நானும் பார்க்கிறேன் உலக சினிமாக்களை

அழகியசிங்கர் 
சமீபத்தில் நானும் சில உலகச் சினிமாக்களைப் பார்த்துவிட்டு எனக்குத் தோன்றுவதை எழுதலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையாகவே பல உலகச் சினிமாக்களை ஒரு 20 அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் என் கவனத்திற்கு அது எப்போதும் போனதில்லை. ஒரு படத்தை இயக்கியவர் யார்? ஒரு படத்தின் சிறப்பம்சம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நான் போவதில்லை. படம் பார்ப்பேன். பார்த்த திருப்தியுடன் வந்துவிடுவேன். சில நாட்கள் அந்தப் படம் பற்றிய ஞாபகம் இருக்கும். பின் அதுவும் மறந்து விடும். யார் அந்தப் படத்தை இயக்கினார்கள். எப்படி அது சிறந்த படமாக இருக்கிறது என்றெல்லாம் யோசிப்பது இல்லை.

ஆனால் இப்போது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அந்தப் படத்தைப் பற்றி எதாவது எழுதினால் என்ன என்று தோன்றுகிறது. அது என்னால் முடியுமா என்பதைப் பார்க்க விரும்புகிறேன். முன்பெல்லாம் உலகச் சினிமாப் படங்களைப் பார்க்க சில அமைப்புகள் இருந்தன. அதை நடத்துவது என்பதும் சாதாரண விஷயமில்லை. இப்போது அதெல்லாம் இருப்பதில்லை. காலம் மாறிவிட்டது. ஒரு படத்தை அப்படி ஒரு இடத்தில் போட்டுக் காட்டுவது என்பதும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அந்த அமைப்புகள் படம் பார்க்க வருபவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ஒரு சிறு பத்திரிகை ஆரம்பித்து சந்தா வசூலிப்பதைவிட கடினமான விஷயம் அது.

சமீபத்தில் நான் பார்த்த படம் ஒன்றின் பெயர் A SEPARATION இந்தப் படத்தை இயக்கியவர் அஸ்கர் ஃபர்ஹடி என்பவர். இது ஈரானிய படம். மிக எளிமையான அதே சமயத்தில் சற்று சிக்கலான நிகழ்ச்சிகளைக் கொண்ட படம் இது.
தன் கணவர் நாடாருடனும், பெண் டர்மாவுடன் ஈரானைவிட்டுப் போக நினைக்கிறார் சிமீன். அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஆனால் அவர் கணவர் நாடார் அவ்வாறு போக விரும்பவில்லை. அதற்குக் காரணம் அவருடைய தந்தை. அல்ஸிமர் நோயுடன் அவர் தந்தை போராடிக் கொண்டிருக்கிறார். 24 மணி நேரமும் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேறு வழியில்லாமல் சிமீன் விவாகரத்திற்கு முயற்சி செய்கிறார். தன் கணவர் தன்னுடன் வெளிநாட்டிற்கு வர மறுக்கிறார் என்பதுதான் விவாகரத்திற்குக் காரணம். கணவர் கூறும் காரணம் தந்தையை விட்டுவிட்டு வர முடியாது என்பது. ஏனென்றால் தந்தை நோய்வாய்ப்பட்டுள்ளவராக உள்ளார்.

“நீங்கள் வெளிநாடு வந்தால், உங்கள் தந்தைக்கு என்ன தெரியப் போகிறது,”என்கிறாள் மனைவி.
அப்போது அவள் கணவன் சொல்கிறான் : “அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். எனக்கு அவரைத் தெரியும்,” என்று.

விவாகரத்து மறுக்கப்படுகிறது. மனைவி கணவனிடம் கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்குச் சென்று விடுகிறாள். ஒரே பெண் டர்மா அப்பாவுடன் இருந்து விடுகிறார். ஒரே காரணம் அம்மா திரும்பி வந்துவிடுவாள் என்பதுதான். இந்தப் படத்தின் முதல் சொடுக்கு இது.

