இந்த முறை புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போதே வேண்டாம் என்று மனம் சொல்லியது. ஏன் என்ற காரணம் புரியவில்லை. மிகக் குறைந்த அளவில் புத்தகங்களைப் போட்டு வியாபாரம் செய்வது சரியில்லை. ஆனால் புத்தகங்களை வைத்துக்கொண்டு விற்கவும் வழியில்லை. ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் காண்பது, ஒன்றிரண்டு புத்தகங்களைப் போட்டு விற்பதற்கு எல்லோரும் அலை அலையென்று அலைவது. நானும் ஸ்டால் எடுக்காவிட்டால், அந்த நிலைக்குத் தள்ளப்படுவேன். என் புத்தகங்கள் ஒரு 30 தேறும். ஆனால் அது போதாது.
எப்போதும் விருட்சம் புத்தகங்கள் ரூ.10000 வரை விற்கும். இந்த முறை புதிய புத்தங்கள் போடாவிட்டாலும், 10000வரை விற்க முடிந்தது. ஆனால் அது போதாது. ஸ்டால் வாடகையே அள்ளிக்கொண்டு போய்விடும். பின் மற்றப் புத்தகங்களை விற்றுத்தான் மற்ற செலவுக்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு ஒழுங்கான கணக்கு இருந்தால், புத்தகக் காட்சியில் புத்தகங்களை நன்றாக விற்கலாம். இந்த முறை நல்ல இடத்தில் ஸ்டால் கிடைத்தும் ரூ.50000க்கு மேல் புத்தகங்களை விற்க முடியவில்லை. இந்த வருடம் எப்போதும் விட Low. இரண்டு முக்கியம விஷயங்களை கவனத்தில் கொண்டு வர வேண்டியுள்ளது. ஒன்று traffic. புத்தகங்களைக் கொண்டு வருவது, கடையைப் பார்த்துக்கொள்ள தக்க நபர்கள் வைத்துக்கொள்வது. எனக்கு பெரும்பாலும் நண்பர்கள் உதவி செய்வார்கள். அப்படி உதவி செய்யும் நண்பர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். இதற்கான செலவு, ஸ்டால் வாடகையைவிட கூடுதலாகப் போய்விடும்.
பல ஆண்டுகளாக நான் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த முறை வாங்கிய அடிபோல எப்போதும் வாங்கியதில்லை. ஒருமுறை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக்கும்போது, என் பெண்ணின் குடும்பம் விபத்தில் சிக்கி பரபரப்புக்கு ஆளானேன். அப்போதுகூட புத்தகம் அதிகமாக விற்றது. பெரிய பதிப்பாளர்களைத் தவிர என்னைப் போல இரண்டுகெட்டான் பதிப்பாளர்களுக்கு செம்ம உதை.
உண்மையில் லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் புத்தகக் காட்சி என்பது ஒரு அனுபவம் என்று நினைத்தால் அதற்கு எந்தக் குறைவும் இல்லை. பல நண்பர்களைச் சந்திக்கலாம். உறவினர்களைச் சந்திக்கலாம். எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கலம் என்று எல்லோரையும் சந்திக்கும் இடமாக புத்தகக் காட்சி தென்படுகிறது. பின் எழுதும் ஆர்வத்தையும், படிக்கும் ஆர்வத்தையும் அது தூண்டுகிறது.
புத்கக்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று தோன்றியது. நானும் சில நம்பிக்கைக்குரிய புத்தகங்களை வெளியிடுவது என்று தீர்மானித்திருக்கிறேன். உதாரணமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்ற ரீதியில் புத்கங்கள். பின் அரசியல் தலைவர்களைப் பற்றிய புத்தகங்கள். அம்பேத்கர் பற்றி புத்தகம் போட்டால் ஆயிரக்கணக்கில் புத்தகம் விற்கும். இப்படித்தான் புத்தகம் விற்கிறது. கவிதைப் புத்தகத்தை யாரும் தொட மாட்டார்கள். உடல் ஆரோக்கியம் பற்றி புத்தகங்களும் விற்கின்றன. டாக்டர் செல்வராஜ் எழுதிய சிறுகதைப் புத்தகங்களைவிட அவருடைய வியத்தகு சிறுநீரகங்கள் புத்தகம் அதிகம் விற்கிறது. வழக்கம்போல் சமையல் புத்தகம். இந்த முறை சாகித்திய அக்காடமி பரிசு வாங்கிய காவல் கோட்டம் என்கிற வெங்கடேசனின் புத்தகம் அதிகம் விற்றது.
புத்தகக் காட்சியில் புதுமைப்பித்தன் வழி, க.நா.சு அரங்கம் என்றெல்லாம் வைத்து திறமையாக கட்டமைத்திருந்தார்கள். மேலும் பல எழுத்தாளர்களைக் கூப்பிட்டு பேச வைத்தார்கள். வெளியே பெரிய அரங்கில் வேறு விதமான கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. உள்ளே க.நா.சு அரங்கில் வாசகர் எழுத்தாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பொதுவாக புத்தகக் காட்சியில் கூட்டம் குறைவு.
எப்படி இது தெரியுமென்றால் கான்டீன். நிதானமாக எல்லோரும் அமர்ந்தபடி சாப்பிட முடிந்தது. அங்கு தின்பண்டங்கள் விலை கட்டுக்கடங்காமல் இருந்தது. என்னைப் போன்ற இரண்டுகெட்டான் பதிப்பாளர்களுக்கு லாபம் இல்லை.
ஒரு புத்தகத்தை பதிப்பதற்கும் விற்பதற்கும் என்ன பாடுபட வேண்டி இருக்கிறது.