குமரி எஸ். நீலகண்டன்
சிறு வயதில் அங்கே
புதையல் கிடைத்தது.
இங்கே புதையல்
இருக்கும் என்றெல்லாம்
அன்றைய பெரியவர்கள்
கதைத்த போதெல்லாம்
நான் நம்பவே இல்லை…
சாலையோர
சாக்கடைகளை
செப்பனிடுவதற்கு
கோடையே
சரியானத் தருணமென
முன்பு போட்ட
அதன் காங்கிரீட்டுகளை
உடைத்தார்கள்.
இயந்திர
துளைப்பான்களால்
தூள் கிளப்பினர்
காற்று வெளியெங்கும்…
சிறுமலை போல்
குவிந்தன
தோண்டிய மண்களோடு
உடைந்த
காங்கிரீட் துண்டுகளும்
பாதசாரிகள் வழுக்கியும்
சறுக்கியும்
மலை ஏறி இறங்கி
மயானத்திற்கு
பக்கம் சென்று வந்தனர்…
சாக்கடையை மூடுவதற்கு
கனம் கூடிய
காங்கிரீட் பாளங்கள்
வந்து இறங்கின…
திறந்த சாக்கடைக்குள்
தோண்டிய மண்கள்
விழுந்தன….
அந்தப் புதையலை
காங்கிரீட் பாளங்களால்
மூடினார்கள்…
அகத்திலிருப்பவை
தெரியாத அளவிற்கு
அழகாகவே மூடினார்கள்
ஒப்பந்தம் போல்.
அடுத்த ஒப்பந்தத்திற்கான
புதையல் உள்ளே
மூடப் பட்டிருக்கிறது…
புதையல் புதையல்
என்கிறார்களே
அதை இப்போது
நான் நம்புகிறேன்…
ஊழல் ஊழல்
என்கிறார்களே
ஒப்பந்தம் ஒப்பந்தம்
என்கிறார்களே
இரண்டிற்கும் என்ன
வித்தியாசம்
அதுதான் புரிய
மாட்டேங்கிறது…