 அடுத்ததாக நாடாருக்கு அப்பாவைப் பார்த்துக்கொள்ள யாராவது வேண்டும். அவன் அலுவலகத்திற்கும், பெண் பள்ளிக்கூடமும் சென்றுவிட்டாலும், அப்பாவை யார் பார்த்துக் கொள்வது? இது உண்மையில் பெரிய பிரச்சினை.
ரெஸயா என்ற திருமணமான ஒரு பெண்ணை அப்பாவைப் பார்த்துக்கொள்ள நாடார் ஏற்பாடு செய்கிறான். அந்தப் பெண் பணக் கஷ்டத்தைத் தீர்க்க இதற்கு சம்மதிக்கிறாள். தன் கணவரிடம் சொல்ல வேண்டாமென்று நாடாரிடம் கேட்டுக்கொள்கிறாள். உண்மையில் நடார் வீட்டைவிட்டு கிளம்பியவுடன் அவள் வருவாள். நடார் திரும்பி வருவதற்குள் அவள் போய்விடுவாள். அவளால் அல்ஸிமர் நோயுடன் தவிக்கும் நடாரின் தந்தையைச் சமாளிக்க முடியாது. இஸ்லாமிய சட்டப்படி தன் கணவரைத் தவிர இன்னொரு ஆணிற்கு பணிவிடை செய்வது என்பது ஒரு பாவமாகக் கருதப்படுகிறது. ரெஸயாவிற்கு இந்தச் சந்தேகம் வந்து, அவள் இதுகுறித்து போனில் விஜாரிப்பாள். முதல் நாள் அவள் அங்கு சென்று திரும்பவும் வீட்டிற்குச் செல்லும்போது அவளால் அங்கு பணிபுரிவது முடியாத காரியம் என்று தோன்றுகிறது. இது இரண்டாவது சொடுக்கு. 
 ஒருநாள் அவள் வீட்டில் வேறு பணிகளில் ஈடுபடும்போது, நடாரின் அப்பா வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவார். இந்த இடத்தில் ஏற்படும் பதட்டத்தை படம் பார்க்க வருபவர்களும் உணரும்படி இயக்கினர் உருவாக்கி உள்ளார். அவர் அப்பா தெருவில் ஒரு கடை முன்னால் நின்று கொண்டிருப்பார். ரெஸயா பதறிப்போய் அவரை அழைத்து வருவார். அப்போது ஏற்படும் விபத்தில் அவருடைய வயற்றில் வளரும் கரு கலைந்துவிடும். இந்தப் பின்னணியில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. உடல்நிலை சரியாக இல்லாததால் டாக்டரைப் பார்க்க செல்கிறாள். நடாரின் அப்பாவை ஒரு கட்டிலில் கட்டி வைத்துவிட்டுப் போகிறாள். அவள் டாக்டரைப் பார்த்து திரும்புவதற்குள் நடார் வந்துவிடுகிறான். அவனிடம் உள்ள சாவியை வைத்து கதவைத் திறக்கிறான். உள்ளே அப்பா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறான். இந்த இடத்தில் நடாரின் தவிப்பும், அவனுடைய பெண்ணின் தவிப்பையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ரெஸயா திரும்பி வந்தவுடன் பிரளயம் வெடிக்கிறது. அவளைப் பார்த்து திட்டுகிறான் நடார். வெளியே போகச் சொல்கிறான். பணம் வைத்திருக்கும் இடத்திலிருந்து பணத்தைத் திருடியதாக சொல்கிறான். அவளைத் திருடி என்று சொன்னதை ரெஸயாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தச் சண்டையில் நடார் ரெஸயாவை வெளியே தள்ளி கதவைச் சாத்திவிடுகிறான். இங்கு இன்னொன்றும் குறிப்பிட வேண்டும். ரெஸயா அந்த வீட்டிற்கு வரும்போது தன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வருவாள். அந்தப் பெண் ஒருமுறை நடாரின் அப்பாவின் மூக்கில் சொருகப்பட்டிருக்கும் ட்யூப்புகளைத் திருக ஆரம்பித்து விடுவாள். அப்படி திருகும்போது அவனுடைய அப்பா மூச்சுத் திணறல் ஏற்பட்டு தடுமாறுவார். படம் பார்ப்பவர்களிடம் ஒரு நிமிடம் பதட்டம் கூடிப் போகும்படி செய்கிறார் இயக்குனர். கதையின் மூன்றாவது சொடுக்கு இது. 
 பின் ரெஸயாவின் கர்ப்பம் கலைந்து போனதற்கு நடார் அவளைப் பிடித்துத் தள்ளியதுதான் காரணம் என்று ஜோடனை ஏற்பட்டு நடார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். நடார் அவள் வேலைக்கு வருவதற்குமுன்பே கர்ப்பமானவள் என்பது தெரியாது என்று பொய்யாக வாக்களிக்கிறான். நடாரின் பெண் டர்மாவிற்கு அப்பாவின் பொய் தெரிந்து விடுகிறது. அப்பாவைப் பார்த்து வெளிப்படுத்தும் மிரட்சியை இயக்குநர் பிரமாதமான முறையில் கொண்டு வருகிறார். ஈரானில் சட்டம் கடுமையாக இருக்கும்போல் தோன்றுகிறது. பெண்ணிற்கு எதிராக நடக்கும் குற்றத்தை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதுபோல் தெரிகிறது. நடாரின் மனைவி ஒருவித சமரச முயற்சிக்கு ஏற்பாடு செய்கிறாள். அதன்படி ரெஸயாவின் கணவனிடம் பணம் கொடுக்க முன் வருகிறாள். இது கதையின் நான்காவது சொடுக்கு. 
 ரெஸயாவின் வீட்டில் சந்திக்கிறார்கள். ரெஸயாவின் கணவனின் கடன்காரர்களும் அந்தப் பணத்தைப் பெற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுப்பதற்குமுன் நடார் ஒரு கேள்வி கேட்கிறான் ரெஸயாவைப் பார்த்து, ‘உண்மையில் அவன் தள்ளியதுதான் அவள் கர்ப்பம் கலைவதற்குக் காரணமா?’ என்று. குரான் மீது சத்தியம் செய்யச் சொல்கிறான். அவள் குரான் எடுத்துவர சென்று அதை எடுத்துக்கொண்டு வந்து சத்தியம் செய்ய அவள் மனச்சாட்சி அவளைப் பாடாய்ப் படுத்துகிறது. அவள் அழுகிறாள். அவள் கணவனுக்கு இது தெரிந்து அவள் பொய் சொன்னதற்காக அடிக்கிறான். தான் தப்பு செய்துவிட்டதாகவும் இந்தப் பணம் வேண்டாமென்று ரெஸயா மறுக்கிறாள். இது கதையின் ஐந்தாவது சொடுக்கு. 
இறுதியாக நீதி மன்றத்தில் நடார், சிமீ, அவர்களுடைய பெண் டர்மா மூவரும் நிற்கிறார்கள். நீதிபதி கேட்கிறார்: ”நீ யாருடன் இருக்க விரும்புகிறாள்…அம்மாவுடனா அப்பாவுடனா?” இந்தக் கேள்விக்கு உறுதியான பதில் வைத்திருக்கிறாயா என்று நீதிபதி கேட்கும்போது, வைத்திருக்கிறேன் என்று கூறும் அந்தப் பெண் அழுதபடி நிற்கிறாள். நீதிபதி நாடரையும், சிமீயையும் வெளியே காத்திருக்கும்படி சொல்கிறார். அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் யார் பக்கம் போகப் போகிறாள் என்ற புதிருடன் கதையை முடித்து உள்ளார்.

பொதுவாக சினிமாப் படங்களை நாம் பார்க்கும்போது மேலும் மேலும் நம்மைப் பார்க்க தூண்ட வேண்டும். இந்தப் படம் நமக்கு அந்த உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் யாவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பார்வையாளர்களிடம் அவர்கள் நடிக்கத்தான் நடிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தாமல், கதா பாத்திரங்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள். குறிப்பாக ரெஸயா தன் உணர்வுகளை அதிகம் பேசாமல் உணர்த்துகிறார். இந்தப் படத்திலேயே சிறப்பாக நடித்திருப்பது அவர்தான் என்று தோன்றுகிறது.

 இந்தப் படத்தை நான்23.08.2013 வெள்ளிக்கிழமை அன்று பார்த்தேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்கியனரின் மற்றப் படங்களையும் பார்க்க ஆவலாக உள்ளேன். தமிழில் ஏன் இதுமாதிரியான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதுமாதிரியான படத்தைத் தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் தெரியவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன