமா?”
“முடியாது.”என்றேன்.
“சார், பணம் தர மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?”
“அதுமாதிரியெல்லாம் யோஜனை பண்ணவில்லை,”என்றேன்.
அவன் போனை கட் செய்துவிட்டான். நான் இன்னும் பம்மாத்தக்குளத்தைப் போய்ப் பார்க்கவில்லை. யாராவது டிரைவரைக் கூப்பிடவும் பயமாக இருக்கிறது. புத்தகக் கட்டு காரிலேயே இருக்கிறது.
(அம்ருதா டிசம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)
சக்கரவர்த்தி ஸார்…
பிரமாதம்.
ரொம்பவும் ரசித்தேன்.
நகுலன் புத்தகம் கிடைக்குமா?
எல்லா ஊரிலும் தாஜ்
இருக்கிறார்கள் போல் உள்ளது.
சந்தோஷம்.
– தாஜ்