க.நா.சு யார்?

அழகியசிங்கர்
சமீபத்தில் க.நா.சுவிற்கு ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது.  அவரது நூற்றாண்டை ஒட்டி இக்கூட்டம் நடந்தது. நடத்தியது சாகித்திய அகாதெமி என்ற அமைப்பு. அதில் பேசியவர்களில் ஒருசிலரைத் தவிர பலர் க.நா.சு யார் என்று கேட்பவர்கள்.  சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அக்கூட்டத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன்.  கட்டுரையின் தலைப்பு க.நா.சு யார் என்பதுதான்.  க.நாசு மட்டுமல்ல, இன்னும்கூட பல எழுத்தாளர்களை நாம் யார் என்றுதான் கேட்போம்.  மெளனி யார்?  புதுமைப்பித்தன் யார்?  சி சு செல்லப்பா யார்? ந.பிச்சமூர்த்தி யார்?  என்று பல யார்களை வைத்திருப்போம்.  தமிழர்களிடையே இதுமாதிரியான அவலமான நிலைக்கு ஏற்பட்டுள்ளது.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமது கேரளா அல்லது மேற்கு வங்காளம் சேர்ந்த மக்கள் எல்லாம் ஓரளவு அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய அறிவை தக்க வைத்திருக்கிறார்கள்.
சிசு செல்லப்பா மரணம் அடையும் தறுவாயில் அவரைச் சுற்றி அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கும் முதலமைச்சர் வந்துகூடப் பார்க்கவில்லை.  ஆனால் அதே தருணத்தில் கேரளாவில் தகழி சிவசங்கரம்பிள்ளை மரணம் அடையும் தருணத்தில் பொது மக்களுடன் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் சென்று பார்த்துள்ளார்.  அவருடைய உடல்நிலையைக் குறித்து செய்தியை அறிந்து கொண்டிருக்கிறார்.
க.நா.சு இருந்தபோதும் அவர் இறந்த பின்பும் அவர் யார் என்ற கேள்விக்கு பலரிடம் பதில் இல்லை.  அவர் என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய ஆளுமை என்ன என்ற விபரம் யாருக்கும் தெரியாது.  க.நா.சுவிற்கு நெருங்கிய நண்பர்கள் சென்னையில் உண்டு.  அவர்  டில்லியில் இருந்து சென்னைக்கு வரும்போது, சென்னையில்  தன் வீட்டில் தங்க வைத்துக்கொண்டு அவரைப் பாதுகாத்தவர் ஐராவதம் என்ற எழுத்தாளர்.  ஆனால் இன்று க.நா.சுவை மட்டுமல்ல இந்த ஐராவதம் யார் என்று கேட்பவர்கள்தான் அதிகம்.  ஐராவதம் க.நா.சுவை தன்னுடைய தந்தையைப் போல் பாதுகாத்தார்  சென்னையில்.  ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?  அவர் க.நா.சு என்ற மகத்தான எழுத்தாளருக்குக் கொடுத்த மரியாதை நிமித்தம் அவ்வாறு செய்தார்.  
புத்தகம் எழுதுவது படிப்பது தவிர வேற சிந்தனையே இல்லை இந்த க.நா.சுவிற்கு.  ஒரு முறை ஒரு நாவல் எழுதி அச்சில் புத்தகமாகக் கொண்டு வந்தார்.  அத்தனைப் புத்தகப் பிரதிகளும் விற்கவில்லை.  க.நா.சு அந்தப் புத்தகக் கட்டை  அவருடைய மாமனார் வீட்டில் வைத்திருந்தார்.  பரணில் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் புத்தகக் கட்டை என்ன செய்வது என்று அவருடைய மாமனார் கேட்க, பழைய பேப்பர் கடையில் போடுங்கள் என்று சொன்னவர். க.நா.சு.  
க.நா.சுவின் சீடர் நகுலன் என்பவர்.  க.நா.சுவையாவது யார் என்று கேட்பார்கள்.  இவரைப் பற்றி கேள்விப்பட்டால் யார் யார் என்று பலமுறை கேட்பார்கள்.  அந்த நகுலன் வேடிக்கையாக சொல்லும் விஷயம்.  மொத்தம் 60 பிரதிகள் புத்தகம் அச்சிட்டால் போதும்.  அதை நமக்குத் தெரிந்த 60 பேரிடம் கொடுத்துவிட்டால் போதும் என்று.
க.நா.சு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்.  இப்போது அவர் இருந்திருந்தால் இந்த விலைவாசியில் அவரால் எளிமையாக வாழ முடியுமா?  க.நா.சு யார் என்று கேட்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *