எதையாவது சொல்லட்டுமா….75
அழகியசிங்கர்
போன மாதம் ஒரு நாள் திருநாவுக்கரசிடமிருந்து போன் வந்தது. அந்த மாதம் இறுதியில் அவர் பணியிலிருந்து மூப்பு அடைகிறார். அதை ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவதற்காகவே விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னை அழைத்தார். என்னைப்போல் வங்கியில் பணிபுரியும் நண்பர் திருநாவுக்கரசு. அந்த விழாவில் கவிதை வாசிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 36 ஆண்டுகள் வங்கித் தொழிலில் இருந்து பணி மூப்பு அடைகிறார். ஒருவர் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் ஓய்வு பெறுகிறார் என்றால் நிச்சயமாக வங்கித் தொழிலில் கொண்டாட வேண்டிய விஷயம்தான்.
பணிமூப்புக்காக விழா நடத்துவது என்பது புதிய முறை. சிலர் போஸ்டர் ஒட்டி கூட விழா நடத்துகிறார்கள். இந்த விழா நடத்துவதன் முக்கிய நோக்கம் என்ன? அவருடன் பழகிய பல நண்பர்களைச் சந்திப்பது. அப்படி சந்திப்பின் நிகழ்ச்சியின்போது நண்பரைப் பற்றி நாலு வார்த்தைகள் வருபவர்கள் பேச வேண்டுமென்று அவர் நினைத்திருக்கலாம். கமகமவென்று சாப்பிடும் மணத்துடன் அந்தப் பெரிய கூடம் வீற்றிருந்தது. திருநாவுக்கரசுடன் அந்தக் காலத்தில் வங்கிப் பணி புரிந்த பல நண்பர்கள் அங்கு வந்திருந்தார்கள். பலதரப்பட்ட யூனியன் தலைவர்களும் வந்திருந்தார்கள். அவர் மனைவி, அவருடைய மூன்றாவது பெண் என்று குடும்பத்துடன் திருநாவுக்கரசு வீற்றிருந்தார். திருநாவுக்கரசு ரொம்பவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் எதிர்பார்த்தபடி பல நண்பர்கள், பல ஆண்டுகளுக்கு முன் பழகிய அலுவலக நண்பர்கள் வந்திருந்தார்கள்.
திருநாவுக்கரசு, புகழ்பெற்ற சினிமா பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியன் அவர்களின் புதல்வர். அமுதைப் பொழியும் நிலவே என்ற புகழ்பெற்ற சினிமா வரியை எழுதியவர் கு மா பா. திருநாவுக்கரசும் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவருக்கும் சினிமா பாடலாசிரியராக வர வேண்டுமென்ற எண்ணம் உண்டு. ஆனால் அவர் வங்கியில் நுழைந்துவிட்டார். அவருக்கு கவிதை மீது உள்ள அபிமானத்தால் என்னையும் அவருடைய நிகழ்ச்சியில் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பொதுவாக இதுமாதிரி கவிதை எழுதுவது சரியாக வராது என்று எனக்குத் தோன்றும். பலர் திருமணத்தை ஒட்டி கவிதைகள் எழுதி அதை கண்ணாடிப் போட்டு, கொண்டுவந்து கொடுப்பார்கள். அப்படி வழங்கப்படும் வாழ்த்துக் கவிதைகளை யாரும் மதிப்பதில்லை. பல ஆண்டுகளுக்குமுன் நடந்த என் நண்பரின் திருமணத்தை ஒட்டி ஒருவர் இப்படித்தான் கவிதை ஒன்றை எழுதி கவனமாக கண்ணாடிச் சட்டத்திற்குள் கொண்டுவந்து நண்பரிடம் கொடுக்க முன் வந்தார். நண்பர் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அவருடைய பின்பக்கத்தைத்தான் அதை வழங்க முன் வந்தவர் பார்க்க நேர்ந்தது. நண்பருக்கும் எழுத்துக்கும் காத தூரம். கவிதை இன்னும் மோசம்.
இதுமாதிரி வாழ்த்துக் கவிதைகள் எழுதுவதை நான் விரும்புவதில்லை. எனக்கு வரவும் வராது. ஏன் யாருக்கும் வராது..ஒருவரை வாழ்த்துவது என்பது பொய். அந்தக் கூட்டத்திற்கு எப்படியும் போய் வர வேண்டுமென்று தீர்மானித்தேன். பொதுவாக என் வங்கிக் கிளையிலிருந்து எப்போதும் இரவு ஏழு மணிக்குக் கிளம்பி எட்டு மணிக்கு போய்ச் சேர்வேன். அன்று கூட்டத்திற்கு மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டேன். திருநாவுக்கரசு கேட்டாரே என்று ஒரு கவிதை எழுத வேண்டுமென்று உட்கார்ந்தேன். கடந்த சில மாதங்களாக என் மூளை கவிதை எழுதுவது கதை எழுதுவது என்றெல்லாம் போகவில்லை. காலையில் அலுவலகம் வந்தால் இரவு வீடு வரும்போது சோர்ந்து விடுகிறேன். கவிதையை மளமளவென்று எழுத ஆரம்பித்தேன். வாழ்த்துக் கவிதையாக இருந்தால் திருநாவுக்கரசுக்கு மட்டும்தான் போய்ச் சேரும். பொதுவாக இருந்தால், மற்றவர்களும் படிக்க வாய்ப்புண்டு. என்னை அறியாமல் ஒரு கவிதை வந்துவிட்டது.
அலுவலகத்தில் ஒரு காகிதத்தை எடுத்து பாதியாகக் கிழித்து எழுத ஆரம்பித்த கவிதை இது.
நண்பர் திருநாவுக்கரசு
பதவி மூப்படையும் நாள்
நெருங்கிவிட்டதென்று
அறிந்தபோது
எனக்கும் இன்னும் இன்னும்
20 மாதங்களென்று தோன்றியது
தெளிவாய்
பரபரப்பு இல்லாமல்
வீட்டிலமர்ந்து குடும்பத்தினருடன்
குதூகலிக்கும் நாள் வந்துவிட்டது
36 ஆண்டுகளாக நம்மைப் பிடித்துக்
கொண்டிருந்த உறவு
நச்சாக மாறுமுன்
கழன்று கொண்டாகிவிட்டது
மெதுவாக
எத்தனையோ நண்பர்களை
சந்தித்தாகிவிட்டது
இனிமையான அனுபவங்களைப்
பகிர்ந்து கொண்டாகிவிட்டது
வெட்டவெளியில் காற்று
சுகந்தமாய் வீசுகிறது
இனி என்ன
என்றபோது
எதுவாகி வேண்டுமானாலும்
இருக்கலாமென்று தோன்றுகிறது
காலையில் மெதுவாய் தூங்கி
விருப்பம்போல் எழுந்துகொள்ளலாம்
கண்ணை மூடி தியானம்
செய்யலாம்
பக்கத்திலுள்ள பூங்காவில்
காலாற நடக்கலாம்
இஷ்டம்போல் விருப்பப்பட்டதை
உண்ணலாம்
பிடித்த உறவினர்களைப்
போய்ப் பார்க்கலாம்
மனைவி மகள்களுடன்
பாசம் கொள்ளலாம்
இந்த நாளிற்கு இத்தனை
ஆண்டுகள் காத்திருந்தேன்
என்கிறாரா திருநாவுக்கரசு….
எழுதிவிட்டேன். ஆனால் படிப்பதற்கு வெட்கமாக இருந்தது. திருநாவுக்கரசைப் பார்த்தபோது கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொல்லவில்லை. அவரும் கேட்கவில்லை. அவருடைய இன்னொரு நெருங்கிய நண்பர் கண்ணாடி சட்டத்தில் கவிதை எழுதியிருந்தார். பெருமையாக எல்லோரிடமும் காட்டிக்கொண்டிருந்தார். அது வழக்கமாக இந்திரன் சந்திரன் என்று எழுதும் வாழ்த்துக் கவிதை. வழக்கமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழிற்சங்க தலைவர்கள் தாமதமாக வந்தார்கள். திருநாவுக்கரசை ஆரம்ப காலத்திலிருந்து தெரிந்தவர்கள். திருநாவுக்கரசு நினைத்திருந்தால் தொழிற்சங்கத் தலைவராகக் கூட போயிருக்காலம். தொழிற்சங்கத் தலைவர்கள், அவருடைய இலக்கியப் பணி வங்கியில் இருந்ததால் மிளிராமல் போய்விட்டது. இனி அவர் இலக்கியப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டு புகழ் அடைய வேண்டுமென்று பாராட்டி பேசினார்கள். ஒரு தொழிற்சங்கத் தலைவர் எனக்கு அவருடைய இலக்கிய முயற்சியைப் பற்றி ஒன்றும் தெரியாது.
கூட்டம் இரவு ஏழு மணிக்குமேல்தான் ஆரம்பமானது. கூட்டத்திற்கு பெண்கள் அதிகமாக வந்திருந்தார்கள். தோழிகள் பலரும் அவருடன் பல வங்கிக் கிளைகளில் பணிபுரிந்தவர்கள். கூட்டம் இரவு 9 மணிக்குமேல் ஓடிக் கொண்டிருந்தது. திருநாவுக்கரசு 4 பக்கங்களுக்குமேல் தன்னைப் பற்றி சொல்ல எழுதி வைத்திருந்தார். அழகாக டைப் அடித்து வைத்திருந்தார். அதைப் படிக்கப் போகிறாரே என்று நானே பயந்துகொண்டுதான் இருந்தேன். என்னையும் கவிதை வாசிக்கக் கூப்பிட மாட்டார் என்று முழுக்க முழுக்க நம்பிக்கொண்டிருந்தேன். அவருடைய நெருங்கிய நண்பர் கண்ணாடிச் சட்டத்தில் அடைத்து வைத்திருந்த கவிதையை வாசித்தார். எனக்கு ஒரே நம்பிக்கை. என்னைக் கூப்பிட மாட்டாரென்று.
எதிர்பாராதவிதமாய் என்னையும் கூப்பிட்டு விட்டார். எனக்கு சற்று வெட்கமாக இருந்தது. நான் ஒரு ஜோல்னாப் பையை தோளில் மாட்டியபடி பேசச் சென்றேன். தொழிற்சங்கத் தலைவர்கள் பேசுவதுபோல் எனக்குப் பேச வரவில்லை. யாருக்கும் நன்றிகூட சொல்லவில்லை. எடுத்தவுடன் ஆரம்பித்தேன். “இந்த ஜோல்னாப் பையுடன் நான் ஏன் வந்தேன் தெரியுமா?…திருவல்லிக்கேணி கிளையின் சாவி இந்தப் பையில்தான் இருக்கிறது. இது பத்திரமாக இருக்க வேண்டுமென்றுதான் என்னுடன் இருக்கிறது..திருநாவுக்கரசிற்கு என் வாழ்த்துகள். அவரைக் குறித்து நான் அவசரம் அவசரமாக எழுதிய கவிதையை வாசிக்கிறேன்,” என்று ஒரு வழியாக கவிதையை வாசித்துவிட்டேன்.
அன்று கூட்டம் முடிந்து வீட்டிற்கு வரும்போது இரவு 11 மணிக்குமேல் ஆகிவிட்டது.
நான் பேசியதைக் கேட்டு திருநாவுக்கரசு என்ன நினைத்திருப்பார் என்று தோன்றியது. அடுத்தநாள் காலையில் திருநாவுக்கரசிடமிருந்து ஒரு மொபைலில் ஒரு செய்தி வந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று.
(ஆகஸ்ட் 2012 அம்ருதா இதழில் பிரசுரமாகி உள்ளது.)