அழகியசிங்கர்
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2012-13 ஆம் ஆண்டில் 1 கோடியே 70 லட்சத்து 91 ஆயிரத்து 768ஆக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை படித்தவுடன் எனக்கு திகைப்பு கூடி விட்டது. மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 11.21 சதவீதம் அதிகமாம். மோட்டார் கார்கள் மட்டும் 15,22,706. இப்படி மோட்டார் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனால் கார்களை எங்கே நிறுத்துவது. பெரும்பாலும் எல்லோரும் கார்களை தெருவில்தான் நிறுத்துகிறார்கள். என் வீட்டிற்கு எதிரில் வீட்டில் வாகனங்களை நிறுத்த முடியாமல் தெருவில் எல்லோரும் நிறுத்துகிறார்கள். இதனால் அகலமான தெரு குறுகலாக மாறிவிட்டது.
சென்னையில் இன்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாகன வசதி இல்லாமல் போக முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு மோட்டார் கார் வாங்கி ஓட்ட வேண்டுமென்ற ஆசை. ஆனால் மோட்டார் கார் வாங்கினால் எங்கே நிறுத்துவது. நான் இருந்த போஸ்டல் காலனி அடுக்ககத்தில் சொந்தக்காரரான ஒருவருக்கும் எனக்கும் கார் வைத்துக் கொள்வதில் பெரிய தகராறு வந்து விட்டது. அவர் வேறு வழியின்றி அவர் காரை தெருவில் வைத்துவிட்டார். பின் அந்தக் காரை அவர் பயன் படுத்தவில்லை. தெருவில் உள்ள தூசி எல்லாம் அவர் காரைப் பயன்படுத்திக் கொண்டது. ஏன் இப்படி ஒரு மோட்டார் காரை வாங்கினார் என்று யோசிப்பேன். அப்போதுதான் தோன்றியது. கூட்டத்தில் காரை ஓட்டும் சாமர்த்தியம் அவருக்கில்லை என்று.
சின்ன வயதிலிருந்து வாகனங்கள் ஓட்டும் ஆர்வம் எனக்கு அதிகம். திருச்சியில் நாங்கள் இருந்தபோதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். மிகக் குறுகிய தெருவான பாண்டமங்கல அக்ரஹாரத் தெருவில் நாங்கள் குடியிருந்தோம். தெரு முனையில் உள்ள வாடகை சைக்கிள் கடையில் குட்டி சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஓட்டுவேன். அந்தத் தெருவில் கோணல்மாணலாக சைக்கிளைஓட்டுவேன். சைக்கிளை எங்கும் நிறுத்தாமல் ஓட்டுவதாக எப்போதும் கனவு வரும். அப்பாவின் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளை எடுத்து ஓட்ட பழகிக்கொண்டேன். அது குதிரை மாதிரி இருக்கும். அதில் ஒரு பிரச்சினை. எப்படி சைக்கிளில் ஏறுவது என்பது தெரியாது. அதற்காக ஒரு மின் கம்பத்தை நாடுவேன். மின் கம்பத்தின் மீது காலை வைத்து எப்படியோ ஏறி ஓட்டுவேன். இல்லாவிட்டால் குரங்கு பெடலை அழுத்தி ஓட்டுவேன். அந்த சைக்கிளில் இறங்கும்போதும் பிரச்சினையாக இருக்கும். அந்தச் சைகிளை பல இடங்களுக்கு ஓட்டி காலில் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அசோகமித்திரன் சைக்கிள் ஓட்டி பார்த்திருக்கிறேன்.
சைக்கிள் ஸ்கூட்டராக மாறி ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளாக மாறியவுடன் சைகிள் ஓட்டுவதே நின்றுவிட்டது. நான் வைத்திருந்த சைகிள்களை என் புதல்வனும் புதல்வியும் ஓட்டி எல்லாம் ஓய்ந்து போய்விட்டார்கள். சைகிள்களை இலவசமாக கொடுத்து விட்டோம். என் அப்பாவிற்கு 86வது வயதில் ஓட்டக்கூடாத சைக்கிளை ஓட்டி கீழே விழுந்து எலும்பு முறிந்து விட்டது. அவர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கும்போது சைக்கிள் அவரை ஓட்டுகிறதா அல்லது அவர்தான் ஓட்டுகிறாரா என்ற சந்தேகம் வரும். அதன் பின் அவர் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளை யாருக்கோ தானம் கொடுத்துவிட்டார். இப்போது என் வீட்டில் சைக்கிளே இல்லை.
ஸ்கூட்டர் வாங்கியபிறகு நான் சைக்கிள் ஓட்டுவதையே நிறுத்தி விட்டேன். அதை ஓட்ட கற்றுக்கொள்வதற்குள் நான் பட்டப்பாடு சாதாரண விஷயமாக தோன்றவில்லை. என் அலுலகத்தில் பணிபுரிந்த நண்பர் ஒருவர்தான் எனக்கு ஓட்ட கற்றுக்கொடுத்தார். வண்டி ஓட்டும்போது அரசாங்க பஸ்கள் உறுமியபடி பக்கத்தில் வரும்போது பயம் கூடிக்கொண்டே போகும்.
நகுலன் ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தபோது காசியபன் என்ற அவருடைய எழுத்தாள நண்பர் அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். நகுலனை விட காசியபன் வயதில் பெரியவர். மேலும் மையிலாப்பூரில் காசியபன் வசித்துக் கொண்டிருந்தார். நகுலனை வந்து பார்க்கும்படி கூப்பிட்டார். ‘நான் அழைத்துப் போகிறேன், வருகிறீர்கா?’ என்று நகுலனை கேட்டேன். ‘டூ வீலரில் பின்னால் உட்கார பயம்,’ என்று நகுலன் குறிப்பிட்டார். ‘சரி பஸ்ஸில் போகவாம்,’ என்றேன். ‘பஸ்ஸில் அங்கெல்லாம் போக முடியாது,’ என்று மறுத்துவிட்டார். ‘ஆட்டோவில் போகலாமா?’ என்று கேட்டேன். ‘ஆட்டோவிற்கு எதற்கு செலவு செய்ய வேண்டும். காசியபனை அப்படிப் போய்ப் பார்க்க வேண்டாம்,’ என்று கூறிவிட்டார். அந்த முறை மட்டுமல்ல எப்போதுமே அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் போய்விட்டார்கள்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ கார் கிடைக்கிறது என்ற விளம்பரம் என்னையும் கார் வாங்க முயற்சி செய்து விட்டது. அந்தக் காரை வாங்க பெரிய போட்டி நிலவியது. எல்லோருக்கும் ஆச்சரியம் ஒரு லட்ச ரூபாய்க்கு காரா என்று. நானும் விண்ணப்பம் செய்தேன். 7 மாதங்களுக்குப் பிறகு கார் கிடைக்கும் என்று அறிவித்திருந்தார்கள்.
அதற்குள் நான் கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டுமென்ற பரபரப்பில் இருந்தேன். மயிலாடுதுறையில் இருந்ததால் அங்குள்ள கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எல்லாம் அவர்தான். ஓட்டுநர் பள்ளியும் அவர்தான். ஓட்டக் கற்றுக்கொடுப்பவரும் அவர்தான். அவர் ஒரு வீணாய்ப் போன மாருதி கார் வைத்திருந்தார். அதை வைத்துதான் பலருக்கு ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஒரு உண்மையைக் கற்றுக்கொண்டேன். கார் ஓட்டுபவரிடம் ரொம்பவும் பேசக்கூடாது என்று. ஓட்டக் கற்றுக்கொடுப்பவருக்கும் ஒரே வயது. அவருக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்கவில்லை. அது பெரிய குறை அவருக்கு. அவருடைய சோகக் கதையைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். ஏன் இப்படி வம்பில் மாட்டிக்கொள்கிறோம் என்று தோன்றியது.
வாரம் ஒருமுறை வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள அவருக்கு பணம் தர வேண்டும். நான் பணம் தரும் அன்று மட்டும் அவர் புன்னகைப் பூத்து மரியாதையுடன் பேசுவார். அதன் பின் அவர் எனக்கு கார் கற்றுத் தருகிறேன் என்று படுத்தியப்பாட்டை நினைத்து திகைப்பாகவே போய்விட்டது. ஒவ்வொரு முறையும் நான் அவரை போனில் கூப்பிட வேண்டும். அவர் ஒரு இடத்தில் வந்து நிற்பார். பின் நான் அங்கே போய் கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். நானும் அவரும் ஒரே வயதுக்காரர். முதலில் அவர் என்னுடன் மரியாதையாகப் பேசியவர், பின் ஏக வசனத்தில் பேச ஆரம்பித்துவிட்டார். üஒழுங்கா ஓட்டு…ஏன் இப்படி வளைக்கிறே…ஸ்டீரிங்கை ஒழுங்கா திருப்பு…ý என்றெல்லாம் கத்த ஆரம்பித்து விட்டார். ஏன் இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று தோன்றியது. ஒருமுறை என் சகோதரனிடம் இது குறித்து குறிப்பிட்டேன். ‘கற்றுக் கொடுக்கிறவர்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள்….நீ கற்றுக்கொண்டு காரை வாங்கிக்கொண்டு போயிடுவே..அவன் எல்லோருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்…’ என்று அவன் குறிப்பிட்டான். அதன்பின் நான் மயிலாடுதுறையில் உள்ள அவரிடம் கார் கற்றுக்கொள்ளவில்லை. சென்னையில்தான் டிரைவிங் லைசன்ஸ் வாங்கினேன்.
நானோ கார் எனக்குக் கிடைக்க வேண்டிய மாதம் இன்னும் முன்னால் வந்து எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக கிடைத்து விட்டது. காரைப் பார்க்கும்போது எனக்கு மலைப்பாக இருந்தது. ஆனால் ஒரு லட்சத்திற்கு அந்தக் கார் கிடைக்கவில்லை. அதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மேல் போய் விட்டது.
முதல்நாள் காரை எடுத்துக்கொண்டு வருவதற்கு போகும்போது கார் முன் நின்று நான், என் மனைவி, என் மாமியார் மூவரும் போட்டோ எடுத்துக்கொண்டோம். கார் ஓட்ட ஒரு டிரைவரை வைத்துக்கொண்டேன். கார் ஓட்டுபவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நானோ காரைப் பற்றி விஜாரித்தேன். ‘இதை ஏன் சார் வாங்கினீங்க..ரொம்ப தூரம் இதை ஓட்டிக்கொண்டு போக முடியாது. அங்கங்கே நின்னு நின்னுதான் போக வேண்டும்,’என்றான்.
என் வீடு இருக்கும் தெருவில் காரை கொண்டு வந்து வைத்தேன். தினம் தினம் என்னால் ஓட்ட முடியாவிட்டாலும் வாரம் ஒருமுறை எடுத்து ஓட்ட முயற்சி செய்வேன். ஒரு முறை என் காரை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முயற்சி செய்தபோது கார் இன்னொரு கார் மீது ரொம்ப லேசாக மோதி விட்டது. இதனால் கார் நகராமல் நின்றுவிட்டது. பின் அதை ரிப்பேர் செய்தேன். செலவு அதிகமாகிவிட்டது. நாங்கள் இன்னொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தபோது காரை வீட்டிற்குள் வைத்துக்கொள்ள வசதி கிடைத்தது. ஆனாலும் காரை ஓட்டிக்கொண்டு வெளியே வருவதும் திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு வருவதற்கும் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. ஒரு முறை சுவரில் இடித்து கார் கண்ணாடி ஒடிந்தது. இன்னொரு முறை இரும்பு கேட் மீது இடித்து இரும்பு கேட் உடைந்து விட்டது. ஒவ்வொரு முறையும் காரை எடுத்துக்கொண்டு போவதற்குள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டு போகும்.
நான் இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைதான் காரை எடுத்துக்கொண்டு போகிறேன். அசோக்நகரில் உள்ள சரவணபவன் ஓட்டல் முன் நிறுத்தி பொங்கல் வடை சாப்பிட்டுவிட்டு காரை திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துவிடுவேன்.
ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் செல்ல மாடிப்படிகட்டுகள் வழியாக இறங்கும்போது நானோ கார் என்னைப் பார்த்து கண் சிமிட்டுகிறது.
(அம்ருதா June 2013 இதழில் பிரசுரமானது)