மரணத்தின் தொலைவில் இருப்பவள்

குமரி எஸ்.நீலகண்டன்

 

மரணப் படுக்கையில்

வயதான பெண்மணி…

 

பறந்து பறந்து

சேவை செய்த அவளின்

இறக்கைகளெல்லாம்

ஒடுங்கிக் கிடக்கின்றன.

 

சுற்றி இருப்பவர்களெல்லாம்

எமன் வந்து விட்டானா

எமன் வந்து

விடுவானோயென

எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்.

அவள் யாரையும்

பார்க்கவில்லை..

பழுத்த அவளின்

கண்களுக்கு

எல்லாம் வெறும்

மண்ணாகத் தெரிகின்றன.

 

அவள் இறக்கைகள்

அவ்வப்போது இப்படித்தான்

தளர்ந்து

அவளை மரணத்தின்

வாசல் வரை

தளர்வாய் நடக்க வைக்கும்.

 

மரணம் நெருங்குகையில்

ஈரத்தில் தோய்ந்த

ஈயின் இறக்கையில்

சாம்பலைத் தூவியதுபோல்

அவளது இறக்கைகள்

சிலிர்த்து தனது

சிறகினை விரிக்கும்…

 

அவள் அடுத்த தடவை

இப்படி மரணத்தின்

வாசலை பார்ப்பது வரை

பறந்து கொண்டே இருப்பாள்.

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன