கூட்டல் கழித்தல்

 
பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து 
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும் 
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும் 
விடைகளையே 
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.
சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து 
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***
 

“கூட்டல் கழித்தல்” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. அன்பின் ராமலக்‌ஷ்மி – கூட்டல் கழித்தல் அருமை – கவிதை நன்று – பாவத்தைப் பற்றிய பார்வையே மாறி விட்டது = சக மனிதரிடன் அன்பு – பிற உயிரிடம் நேசம் – இயற்கையிடம் நன்றி மறந்த பூமியின் கடவுச் சொல் மறந்து போன காக்கும் கடவுள் – ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேறு வழியே இல்லை – நடப்பது நடக்கட்டும் என விட்டு விட வேண்டியது தான் . பொறுத்திருந்து பார்ப்போம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன