சி சு செல்லப்பா…..
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாடமுடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்க வில்லை. இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி. இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.
க.நா.சுவும், சி சு செல்லப்பாவும் இருதுருவங்கள். இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள். க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர். சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர்.
ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள். க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன். அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே சென்றது. ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம்.
சி சு செல்லப்பா பங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டேனே தவிர, பங்களுரில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க எந்த முயற்சியும் நான் செய்ததில்லை சி. சு செல்லப்பாவை நான் முதன் முதலில் சந்தித்தது க.நா.சு இரங்கல் கூட்டத்தில்தான். அதேபோல் க.நா.சுவை முதன் முதலில் சந்தித்தது கூட மௌனியின் இரங்கல் கூட்டத்தில்தான்.
இலக்கியம் குறித்து க.நா.சுவின் கண்ணோட்டம் வேறு, சி.சு செல்லப்பாவின் கண்ணோட்டம் வேறு. இருவரும் நண்பர்களாக இருந்தாலும்.
ஒருமுறை க.நா.சு சொன்னதாக சி சு செல்லப்பா ஒன்றை சொல்லியிருக்கிறார். “நாமதான் படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் படைப்பிலக்கியவாதியான நாமே புத்தகவிமர்சனமும் செய்ய வேண்டும்.”
அதைக் கேட்டு ரசனை அடிப்படையில் க.நா.சு ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்வார். இந்த விமர்சனத்தில் எந்தவித பின்புலமும் கிடையாது. ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டுவிடுவார். ஒருமுறை சா கந்தசாமியின் நாவல் ஒன்றைப் படித்துவிட்டு க.நா.சு குறிப்பிட்டது ஈழ்ர்ல்ர்ன்ற்ள் பற்றிய நாவல் என்று. அவர் குறிப்பிட்டது அந்த நாவலைப் பற்றிய முக்கிய அம்சம்.
ஆனால் சி சு செல்லப்பா அப்படியெல்லாம் கிடையாது. அவர் ஒரு படைப்பை நன்றாக ஆராய்ச்சி செய்து அதை தியரி மாதிரி மாற்றி விடுவார். இதற்காக அவர் மேல் நாட்டு அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து இருக்கிறார்.
சி.சு செல்லப்பா அவருடைய ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:
“தரமான இலக்கிய படைப்புகளை சோதனை முயற்சிகளை இனம் காணத் தெரியாத, இயலாத ஒரு வாசகப் பரம்பரை இன்று பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியத்தை ரசித்து தராதரம் அறியாத தர விமர்சன அறிவு சேமிக்காத அரைகுறை இலக்கிய அபிப்பிராயக்காரர்கள் விருப்பு வெறுப்பு மட்டுமே கொண்டவர்கள் மலிந்து விட்ட நிலையில் படைப்பாளியே பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது,’ என்கிறார்.
இங்கு சி சு செல்லப்பாதான் க.நா.சுவை மறைமுகமாகச் சாடுகிறார்.
நான் முதன்முதலாக சி சு செல்லப்பாவை க.நா,சு இரங்கல் கூட்டத்தில் சந்தித்தேன். அக்கூட்டம் திருவல்லிக்கேணி பெரியதெருவில்தான் நடந்ததாக ஞாபகம். அங்கு அப்போது இருந்த எழுத்தாளர் சங்கக் கூட்டம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்திருந்தார். எளிமையான தோற்றத்தில் இருந்தார். ஒரு எழுத்தாளர் தோரணை எதுவுமில்லாமல் சாதாரணமாக இருந்தார்.
எழுத்தாளர்களிடையே மதிப்பை உருவாக்கியவர் ஜெயகாந்தன் என்று என் நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு பல எழுத்தாளர்கள் வருவார்கள். அவர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்காக வருவார் என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.
சி சு செல்லப்பாவை அன்று பார்க்கும்போது அவர் சாதாரணமாகத்தான் தென்பட்டார். ஆனால் அவர் குரல் அழுத்தமாகவும் சத்தமாகவும் இருந்தது. க.நா.சுவின் இரங்கல் கூட்டத்தில் அவர் க.நா.சு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ என்றும் நான் நினைத்துக் கொண்டேன்.
சி.சு செல்லப்பாவிற்கு விளக்கு விருது கிடைத்தது. அதை வாங்கிக்கொள்ள மறுத்தார். வெளி ரங்கராஜன் முயற்சியால்தான் இது நடந்தது. அவர் பரிசுத் தொகையை வாங்க மறுத்தாலும், அந்தத் தொகையில் ஒரு புத்தகம் வருவதை ஏற்றுக்கொண்டார். சி சு செல்லப்பா பரிசுக்கெல்லாம் ஏங்காதவர். பரிசு கொடுக்கும் நோக்கத்தை யும் அவர் சந்தேகப்படுவார். வேடிக்கையான மனிதர்.
என் சிறுகதை பாணி என்ற சி சு செல்லப்பாவின் புத்தகம் ரங்கராஜன் மூலமாகத்தான் உருவானது. அப் புத்தகம் ஒட்டி ஒரு கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. அக்கூட்டம் சிறு பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூட்டமாக மாற்றினார் சி சு செல்லப்பா.
60வாக்கில் எழுத்து என்ற சிற்றேட்டை சி சு செல்லப்பா கொண்டு வந்தார். எழுத்து என்ற பத்திரிகை கவிதைக்கும், விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை
30க்களில் முயற்சி செய்த புதுக்கவிதை உருவம்
எழுத்து பத்திரிகை மூலமாகத்தான் உறுதிப் பெற்றது. எழுத்து என்ற சிற்றேடு மட்டும் இல்லாமலிருந்தால், இப்போது வெளி வந்து கொண்டிருக்கும் கவிதையின் உருவம் எப்படி மாறிப் போயிருக்குமென்று தெரியாது. அதனால் சி சு செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய இதழாக உள்ளது. .இது சி சு செல்லப்பா அறியாமலேயே நடந்த ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.
சி சு செல்லப்பாதான் வெகு ஜன இதழ்களுக்கும் சிறு பத்தரிகைக்கும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார். இப்போது அது உடைந்து போய்விட்டது.
இன்றைய நிலையோ வேறு மாதிரி. ஒரு வெகுஜனப் பத்திரிகையே சிறு பத்திரிகையை எடுத்து நடத்துகிறது. மணிக்கொடி இதழ் சிறுகதைகளுக்காகவே ஒரு காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று சிறுகதைகளே தேவை இல்லை. பத்திரிகைகளின் தன்மைகளும் மாறி விட்டன. மருத்துவத்திற்காக ஒரு இதழ். வணிகத்திற்காக ஒரு இதழ் சினிமாவிற்ùக்னறு ஒரு இதழ் என்று பல பிரிவுகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளி வருகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் சி சு செல்லப்பாவால் எங்கே பொருந்தி நிற்க முடியும். எழுத்து மாதிரி ஒரு பத்திரிகையை எடுத்து நடத்த முடியுமா வெற்றிகரமாக? சந்தேகம்தான். வாசகர்களைத் தேடி நாம்தான் ஓடிப்போகவேண்டும்.
தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. அவருடைய புதல்வருடன் பங்களூரில் இருந்தால், இதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் அவர் தனியாக வந்துவிட்டார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில், பல பதிப்பாளர்களிடம் 1000 பக்கங்களுக்கு மேல் எழுதிய =சுதந்திர தாகம்+ என்ற நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் அப்புத்தகத்தைக் கொண்டு வர துணியவில்லை.
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம். அப்புத்தகம் 1000 பக்கங்களுக்கு மேல் என்பதோடல்லாமல், அப்புத்தகம் விற்பனை ஆகுமா என்றெல்லாம் பதிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
சி சு செல்லப்பா எழுத்து பிரசுரமாக தானாகவே அப் புத்தகத்தைக் கொண்டு வரலாமென்று முடிவெடுத்தார். 84 வயதில் சி சு செல்லப்பாவின் துணிச்சலான முடிவு இது. இந்தக் கட்டத்தில் நானும் சி சு செல்லப்பாவிற்கு புத்தகம் கொண்டு வர உதவி செய்தேன். மணி ஆப்செட்காரர் சி சு செல்லப்பா வீட்டிற்கே வந்திருந்து உதவி செய்தார். தைரியமாக 1000 பிரதிகள் அச்சடித்து பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என கொண்டு வந்தார். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு புத்தகம் கொண்டு வர உதவினார்கள்.
அவர் மீது உள்ள மரியாதைக் காரணமாக பல பத்திரிகைகள் அப் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் செய்தன. இந்தியா டுடே என்ற பத்திரிகை அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்தது.
புத்தகம் கேட்டு கடிதம் எழுதுபவர்களிடம் தானாகவே கவரில் புத்தகக் கட்டை வைத்து தபாலில் அனுப்பி விடுவார். வீடு முழுவதும் பரண் மீது அப்புத்தகக் கட்டு நிரம்பி வழிந்தது. அவர் வீட்டில் அப் புத்தகக் கட்டைப் பார்க்கும் கதி கலங்கும்.
ஒரு இலக்கிய விமர்சகர் என்னிடம் =பாருங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அப்புத்தகம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வந்து விடப் போகிறது,+ என்று குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அது பொய்த்து விட்டது. 3 பாகங்கள் கொண்ட அப்புத்தகம் விலை ரூ.450. அதை ரூ.100 கிடைக்கும்படி செய்தேன். எல்லாம் சி சு செல்லப்பாவின் மறைவுக்குப்பின். இன்று அப் புத்தகப் பிரதி இல்லை. க.நா.சுப்பிரமணியம் கூட அவர் காலத்தில் ஒரு நாவலை அடித்துவிட்டு பரணில் வைத்திருந்தார். அந் நாவல் விற்கவில்லை என்றவுடன், அவர் மாமனாரிடம் சொல்லி அப் புத்தகத்தை அப்படியே பேப்பர் கடையில் போடச் சொல்லிவிட்டாராம்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் சி சு செல்லப்பாவைப் போய்ப் பார்க்காமல் இருக்க மாட்டேன். என் அலுவலகம் கடற்கரை சாலையில் இருந்ததால் அவரைப் போய்ப் பார்ப்பது சுலபமாகவும் இருந்தது.
அவரை அழைத்துக் கொண்டு போய் நூல் நிலையத்தில் புத்தகம் வாங்குவதற்கான படிவத்தைக் கொடுத்து பதிவு செய்தோம். ஆனால் அதற்கு நூல் வாங்குவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை. சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம். வருத்தம். இருந்தாலும் அவருக்குப் புத்தகம் போடும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்குச் செல்லும்போது, =எழுத்தைப் பற்றி விமர்சனம் செய்த வெங்கட் சாமிநாதனுக்கு, பிரமிளுக்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன் என்று அவர் எழுதிய பக்கங்களையெல்லாம் காட்டுவார். இன்னொன்றும் சொல்வார். இதெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று. எனக்கு கேட்கவே பக்கென்று இருக்கும்.
அவரும் அவர் மனைவியும் அந்தத் தள்ளாத வயதில் தனியாக இருந்ததை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. சி சு செல்லப்பாவிற்கு பேன் போடக்கூடாது. ஆனால் அவர் மனைவிக்கு பேன் வேண்டும்.
சி சு செல்லப்பா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பார்.
ஒருமுறை இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் சில இலக்கிய அபிமானிகள். அவரை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வந்தார். நானும் டூ வீலரில் பின்னால் வந்து கொண்டிருந்தேன்.
கூட்டம் நடக்குமிடத்திற்கு யாரும் வரவில்லை.
சி சு செல்லப்பா, கூட்டம் ஏற்பாடு செய்த இருவர், திருப்பூர் கிருஷ்ணன், நான் பின் வண்டி ஓட்டுநர் என்று ஐந்து பேர்கள்தான் இருந்தோம். கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. எதிரில் அமர்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார். நான் விருட்சம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறேன். அந்த விருட்சம் பட்டுப்போய் நாசமாய்ப் போகட்டும் என்று திட்ட ஆரம்பித்து விட்டார். கேட்பதற்கு எனக்க என்னவோபோல் ஆகிவிட்டது. அடுத்தநாள் எனக்கு அவரிடமிருந்து போன். ‘நான் ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,’ என்று. இதுதான் செல்லப்பா.
லண்டனிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையை விமர்சனத்திற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் அவர் எழுத்து பத்திரிகையைக் கொண்டு வந்ததாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுருக்கிறார்.
மௌனி, க.நா.சு படைப்புகள் எல்லாம் சி சு செல்லப்பாவிற்குப் பிடிக்காது. மௌனி கதைகள் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார். மௌனி கதைப்புத்தகத்தில் ஒரே ஒரு கதைதான் நன்றாக இருக்குமென்று கூறுவார். பி எஸ் ராமையா அவருடைய குரு. எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்திருக்கிறது என்று குறிப்புகள் எழுதி ராமையாவைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து விட்டார். சுதந்திர தாகம் என்ற புத்தகத்திற்குப் பிறகு. அப் புத்தகம் பேர். ராமையாவின் சிறுகதைப் பாணி. ராமையாவின் கதைகளே இல்லாதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற விமர்சனம் புத்தகம் யார் படிப்பார்கள்.
எழுத்து பத்திரிகையில் முக்கியமான விமர்சகர் பிரமிள். அவர் படுத்தப் படுக்கையாக மருத்துவமனையில் கிடந்தபோது விளக்கு பரிசைக் கொடுக்க மருத்துவமனைக்கு சி சு செல்லப்பா வந்திருக்கிறார். அந்தக் காலத்தில் எழுத்துவில் புதிய படைப்பாளிகள் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறார். ஆனால் ஏன் ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்தில் பிரசுரம் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும். கனகசபாபதி, ந. முத்துசாமி, சச்சிதானந்தம், எஸ் வைதீஸ்வரன் போன்ற பல படைப்பாளிகள் எழுத்து மூலமாகத்தான் உருவானவர்கள்.
சி சு செல்லப்பாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எதாவது சுவாரசியமாகப் பேசுவார். ஒரு முறை க.நா.சுவைப் பற்றி ஒன்றை குறிப்பிட்டார். சி சு செல்லப்பாவின் சிபாரிசில் க.நா.சு தங்குவதற்கு ஒரு இடம் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தாராம். அந்த வீட்டின் சொந்தக்காரர் சி சு செல்லப்பாவிற்காக அந்த இடத்தைக் கொடுத்தார். ஒரு முறை வீடை வந்து பார்க்கும்போது, வீடு திறந்து இருந்ததாம். வீட்டில் ஒன்றுமில்லையாம். வீட்டில் குடியிருந்த க.நா.சு வும் அவர் குடும்பத்தையும் காணவில்லையாம். சில மாதங்களாக வாடகைக் கொடுக்காமல் க.நா.சு வீடை காலி செய்துகொண்டு சொல்லாமல் போய்விட்டாராம். இதை சி சு செல்லப்பா க.நா.சுவை திட்டியபடி கோபமாக சொல்வார். இதைக் கேட்டு எனக்கு க.நா.சு மீதுதான் இரக்க உணர்ச்சி ஏற்படும். எந்த நிலையில் ஒருவர் அப்படி ஒரு முடிவை எடுத்துப் போயிருக்க முடியும் என்று.
சி சு செல்லப்பா மரணம் அடையும் தருவாயில்தான் கேரளாவில் தகழி சிவசங்கரம் பிள்ளை என்ற படைப்பாளியும் மரணம் அடையும் நிலையில் இருந்தார். ஆனால் அங்குள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு தகழியைப் போய்ப் பார்த்துவிட்டுப் போவார்களாம். ஏன் கேரளாவின் முதலமைச்சரே அவரைப் போய்ப் பார்த்து நலம் விஜாரிப்பாராம்.
தகழி என்ற படைப்பாளிக்கு சமமான சி சு செல்லப்பாவிற்கு எதுவும் நடக்க வில்லை. சி சு செல்லப்பா தகழி என்ற படைப்பாளியைவிட மேலானவர். பல படைப்பாளிகளை எழுத்து மூலம் உருவாக்கியவர். கவிதைக்கும், விமர்சனத்திற்கும் தமிழில் புதிய பாதையை வகுத்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுத்திற்காக அர்பணித்தவர். அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையைக் நாம் கொடுக்க தவறி விட்டோம் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
(19.01.2013 அன்று சாகித்திய அக்காதெமி ஏற்பாடு செய்த சி சு செல்லப்பாவின் 100வது ஆண்டு குறித்து எழுதி வாசித்தக் கட்டுரை)