அடையாளம்
தனக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வரை அந்தப் பெயரால்தானே எல்லோரும் அவனை அழைத்தார்கள்? இப்போது யாருமே அந்தப் பெயரால் அவனைக் கூப்பிடுவதில்லை. ‘உம் பேரு என்ன’, கேட்பதுமில்லை. பாழாய்ப் போன அந்த விபத்தில் ஏற்பட்ட ஊனத்தையும், ஏழ்மைக் கோலத்தையுமே அல்லவா உலகம் அவனுக்கான அடையாளமாக்கி விட்டது!
“மூர்த்தி.”
மெல்ல முணுமுணுத்தான். அவன் பெயர் அவனுக்கே அந்நியமாகத் தோன்றியது. யார் பெயரோ போல, அந்த பெயருக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமேயில்லாதது போல ஒலித்தது. அம்மா சின்ன வயதில் தன்னை எப்படி அழைப்பாள் என்பது நினைவுக்கு வரக் கண்ணீர் துளிர்த்தது.
“மூர்த்தீதீஈஈஈ….”
கடைசி எழுத்தை நீட்டி முழக்கி அம்மா முடிக்கும் போது அவளது அன்பும் சேர்ந்தே வெளிப்படும். சின்னதாக அவன் விரலில் ஒரு காயம் பட்டாலும் எப்படித் துடித்துப் போய் விடுவாள். குனிந்து ஊனமான தன் இடது காலைப் பார்த்தான். இந்தக் கதியில் தான் இருப்பதைக் காண நேர்ந்தால் தாங்கியிருப்பாளா? நினைக்கையில் நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.
இப்போது அவனுக்கென்று யாருமில்லை. எவரும் அவனிடம் பேசுவது கூட இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், யார் பெயர் சொல்லி அழைக்கப் போகிறார்கள்? எதையேனும் தெரிவிக்க நினைப்பவர்கள் கூட அலட்சியமாக “ஏய்”, “இந்தா…” என்றே அவன் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்புவது வாடிக்கையாகி விட்டது. தங்களுக்குள் ‘பிச்சைக்காரப் பய, நொண்டிப் பய’ என்றும், சிலர் கொஞ்சம் கெளரவமாய் ‘பய’ போடாமல் ‘நொண்டிப் பிச்சைக்காரன்’ என்றும் தன்னைக் குறிப்பிட்டுப் பேசுவது இவன் காதில் விழாமல் இல்லை.
கூட அமர்ந்து இவன் போலவேக் கையேந்திப் பிழைத்தவர்களும் கூட இவனிடம் அனுசரணையாய் நடப்பதில்லை. இவனது ஊனம் அதிக கருணையை வருவோர் போவோரிடம் பெற்றுத் தருகிறதென ஒருவித வெறுப்பையேக் காட்டி வந்தார்கள். ஒரேடியாக விரட்டி அடிக்காவிட்டாலும் தங்களில் ஒருவனாக ஏற்கவேயில்லை. ‘தள்ளி உக்காரு’ ‘அங்க போ’ ‘இங்க போ’ எனக் கட்டளையிட வேண்டியிருந்த கட்டாயத் தருணங்களில் கூட முகத்துக்கு நேரே கை நீட்டியோ, விரல்களைச் சொடுக்கியோ சொல்வார்களே தவிர அவன் பெயர் என்ன என்பதை அறிந்து கொள்ள எவருமே விருப்பம் காட்டியிருக்கவில்லை. நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது.
இப்படிப் பெயரில்லாமல் காலம் தள்ளி வருவது ஒரு குறையாகவே பட்டதில்லை, நேற்று வரையில். முன் தினம் மாலை ஆறு மணி இருக்கும். கோவிலுக்கு இளம் ப்ரெளன் நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மூன்றடி உயரத்திலிருந்த உயர்சாதி நாயைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள் அந்தப் பணக்காரப் பெண்மணி.
வாசலிலேயே தடுத்து விட்டார் காவலாளி, நாய்களுக்கு அனுமதியில்லையென. முகம் சிவக்க ஏதேதோ சொல்லிப் பார்த்தாள். காவலாளி மசியவில்லை.
“பேசாம அந்தக் கம்பத்துல கட்டிவிட்டுட்டுப் போய்க் கும்பிட்டுட்டு வாங்கம்மா. சும்மாப் பேசி எங்க நேரத்தையும் வீணடிக்காதீங்க” என்றார் உள்ளேயிருந்த வெளிப்பட்ட, கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த பெரிய மனிதர்.
சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட்டவளின் முகத்தில் அப்பிக் கிடந்த அப்பட்டமான அருவெறுப்பு ‘எப்படி இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்துக்கு மத்தியில் என் பிரிய நாயை விட்டுச் செல்ல முடியும்’எனச் சொல்லாமல் சொன்னது. அவள் வளர்த்த நாயும் அவளைப் போலவே. ஏதோ தேவலோகத்திலிருந்து வந்த மாதிரி மிதப்பாக இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
“ஜிம்மி டார்லிங். ப்ளீஸ். நா உள்ளே போயிட்டு வர்ற வரைக்கும் வெயிட் பண்றயாடா” நாயிடம் கொஞ்சிக் கெஞ்சியவள், அருகிலிருந்த பூக்கடைக்கு அதை அழைத்துச் சென்றாள். பத்தே நிமிடங்களில் வந்து விடுவதாகவும் அதுவரை பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லியபடியே சில நோட்டுத் தாள்களை எடுத்து தோரணையுடன் நீட்டினாள், நிச்சயம் மறுக்க மாட்டான் என்கிற நம்பிக்கையுடன். கண்கள் மினுங்க வாங்கிக் கொண்டு தலையசைத்தான் பூக்காரன். போனால் போகிறதென ஜிம்மியும் பெரிய மனது வைத்துத் தலையசைத்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த மூர்த்திக்கு முதலில் எழுந்த கேள்வி ‘நா உள்ள போக நினைச்சாலும் இப்படித்தான் தடுப்பாங்களோ’ என்பதுதான். அதுநாள் வரை முயன்றதில்லை. அப்படியே முயன்றாலும் பஞ்சடைந்த தலையும், கந்தல் உடையுமாய்க் காட்சி தந்த தன்னை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது ஆனால் வருத்தமாக இல்லை. ‘எதுக்கு உள்ள போகணும்? அவருக்கு தெரிஞ்சதையே அவருட்ட சொல்லுறதுக்கா?’என்றே நினைத்தான்.
ஓடிய சிந்தனையைக் கலைத்தது ஜிம்மியின் குலைப்பு. திரும்பிப் பார்த்தான். பூக்கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரைப் பார்த்துப் பயங்கரமாகக் குலைத்துக் கொண்டிருந்தது.
“ஜிம்மி…” என்றார் அழுத்தமாக, ஒரே ஒரு முறை கடைக்காரார்.
அவ்வளவுதான். கப்சிப் என்றாகி விட்டது ஜிம்மி.
பெயர் சொல்லி அழைக்கப்பட்டதில் தன்னைச் சுற்றித் தன்னை அறிந்தவர்கள் இருக்கிறார்கள் எனப் பாதுகாப்பாய் உணர்ந்திருக்க வேண்டும் ஜிம்மி என்று தோன்றியது மூர்த்திக்கு.
அப்படி எண்ணிய நொடியில்தான் தன் பெயர் திடீரென நினைவுக்கு வந்து விட்டது அவனுக்கு. அப்போதிலிருந்து மருக ஆரம்பித்து விட்டிருந்தான். தன்னோடு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களில் தொடங்கி வாடிக்கையாக இவனுக்குத் தானம் செய்யும் மனிதர் வரை ஒருவர் கூடத் தன் பெயரை இதுகாலமும் தெரிந்து கொள்ள முயலவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அழுகையும் வந்தது.
பொதுவாகக் கோவில் வாசலில் யாசிப்பவர்களுக்கு நல்ல வருமானம்தான். பண்டிகை காலமாக இருந்ததால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவனுக்குக் கிடைத்தத் திருப்திக்கு வருமானம் மட்டுமே காரணமென்று சொல்ல முடியாது. மூன்று வேளையும் கிடைத்த நல்ல சாப்பாடும்தான். சும்மா உட்கார்ந்து சம்பாதித்தாலும் சாப்பாடு சும்மா கிடைத்து விடவில்லை. பணம் கொடுத்துதான் வாங்குகிறான். இருந்தாலும் ஒரு இழிவான நிலையில் நின்றே அந்தச் சாப்பாட்டைப் பெற வேண்டியிருந்தது. செய்கிற தொழில் இழிவானதாகக் கருதப்படுகையில் ராஜ மரியாதையையா எதிர் பார்க்க முடியும்? எதிர்பார்க்கவில்லை அவனும்.
அந்த விடுதியின் முதலாளி கண்டிப்பானவர். உள்ளே செல்ல மட்டுமல்ல, அதன் வாசல் பக்கம் கூட இவர்களின் தலை தென்படக் கூடாது. “பிச்சக் காரனுங்க சாப்பிடுற ஓட்டல்னு பேர் வந்தா வியாபாரம் வெளங்குன மாதிரிதான்” என ஆட்களை விட்டு விரட்டியடிப்பார். ஒழுங்கு மரியாதையாகப் பின்வாசலில் போய்க் காத்திருக்க வேண்டும். பிரச்சனை பண்ணாமல் அதைப் பின்பற்றியவர் நல்லபடியாகக் கவனிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நேரமும் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு ஒரே தடவையாகச் சாப்பாடு வெளியே அனுப்பப்படும். அவரவர் பாத்திரங்களில்தான் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் எப்போதும் சாப்பாடு சூடாகவும், சுவையாகவுமே இருந்தது. மற்றவரிடம் வசூலிக்கும் கட்டணத்தையே இவர்களிடமும் வசூலித்த முதலாளி அதே தரமும் அதே அளவும் இவர்களுக்குக் கிடைக்கிறபடி நியாயமாக நடந்து கொண்டார். அலட்சியமாகக் கருதி ஒருநாளும் ஏமாற்றியதில்லை.
ஒரு சாண் வயிற்றுக்கு முன் உலகில் எதுவுமே முக்கியமில்லை எனத் தோன்றிப் போனதும் அந்த விடுதியில் சாப்பிட ஆரம்பித்த நாளில்தான். தாங்கு கட்டையோடு அவன் நின்ற கோலத்தைப் பார்த்தே ‘வேலையில்லை வேலையில்லை’ என உலகம் விரட்டியடித்தபோது, பசியால் அரை மயக்கத்தில் சுருண்டு விழுந்து விட்டவனைச் சுற்றித் தங்கள் கருணையை சில்லறைகளாக வீசிச் சென்றிருந்தனர் சிலர். தயக்கத்தோடு அள்ளிக் கொண்டு தள்ளாடியபடியே அங்கு வந்தவன், சாப்பிட்டு முடித்தபோது சில்லறைகளைப் பொறுக்கிய குற்ற உணர்வு விலகி யாசக வாழ்வை ஏற்றுக் கொள்ள முழு மனதாகத் தீர்மானித்து விட்டிருந்தான். அன்றிலிருந்து தொடருகிறது கோவில் வாசலில் தொழிலும், கிடைக்கிற பணத்தில் இங்கு வந்து சாப்பிடுகிற வழக்கமும்.
காலை, மதிய வேளைகளை விட இரவு உணவை நிதானமாக ருசித்து அனுபவித்துச் சாப்பிடுவான். அடுத்து தொழிலுக்குப் போக வேண்டும் என்கிற பரபரப்பு இருக்காது. சாப்பிட்டு முடிக்கிற போது ஒரு பாதுகாப்பான வாழ்வு தனக்கு வாய்த்திருப்பதாகவே எண்ணி வந்திருக்கிறான் இதுநாள் வரையில். பல நாட்கள் மகிழ்ச்சியாகக் கூட உணர்ந்திருக்கிறான்.
ஆனால் நேற்றிலிருந்து அப்படியில்லை. பரம திருப்தியாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் பெரிய தடுமாற்றம். பெயரில்லாத வாழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஜிம்மியை எண்ணிப் பொறாமையாக இருந்தது. ‘ஒருவேளை ஜிம்மியும் என்னப் போல ஆக்சிடண்டுல மாட்டி அதுக்கும் ஒரு கால் ஊனமானா உலகம் என்ன செஞ்சிருக்கும்? ஜிம்மின்னு கூப்புடறத நிறுத்திடுமா? நொண்டிநாய், உன்னால இனி ஒரு பிரயோசனமும் இல்ல, பிச்சயெடுக்கதான் லாயக்குன்னு அனுப்பிடுமா?’ எழுந்த கேள்விகளுக்கு ‘அநேகமா அப்படி செய்யாது’ என்றே மனதுக்குப்பட, தன்னிரக்கம் சுரந்தது.
அடுத்த கணம் ‘சே, நமக்கேன் இந்த ஈனப்புத்தி? எதுக்கு ஜிம்மிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகணும்? நல்லாருந்துட்டுப் போட்டும். பேரில்லாத கேவலமான பொழப்பா எம் பொழப்பு ஆனதுக்கு, பாவம் அது என்ன செய்யும்?’ நினைத்தபடியே, கோவில் தெருவின் மூன்றாவது விளக்குக் கம்பத்தை வந்தடைந்தான்.
வழக்கமாகப் படுக்கிற இடம். நடைபாதையானாலும் இரவு தலை சாய்க்க இன்னார்க்கு இந்த இடமென பதியப்படாத பட்டா போட்டுக் கொண்டிருந்தார்கள்.
தாங்கு கட்டையை ஓரமாக வைத்து விட்டு, துண்டை விரித்துப் படுக்கப் போனவனைத் தூக்கம் கலைந்து தலையைத் தூக்கிப் பார்த்தது ‘ஓ.. நீயா’ என்பது போல், தினம் அதே கம்பத்தின் கீழ் நாலடி தள்ளிச் சாலையோரம் உறங்குகிற நாய்.
உற்று ஓர் நொடி அதைப் பார்த்தவன் “எம் பேரு மூர்த்தி” என்றான்.
***
-ராமலக்ஷ்மி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன