Two poems

கவி

சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..

வீடு

சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்

வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .

தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன

கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல

எப்போதாவது தான்

பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன